சட்டச் சொற்கள் விளக்கம் 441-450 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 431-440 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 441-450
441 . accountancy கணக்கியல்
கணக்குப் பதிவியல்,
வணிகக்கணக்கியல் எனவும் குறிப்பிடுகின்றனர்.
442. accountant கணக்காளர், கணக்கர்
வணிக நிறுவனத்தின் அல்லது அலுவலகத்தின் வரவு செலவுகளை நாட்குறிப்பேட்டில் எழுதிப் பேணுநர். அவை தொடர்பான அனைத்தையும் மேற்கொள்பவர். பட்டயக் கணக்கர், சான்றிடப்பட்ட கணக்கர், நிதிநிலைக் கணக்கர், மேலாண் கணக்கர் என இவர்கள் பல வகைப்படுவர்.
443. accountant book கணக்கேடு
கணக்கு பேணப்படுகின்ற புத்தகம்.
444. Accountant of the Superior Court of Justice உச்சநீதிமன்றக் கணக்காய்வாளர்
உச்சநீதிமன்ற நீதிபதியின் உத்தரவுப்படி குழந்தைகளுக்கான சொத்துகள் உட்படப் பணத்தை ஏற்பவர், கையாள்பவர். வீட்டு உரிமையாளர், குடியிருப்பாளர்களுக்கான சட்டம் அல்லது சீர்திருத்தம் தொடர்பான சிறு குற்றங்கள் தொடர்பான நீதிமன்றம் சார்ந்த சட்ட நடவடிக்கைகளுக்கான பணத்தை இவர் ஏற்றுக் கொள்ளமுடியாது. இருப்பினும் கணக்காய்வாளர் சட்ட அறிவுரைவழங்க முடியாது.
445. accountant-general கணக்காய்வுத் தலைவர்
மாநிலக் கணக்காய்வுத் தலைவர்
கணக்கு-தணிக்கைத் துறையின் தலைவர்.
அரசுத் துறைகளில் உள்ள வருவாய்ச் செலவுகள், உடைமைகள்,பொறுப்புகள் தொடர்பான பயனுள்ள பணியாளுமையைப் பயன்படுத்தவும் மேம்படுத்தவும் பொறுப்புள்ள உயர்நிலைத் தணிக்கை அலுவலர் ஆவார்.
இந்தியக் குடியரசுத் தலைவரால் அரசியல் யாப்பின் கீழ்ப் பணி யமர்த்தப்படுபவர். எனவே அவருக்குக் கட்டுப்பட்டவரேயன்றி எந்த அரசிற்கும் கட்டுப்பட்டவரல்லர்.
446. accounting procedure கணக்கியல் நடைமுறை
கணக்கு வைப்பு முறை
கணக்கியல் நடைமுறை என்பது கணக்கியல் துறைக்குள்
ஒரு செயற்பாட்டை மேற்கொள்ளத் தரப்படுத்தப்பட்ட வழிமுறையாகும்.
447. accounting year கணக்காண்டு
வணிக நிறுவனங்கள் தங்கள் கணக்குகளைக் கணக்கிட்டு, நிதிச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் குறிப்பிட்ட காலத்திற்கான – குறிப்பாக 12 மாதங்களுக்கான / ஓராண்டிற்கான கணக்கு ஆகும்.
448. accountrement துணைப்பொருள்கள்.
உணவில் சுவைக்காகச் சேர்க்கப்படும் கூடுதல் பொருள்களைக் குறிக்கிறது.
வீரர்கள், மாலுமிகள், காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள், தனியார் நிறுவனப் பாதுகாப்புக் காவலர்கள் போன்ற காப்புப் பணியாளர்களின் உடைவகைகளிலும் ஆயுதங்களிலும் சேராத புறநிலைக் கருவிக்கலன்கள்.
449. accounts officer கணக்கலுவலர்
நிறுவனத்தின் அல்லது துறையின் வருவாய்-செலவுக் கணக்குகளை ஒருங்கிணைத்துச் செயற்படுத்தும் அலுவலர் கணக்கலுவலர் /கணக்கு அலுவலர்/கணக்கதிகாரி/கணக்கு அதிகாரி எனப்படுகிறார்.
450. accredit மதிப்பேற்பு
நிறுவனம், கல்வியகம், அல்லது இவை போன்ற ஒன்றை மதிப்பிட்டு
அதிகார முறையிலான அறிந்தேற்பு அல்லது ஒப்புதல் வழங்குவது
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply