தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர் முறை தேவை – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர் முறை தேவை!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே. எனவே, இது முழுமையான மக்கள் மன்றமாக உள்ளது.
தற்போது, இந்திய மக்களவையில் (Lok Sabha) நியமன உறுப்பினர்கள் யாரும் இல்லை. 104-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2019-இன் மூலம், ஆங்கிலோ-இந்தியன் சமூகத்தினரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கும் முறை 2020 சனவரி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
மக்களவையில் நியமன உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும், மாநிலங்களவையில் (Rajya Sabha) கலை, இலக்கியம், அறிவியல், குமுகத் தொண்டு போன்ற துறைகளில் சிறந்த பன்னிருவரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கும் முறை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமேலவை 1921 முதல் செயற்பட்டு வந்தது. நவம்பர் 1, 1986-இல் அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் ம.கோ.இரா.(M.G.R.)வால் கலைக்கப்பட்டு, மேலவை முறை நீக்கப்பட்டது. எல்லா மாநிலங்களிலும மேலவை இருந்த நிலைமாறி, இப்பொழுது ஆந்திரப்பிரதேசம், பீகார், கருநாடகா, மகாராட்டிரம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில்மட்டும்தான் மேலவை உள்ளது.
மேலவையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது கீழவையில் உணர்ச்சிகரமாக எடுக்கப்படும் முடிவுகளை அமைதியாக ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க மேலவை துணை புரியும் என்பர். அரசியல் கட்சிகளின் உணர்ச்சிப்பூர்வமான முடிவுகள் அல்லது அவசரச் சட்டங்களுக்கு எதிராக, மேலவை ஒரு பாதுகாப்புத் திரையாகச் செயற்பட்டு, சட்டங்களை மறு ஆய்வு செய்ய வழிவகுக்கிறது. கீழவையில் அரசியல் காரணங்களுக்காக விவாதங்கள் தடைப்பட்டாலும், மேலவையில் ஆழமான, அரசியல் சார்பற்ற விவாதங்கள் நடத்த வழி வகுக்கப்படலாம்.
சூடான பானத்தைக் குவளையும் தட்டும் கொண்டு அருந்தும் பொழுது குவளையில் சூடாக இருக்கும் பானம் தட்டில் ஊற்றப்பட்டு குடிக்கும் பக்குவத்திற்குச் சூடு தணிந்த நிலையில் இருக்கும். இதுபோன்ற செயற்பாடுதான் மேலவையின் செயற்பாடு என்று அருமையாகப் பேரறிஞர் அண்ணா கூறுவார். அஃதாவது கீழவையைக் குவளை என்றும் மேலவையைத் தட்டு(Cup and saucer) என்றும் ஒப்பிட்டுக் குறிப்பார்.
ஆனால், அத்தகைய செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். தேர்தல் அரசியலை எதிர்நோக்க இயலாத அறிஞர்கள், வல்லுநர்கள், கல்வியாளர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், கலை, இலக்கியம், குமுகப்பணிகளில் சிறந்தவர்கள், தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல், மேலவை உறுப்பினர் (MLC) ஆகப் பங்கேற்கும் வாய்ப்பு நின்று விட்டது. என்றாலும் அவ்வப்பொழுது மேலவையை மீள அறிமுகப்படுத்துவது குறித்து விவாதங்கள் எழுவது வழக்கமாக உள்ளது.
மேலவைக்கான வாய்ப்பு இல்லாத நேர்வில் இத்தகையோருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சட்ட மன்ற உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் 234 உறுப்பினர்கள் உள்ள்னர். இதில் ஏறத்தாழ 10 விழுக்காட்டிற்கு ஒப்பாக 25 நியமன உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இதன் மூலமாக இத்தகையோர் சட்ட மன்றத்திற்குள் வந்து பங்களிக்க முடியும்.
மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படும் எனலாம். மாநிலங்களவைக்கு ஒன்றிய அரசு பரிந்துரைப்வர்களைத்தான் குடியரசுத் தலைவர் நியமிப்பார். இங்கு மாநில அரசின் பரிந்துரையை ஏற்காமல் ஒன்றிய அரசின் முகவராகச் செயற்படும் ஆளுநர் மாநில அரசின் பரிந்துரைகளைப் புறக்கணிக்கும் வாய்ப்பே மிகுதியாக உள்ளது. எனவே, நியமன உறுப்பினர் முறை அறிமுகப்படுத்தப்படும்பொழுது அதற்கான அதிகாரத்தை முதல்வருக்கு வழங்க வேண்டும்.
மாநிலத் தகவல் ஆணையரை எதிர்க்கட்சித்தலைவரை உறுப்பினராகக் கொண்ட முதல்வர் தலைமையிலான குழு முடிவு செய்து ஆளுநருக்குப் பரிந்துரைக்கும். அதுபோல் இங்கும் ஒரு குழுவை அமர்த்தலாம். ஆனால், முதல்வருக்கே நியமன அதிகாரம் அளிப்பின் சட்டப்பேரவை முன்னவர், எதிர்க்கட்சித்தலைவர், மாநில அமைச்சர் ஒருவர் அடங்கிய குழு முதல்வருக்குப் பரிந்துரைக்க வேண்டும். பரிந்துரைக்கப்படுபவர்கள் தமிழுணர்வும் தமிழ்நாட்டுணர்வும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஆதலின், சட்டப்பேரவையில் நியமன உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கான தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் நிறைவேற்றி உரியவாறு தொடர் நடவடிக்கை எடுத்து ஆவன செய்ய வேண்டும்.
ஆங்கிலோ இந்தியர் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை யெனில் அவர்களில் ஒருவரை நியமிக்கும் முறை தமிழ்நாட்டில் இருந்தது. ஆனால், இந்திய அரசியல் யாப்பின் 104 ஆவது திருத்தச் சட்டம் (2020) நடைமுறைக்கு வந்ததும் இந்தியா முழுவதும் இந்நியமன முறை நீக்கப்பட்டதால் தமிழ்நாட்டிலும் நீக்கப்பட்டது. ஆனால் அஃது இட ஒதுக்கீடு முறையில் மேற்கொள்ளப்பட்டது. எனவே, இந்நியமன முறைக்கு அரசியல் யாப்பில் திருத்தம் தேவையில்லை.
அறிவுரை கூறின் ஏற்கத்தக்கவராக மாண்புமிகு முதல்வர் ச.சோ.வி்சய் உள்ளமையால் அவரும் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் சா.கி்.தே.(J.C.D.) பிரபாகரும் விரைந்து நடவடிக்கை எடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.
வல்லுநர்கள் பங்களிப்பில் சட்டப்பேரசை மிளிரட்டும்!
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
(திருவள்ளுவர், திருக்குறள் ௪௱௪௰௧ – 441)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை சித்திரை 31, 2057 / 14.05.2026





Leave a Reply