வெருளி நோய்கள் 1371 -1375: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1366-1370 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1371 -1375
- தொடரிக்குழு வெருளி –Iliketrainsaphobia
தொடரியை விரும்புகிறேன்(I like trains) என்னும் இசைக்குழுவின் மீதான அளவுகடந்த பேரச்சம் தொடரிக்குழு வெருளி.
இக்குழு, இங்கிலாந்தில் மேற்கு யார்க்சையரில்(West Yorkshire) உருவான அதிரடி இசைக்கான பிந்தைய மாற்று இசைக்குழு ஆகும்.
00
- தொடரி வெருளி – Siderodromophobia
தொடரி(Train) அல்லது தொடரி செல்லும் இருப்புப்பாதை(Railway) தொடர்பான மிகையான பேரச்சம் தொடரி வெருளி.
Greek sidதros என்னும் கிரேக்கச் சொல்லிற்கு இரும்பு என்றும் dromos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு ஓடுதல் என்றும் பொருள். எனவே, இருப்புப்பாதையில் ஓடும் தொடர் வண்டியைக் குறிக்கிறது.
இருப்புப் பாதையில் செல்லும் வண்டியை முதலில் புகை வண்டி என்றோம். (தீ வண்டி என மலையாளத்தில் முதலில் குறித்தவர்கள் இதனைப்பார்த்துப் புகை இரதம் என்றனர்.) நிலக்கரி பயன்பாடடிற்கு மாற்றாக மின்சாரம் அறிமுகமானதும் புகை வண்டியைக் கைவிட்டோம். தொடர்ந்து பெட்டிகள் உள்ளமையால் தொடர் வண்டி என்றோம். இது நீளமாக இருப்பதாகக்கருதி, இருப்புப்பாதையில் செல்லும் ஊர்தி என்னும் பொருளில் இருப்பூர்தி என்றோம். எனினும் தொடர் வண்டியே பரவலாகப் பயன்பாட்டில் இருந்தமையால் அதனைச் சுருக்கித் தொடரி என்கிறோம்.
00
- தொடருநர் விலகல் வெருளி – Secuutusophobia
சுட்டுரையில்(Twitter) தன்னைப் பின்தொடர்பவர்கள் விலகுவதால் கவலையும் காரணமற்ற வெறுப்பும் பேரச்சமும் கொள்வது தொடருநர் விலகல் வெருளி.
தன்னை விரும்புவோர் குறைகின்றனர், தன்னை வெறுப்போர் கூடுகின்றனர், தன் கருத்திற்கு ஆதரவு இல்லை, செல்வாக்கு குறைகிறது, இதனால் மேலும் பலர் தன்னைப் பின்தொடராமல் விலகுவர் என்பன போன்ற கவலைகளுக்கு ஆளாகின்றனர்.
மிகுதியான பதிவு அல்லது மிகக்குறைவான பதிவு, தன் விளம்பரப்பதிவு முதலியவற்றால் பின்தொடருநர் குறைகின்றனர்.
சுட்டுரையில் மட்டுமல்லாமல், முகநூல் முதலான பிற குமுகத்தளங்களிலும் இதேபோல் பின் தொடருநர் குறைவது தொடர்பில் வெருளி உள்ளது. எனவே, சுட்டுரைக்கனா வெருளியை மூலத்தில் குறைத்தாலும் தமிழில் பொதுவாகக் குறித்துள்ளேன்.
00
- தொடுகை வெருளி – Aphenphosmphobia/Thixophobia
பிறரால் தொடப்படுவது குறித்து ஏற்படும் வரம்புகடந்த பேரச்சம் தொடுகை வெருளி.
காதலால் அல்லது தோழமையால் தொடப்படும் பொழுது கூச்சத்திற்கு அல்லது அருவருப்பிற்கு ஆளாகி அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் கொள்வது இத்தகையோர் இயல்பு.
தீண்டல் வெருளி (Chirophobia), தீண்டுகை வெருளி (Haptophobia/Haphephobia/ Haptephobia/Haphophobia/ Hapnophobia/ Aphephobia), காதல் தீண்டல் வெருளி/காதல் வெருடல் வெருளி – Malaxophobia / Sarmassophobia, காதல் வெருளி-Philophobia போன்றனவே இதுவும்.
00
- தொந்தரவு வெருளி – Enochlisiphobia
தொந்தரவு / நச்சரிப்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் தொந்தரவு வெருளி.
பிறர் தொந்தரவு செய்யும் பொழுதோ நச்சரிக்கும் பொழுதோ பணியில் குறுக்கீடு ஏற்பட்டு இடையூறு அல்லது தோல்வி அல்லது ஏதேனும் தீமை விளையலாம் எனப் பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வர்.
தொந்தரவு அல்லது நச்சரிப்பு என்னும் பொருள்தரும் enளkhlēsē என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து Enochlisi உருவானது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply