ஐரோப்பிய நாட்டு அருட்தொண்டர்களுள் காலுடுவெல்லின்(Caldwell) அளவிற்குத் தமிழாய்வில் மிகப்பெரும் பங்களிப்பு நல்கியோராக எவரையும் குறிப்பிட முடியவில்லை. தமிழரின் விழுமிய அறக்கோட்பாடுகள் ஐரோப்பிய நாட்டு அறிஞர் உலகில் பரவ அடியெடுத்துக் கொடுத்தார் வீரமாமுனிவர் எனப்பெயரிய பெசுக்கி எனும் இத்தாலிய நாட்டு இறைத்தொண்டர். அச்சுப்பொறியினைத் தரங்கை மண்ணில் நிறுவி நவீன இந்தியாவின் உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைத்து அச்சுக்கலையினைத் தமிழர் கையில் வழங்கினர் சீர்திருத்தச் சபையினைத் தமிழ் மண்ணில் நிறுவிய செருமன் நாட்டு இறையடியார் சீகன்பால்கு(Bartholomäus Ziegenbalg) அவர்கள்.

தமது முன்னோடிகளான இவர்களது சாதனைகளையும் பல படிகள் கடந்து சென்று 1856-இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை வெளியிட்டு இந்தியவியல் என்ற பெயரில் உலக அளவில் கருத்து நிலையில் மாபெரும் ஏகாதிபத்தியம் செலுத்திவந்த சமற்கிருத வியலின் ஆதிக்கத்திற்கு ஒரு முடிவு கட்டி, திராவிடவியல் எனும் பெயரில் தென்னிந்தியவியல் குறித்த ஆய்வுகள் உருக்கொண்டு உரிமைபெற்று உலகளாவிய நிலையில் உயர்ந்தோங்கி வளர உதவினார் கால்டுவெல். இந்திய மொழிகள் தொடர்பான ஆய்வுகளில் ஏற்பட்ட மாபெரும் ஆய்வுப்புரட்சி இஃது என்பதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இருக்கவியலாது.

தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு குறித்த ஆய்வில் 19-ஆம் நூற்றாண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது. வணிகம் புரிய இந்திய நாட்டுக்கு வருகை தந்து விற்பனைப் பொருட்களோடும், விற்பனையாளர்களோடும் மட்டும் தொடர்பு வைத்திருந்த ஐரோப்பிய நாடுகள் கிழக்கிந்திய நிறுவனத்தைத் (கம்பெனியைத்) தொடங்கி படிப்படியாகத் தம் குடியேற்ற ஆதிக்கத்தை இந்திய நாட்டில் நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததோடு பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த கிறித்தவ அருட் தொண்டர்களையும் அனுப்பி வைத்து சமுதாய, சமய மாற்றங்களையும் இந்திய மண்ணில் விரைவுபடுத்திக் கொண்டிருந்த காலம் அது.

கிறித்தவ அருட்தொண்டர்கள் கொண்டுவந்த அச்சுப்பொறியும் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய மேலைநாட்டு முறையில் அமைந்த கல்வி முறையும் பிற இந்திய நாட்டுப் பகுதிகளில் மட்டுமன்றித் தமிழ்ச் சமுதாயத்திலும் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவரத் தொடங்கியிருந்தன. இவற்றின் விளைவாக, மொழி, கலை, பண்பாடு, இலக்கியம் ஆகிய ஆய்வுகளில் பன்முகப் பார்வையும் உலகளாவிய நோக்கும் அரும்பத் தொடங்கின. இதற்கு முன்னர் தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு ஆகியன பற்றிய ஆய்வுகளும் அணுகுமுறைகளும் முழுக்க முழுக்க ‘தமிழ்கூறும் நல்லுலகு’ என்னும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மையமாகக் கொண்டே சுழன்றன. இதற்குக் காரணம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் தேவைபாசையான சமற்கிருதத்திலிருந்து தோன்றியவையே என்ற தவறான நம்பிக்கை இம்மண்ணில் ஆழமாக வேர்விட்டிருந்ததே எனலாம்.

தமிழ்மொழியும், தமிழ்ப்பண்பாடும் வடவர் மொழிகளிலிருந்தும் பண்பாட்டுக் கூறுகளிலிருந்தும் வேறுபட்டவையே என்பதைத் தொல்காப்பியர் காலம் முதல் 19-ஆம் நூற்றாண்டுவரை மிகத் தெளிவாகத் தமிழ்ப்புலவர்கள் வேறுபடுத்திக் காட்டிய போதிலும் பொது நிலையில் இவை பரவலாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் உலகளாவிய நிலையில் தமிழின் சிறப்பினை நடுநிலையில் ஆய்ந்து அதன் தனித்தன்மையினைத் தக்க சான்றுகளுடன் நிறுவும் முயற்சி கி.பி.19-ஆம் நூற்றாண்டு வரை எங்கும் தோன்றவில்லையென்பதுவேயாகும்.

கல்கத்தாவில் வயவர் வில்லியம் சோன்சு(Sir William Jones) தோற்றுவித்த ஆசியக் கல்விச்சங்கம் இந்திய மொழிகளுக்கெல்லாம் சமற்கிருதமே தாயாகும் என்ற நிலைப் பாட்டினை ஏற்றுக் கொண்டதோடு இந்தியவியல் என்றால் சமற்கிருதவியலே என்ற தவறான மாயத் தோற்றத்தினை உலக அறிஞர்கள் முன் மிகுந்த ஆற்றலுடன் வைத்தது. சமற்கிருத இலக்கியங்களை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்து உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக சமற்கிருதம் எந்த மாற்றுக் கருத்துமின்றி அங்கீகாரம் பெற இந்த நிறுவனம் முழுநிலையில் உதவியது.

உயர்நிலைப் பதவிகள் வகித்த ஐரோப்பிய அதிகாரிகளும் அறிஞர்களும் சமற்கிருத அறிஞர்களோடு கைகோர்த்து சமற்கிருதத்தை உலகளாவிய நிலையில் தூக்கிப்பிடித்த நிலையில் தமிழை முன்னிறுத்தி தென்னிந்தியவியல் தொடர்பான ஆய்வுகளை தூக்கி நிறுத்தும் முயற்சிகளை எல்லீசன் என்ற எல்லிசு(Francis Whyte Ellis) போன்ற ஒருசில உயர்நிலை அதிகாரிகள் கிறித்தவ இறைத்தொண்டர்களோடு இணைந்து ஓரளவு மேற்கொள்ளத் தொடங்கினர். சென்னை மாகாணக் கல்விச் சங்கத்தைத் தோற்றுவித்துத் தென்னிந்திய மொழிகள் குறித்த ஆய்வுப்பணிகளை, குறிப்பாகத் தமிழியல் பற்றிய ஆய்வுப் பணிகளை, ஒருங்கிணைத்து நிறுவன முறையிலாக  (Madras School of Orientalism) ஓரளவிற்கு கல்கத்தாவில் செயல்பட்ட ஆசியக்கல்விச் சங்கத்துக்கு நிகராக வளர்க்கத் திட்ட மிட்டிருந்த சென்னை மாகாண ஆட்சியர்(Collector) எல்லீசன் என்ற எல்லிசு அவர்களின் அரிய ஆய்வுக்கனவுகள் அவரது அகால மறைவால் வெடித்துச் சிதறித் தகர்ந்தன. நிறுவனமாக ஒருங்கிணைத்து தமிழியலை வளர்க்க முயன்ற அவரது முயற்சி முழுமை பெறமுடியாது போனபோதிலும் 1856-ஆம் ஆண்டில் காலுடுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் வாயிலாக அது ஓரளவு நிறைவு பெற்றுள்ளது எனலாம்.

சமற்கிருதத்தை இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் உட்கிளையான இந்தோ-ஆரியக் குடும்பத்தின் தலைமை மொழி என நிறுவ முயன்ற சர் வில்லியம் சோன்சு அவர்களது முயற்சியினைக் காலுடுவெல்லின் முயற்சி பல நிலைகளில் விஞ்சி நின்றது. ஆரியர் வருகைக்கு முன் இந்திய நாடெங்கும் வழக்கிலிருந்த மொழிகள் திராவிட மொழிகள் என்பதையும் திராவிட மொழிக்குடும்பத்தின் தலைமை மொழி தமிழ் என்பதையும் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்பற்றிய நூலின் இரண்டாம் பதிப்பு அழுத்தம் திருத்தமாக அறை கூவியது.

தஞ்சை மாவட்ட ஆட்சியராகவிருந்த கேம்பல் (Campell) என்பவர் எழுதிய தெலுங்கு மொழியின் இலக்கணம் (A Grammar of Telugoo Language) என்ற நூலுக்கு தாம் வழங்கிய அணிந்துரையில் தென்னகத்தில் வழங்கப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளும் வட மொழிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்றும், அவை தனித்த பிரிவினைச் சார்ந்தன என்றும் எல்லிசு கால்டுவெல்லுக்கு முன்னரே பிரகடனம் செய்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க எல்லிசின் இந்தப் பிரகடனமே கால்டுவெல்லுக்கு திராவிட மொழிக் குடும்பம் பற்றிய ஆய்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.