மலர்ந்துள்ளது திராவிட ஆட்சியின் தொடர்ச்சியே! – இலக்குவனார் திருவள்ளுவன்

மலர்ந்துள்ளது திராவிட ஆட்சியின் தொடர்ச்சியே!
தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் அரசிருக்கையில் அமர்ந்துள்ளது. வாழ்த்தி வரவேற்க வேண்டிய மாற்றம் இது. ஆனால், திராவிட மெய்யியத்தை(தத்துவத்தை) விரும்பாதவர்களும் ஆரியப் பித்தர்களும் திராவிடம் வீழ்ந்து விட்டது; 60 ஆண்டுகளாக ஆண்ட திராவிடம் ஒழிந்து விட்டது; 67இற்குப் பிறகு மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் விரட்டப்பட்டன; என்று கூக்குரலிடுகின்றனர்; ஆர்ப்பரிக்கின்றனர்; இனி நம் ஆரிய ஆட்சிதான் என்று கொக்கரிக்கின்றனர். ஆனால், உண்மையில் மலர்ந்துள்ளது திராவிட ஆட்சிகளின் நீட்சியே.
திராவிடம், திராவிடம் என்று உணர்வுடன் வாழ்பவர்கள் யாவரும் உளமார நினைப்பது தமிழையே!
“நம்நாடு தமிழ்நாடு; நாமெல்லாம் தமிழ்மக்கள்;
இன்பம் கோரி
இந்நிலத்தில் வாழ்வதெனில் மூச்சாலே!
அம்மூச்சுந் தமிழே”( பாரதிதாசன், குறிஞ்சித்திட்டு)
என்பதே அவர்களின் உள்ளக்கிடக்கை
சிங்காரவேலனார், அறிஞர் சாமி சிதம்பரனார், பேராசிரியர் சி.இலக்குவனார் முதலிய திராவிட இயக்க அறிஞர்களும் பாவேந்தர் பாரதிதாசன், புலவர் குழந்தை, புலவர் சுரதா முதலிய திராவிட இயக்கப் பாவலர்களும் தமிழன்பர்களே!
தமிழக வெற்றிக் கழகம் குறித்து அறிய அதன் இணையத் தளத்தைப் பார்க்கலாம். கட்சிகளின் இணையத்தளங்களிலேயே சிறப்பான வெளிப்பாடு உள்ள சிறந்த தளமாக இது உள்ளது. அதனைப் பார்த்தாலேயே தமிழக வெற்றிக் கழகம் ஒரு திராவிடக் கட்சியே எனப் புரிந்து கொள்ளலாம்.
கட்சியின் அடிப்படைக் கொள்கை முழக்கமே “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறள் மொழியாகும். இது திராவிட மெய்யியமாகக் கூறப்படுகிறது.
சமயச்சார்பற்ற குமுக நீதிக் கொள்கைகளே இக்கட்சியின் கொள்கைகள் என அறிவித்துள்ளனர்.
கொள்கைத் தலைவர்களுள் நடுநாயகமாகத் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி செம்மாந்து நிற்கின்றார்.
குமுகச் சீர்திருத்தம், சாதிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண்ணடிமைத்தனம் எதிர்ப்பு, பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மை வழி சமத்துவம்-குமுகநீதி மதிப்பீடுகளைப் பரப்புரை செய்து, தமிழகத்தை வழிநடத்திய முதன்மைத் தலைவர் தந்தை பெரியார். எனப் பெரியாருக்கே முதன்மை அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் ஈ.வெ.இரா.வைப் பின்பற்றுவோர் திராவிடக் கட்சியாக இல்லாமல் ஆரியக் கட்சியாகவா இருப்பர்?
த.வெ.கழகம் வலியுறுத்தும் கொள்கைகள் என, மக்கள்நாயகம்(சன நாயகம்), இணையறக் குமுக நீதி(சம தரும சமூக நீதி), ஒரு நாட்டின் மக்களை, அவர்கள் சார்ந்த இனம், மதம், மொழி, சாதி, பாலினம் என்று பிரித்துப் பாகுபடுத்தாமல், சம உரிமைகளை அவர்களுக்கு உறுதிப்படுத்திச் செயற்படுத்துவது, ஆட்சி அதிகாரம், சட்டம், நீதி, அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி மக்களின் அடிப்படை விடுதலை உரிமைகளைப் பறிக்கும் மாநில/ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் பகைச் செயற்பாடுகளை எதிர்த்து, மக்களுக்கான மக்கள் நாயக உரிமைகளை நிலைநாட்டுவது, போதை இல்லாத் தமிழகம், பகுத்தறிவுச் சிந்தனை மனப்பான்மை முதலியவற்றை அறிவித்துள்ளனர்.
இவற்றின் விளக்கங்களும் தெளிவாக உள்ளன.
சமத்துவம்:
சாதி, மதம், இனம், நிறம், மொழி, பொருளாதாரம், வகுப்பு(வருக்கம்), பாலின சமத்துவத்துடன் கூடிய உரிமை, எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள், எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்குச் சமமானவர்களே.
மதச்சார்பின்மை:
மதச் சார்பற்ற, தனிப்பட்ட மத நம்பிக்கையிலும் தலையீடற்ற, அனைத்து மதத்தவரையும் மதநம்பிக்கை அற்றவரையும் சமமாக பாவிக்கும் அரசு ஆட்சி ப் பணியாண்மை.
மாநிலத் தன்னாட்சி (State Autonomy) உரிமை:
மாநிலத் தன்னாட்சி உரிமையே அந்தந்த மாநில மக்களின் தலையாய உரிமை. மாநிலத் தன்னாட்சிக்கு உட்பட்ட உரிமைகளை மீட்டல்.
இருமொழிக் கொள்கை:
தாய்மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை. தமிழே ஆட்சிமொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி. தமிழ்வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.(05.07.2025)
பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையே எங்கள் தமிழகத்தின் உறுதியான மொழிக் கொள்கை. நம் தமிழக வெற்றிக் கழகமும் அதையே உறுதியாகப் பின்பற்றுகிறது.
அரசியல் தலையீடு அற்ற அடிப்படை உரிமைகளை நிலை நாட்டும் பணியாண்மை(நிர்வாகம்):
அரசுத் துறை, தனியார் துறை என்று எந்தத் துறையிலும் அரசியல் தலையீடு அற்ற ஊழல் அருவருப்பு (இலஞ்ச இலாவண்யம்) அற்ற, பணியாண்மை, மத. இன, மொழி, சாதி பேதமற்ற வகையில் கல்வி, சுநல வாழ்வு, தூய காற்று, தூய குடிநீர் என்பது எல்லாருக்கும் அடிப்படை உரிமை, சுற்றுச் சூழல், இயற்கை வளங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமை.
தீண்டாமை ஒழிப்பு :
பழைமைவாத பழக்க வழக்கங்களை மறுத்தொழித்தலே தீண்டாமை ஒழிப்பின் முதல் படி.
ஒன்றிய அரசின் மக்கள் எதிர்ப்புக் கொள்கைகளுக்குக் கண்டனம்:
பெரியார், அண்ணா ஆகியோரை அவமதிக்கும் பா.ச.க.வின் பிளவுவாத அரசியலுக்குக் கண்டனம், தொகுதி மறுசீராய்வு – ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்குக் கண்டனம் என ஒன்றிய அரசின் மக்கள் பகைக் கொள்கைகளுக்கான கண்டனம் தெரிவித்துள்ளமை.
இலங்கைத் தமிழர்கள் தன்னுரிமை:
இலங்கைத் தமிழர்கள் தன்னுரிமையுடன் தங்கள் நாட்டிலேயே வாழ்வதற்கும், அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கும் நிலையான தீர்வு காண, ஐ.நா. அவை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உலக மன்பதைக்கு இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கிறது. பொது வாக்கெடுப்பு மட்டுமே இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய ஒரே வழி என்பதை மீண்டும் மீண்டும் தமிழக வெற்றிக் கழகம் தீர்க்கமாக நம்புகிறது.(28.03.25)
திராவிடக் கொள்கை:
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திராவிடக் கொள்கை விளக்க அறிக்கையைத் (Dravidian Manifesto) தஞ்சாவூரில்(23.2.2019) வெளியிட்டுள்ளார். அதன் பிழிவு அல்லது சாராம்சம் வருமாறு
திராவிட இயக்கம் குமுக நீதி, பகுத்தறிவு, தன் மதிப்பு (சுயமரியாதை), சமத்துவம், மாநில உரிமைகளை வலியுறுத்தல், சாதி ஒழிப்பு (Anti-caste), பிறப்பால் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் களைதல், பெண் அதிகார அடைவு(பெண் விடுதலை – Women’s Empowerment), பெண்களுக்குக் கல்வி, சொத்துரிமை. குமுகத்தில்(சமூகத்தில்) சம உரிமை வழங்குதல். மாநில உரிமை / கூட்டாட்சி (State Autonomy), மத்திய அரசுக்கு எதிராக, மாநிலங்களுக்கான அதிகாரம், தன்னாட்சியை வலியுறுத்துதல். மொழி உரிமை, தீண்டாமையை ஒழித்து அழிப்பது முதலியன. இவை யெல்லாம் நாம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், தீர்மானங்கள், கொள்கை விளக்கப்பாடல், கொடிப் பாடல் மூலம் கழகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, அமைந்துள்ளது திராவிட ஆட்சியின் தொடர்ச்சியே! நீட்சியே! எனினும் இதனைத் தமிழிய ஆட்சி என்று சொல்வோம்.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (திருக்குறள், ௫௱௪ – 504)
என்னும் திருவள்ளுவர் வழியில் எதிர்க்கட்சியினர் செயற்படட்டும்! தமிழ்நல ஆர்வலர்களும் கட்சியினரும் நிறைகளைப் பாராட்டி ஊக்கப்படுத்தி, அதே நேரம் குறை கண்டவிடத்து நீக்குவதற்கான வழிமுறையை எடுத்துரைக்கட்டும். தமிழ்நல ஆட்சியாகச் சிறப்பாகச் செயற்படட்டும்!
– இலக்குவனார் திருவள்ளுவன்







Leave a Reply