(அகரமுதல 106   கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி)

 

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

  இலக்குவனார் ஆசிரியராகப் பணியாற்றிய தொடக்கக் காலத்தில் குறுங்காவியம் ஒன்று பாடியுள்ளார். (குறிப்பு : ஆய்வாளர் கவனக்குறைவால் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிடும் குறுங்காவியம் இலக்குவனார் புலவர் மாணாக்கராக இருந்த பொழுது எழுதப்பெற்றது.) இக்கதைப் பாடல் முழுவதும் அகவற் பாவால் எழுதப் பெற்று பதிப்பும் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆயின் அக்கவிதை ஆய்வாளர் கைக்குக் கிட்டவில்லை.

 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள ‘தமிழ் நூல் விவர அட்டவணையில் மேற்படி கதைப்பாடல் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் திரு. சு. செல்லப்பன் அவர்களைப் பொதுப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1983இல் வெளியிடப்பட்டுள்ளது. எழிலரசி அல்லது காதலின் வெற்றி14 என்பது கதைப்பாடலின் பெயர்.

 ஆங்கிலக் கவிஞர் கீட்சு எழுதிய இசபெல்லா நூலைத் தழுவி எழுதப்பட்ட கதைப்பாடல் ‘எழிலசி’. 1954இல் கவிஞர், நாம் பதிப்பித்து வெளியிட்டுள்ள ‘துரத்தப்பட்டேன்’15 என்ற கவிதை நூலின் பின் அட்டையில் கவிஞர் வெளியிட்டுள்ள கவிதை நூல் வரிசையில் எழிலரசி முதலாகக் குறிக்கப்பட்டுள்ளது.

  விருதுநகர் செந்திற்குமார நாடார் கல்லூரிப்பணியினின்றும் நீக்கப்பட்ட நிகழ்ச்சியை, தன் உள்ளக் குமுறலை ‘துரத்தப்பட்டேன்’ என்ற தலைப்பில் அகவல் பாடியுள்ளார். ஆற்றுப்படைக் கவிதை ஒன்றும் பாடியுள்ளார். இதுவும் அகவற்பாவால் ஆகியது. 1959 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை வள்ளல் பு.அ. சுப்பிரமணியரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு ‘மாணவர் ஆற்றுப்படை’ பாடப் பெற்றுள்ளது.

  1967ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றது. தமிழ்நாட்டின் ஆட்சித் தலைவராக -முதல்வராக- அறிஞர் அண்ணாதுரை அவர்கள் பொறுப்பேற்றார்கள். காட்சிக் கெளியராய் கடுஞ்சொல் அற்றவராய்ப் பலரும் பாராட்டும் வண்ணம் ஆட்சி நடத்தினார். மகிழ்ச்சிக்குப் பின் துன்பம் என்பதைப் போல 1968ஆம் ஆண்டில் கொடிய நோயான புற்றுநோய் அவரை ஆட்கொண்டிருந்த செய்தி கிடைத்து, நாடே துன்புற்றது. அறிவியல் உலகின் முன்னோடி நாடான அமெரிக்காவுக்குச் சிகிச்சை பெறச் சென்றார் அண்ணா. மணிவிழாக்கொண்டாட இன்னும் ஓராண்டே இருக்கும்போது இத்தகைய சொல்லொண்ணாத் துன்பத்திற்கு ஆளானார். அத்துயரினின்று மீண்டு நலம் பெற்று தமிழகம் திரும்ப வேண்டும். இன்னும் பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று இலக்குவனார் விரும்பினார். அந்த எண்ணத்தின் விளைவே ‘அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து’16 என்னும் கவிதையாகும். இருமொழித் திட்டம் கொணர்ந்தமையையும், தன்மதிப்பு மணச்சட்டம் இயற்றியமையையும், தமிழ் மக்கள் வாழும் நிலத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியமையையும் பாராட்டிப் பாடியுள்ளார்.

 அகவற்பா தவிர வெண்பாவும் கலிப்பாவும் வஞ்சிப்பாவும் பாடியுள்ளார் இலக்குவனார். தமிழர் தலைவர்களான தந்தை பெரியர் ஈ.வே.இராமசாமி, உமா மகேசுவரம் பிள்ளை, மறைமலையடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரர் ஆகியோர் பற்றிப் பாடியுள்ளார். நாவலர் சோமசுந்தரப் பாரதியார் மறைவு குறித்த இரங்கல் வெண்பா ஒன்றும் பாடியுள்ளார். அழக்பபச் செட்டியர் நினைவு குறித்து வெண்பாப் பாடியுள்ளார். இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் நேரு, அண்ணா ஆகியவர்கள் மறைவு குறித்து நீண்ட இரங்கல் அகவல் பாடியுள்ளார்.

  முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், அறிஞர் கோ.து.நாயுடு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராசர், கருணாநிதி ஆகியோர்க்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதைகள் பாடியுள்ளார். தைத்திங்கள் தோறும் பொங்கல் வாழ்த்துக் கவிதைகள் பாடியுள்ளார். தன்னுடன் பயின்ற ஒரு சாலை மாணவர் திரு. அ. கிருட்டிணமூர்த்தி மற்றும் சிலர்க்கு திருமண வாழ்த்துக் கவிதைகள் இயற்றியுள்ளார். தன்னுடைய வாழ்க்கைப் பாதையில் உற்றுழியும் உதவியவர்களுக்குப் படையல் கவிதைகள் யாத்துள்ளார்.

  இந்தி மொழித்திணிப்பை எதிர்த்துச் சிறை சென்ற நாவலர் இரா. நெடுஞ்செழியன், இந்தி வல்லாண்மையில் கொடுமையை எண்ணித் தம்மையே தீக்கிரையாக்கிக் கொண்டே செந்தமிழ் மறவன் சின்னச்சாமி ஆகியோரையும் பாடியுள்ளார்.

  தமிழ் நலம் காத்து ‘தமிழ்நாடு’ இதழ் நடத்திய கருமுத்து தியாகராசச் செட்டியார், பைந்தமிழ்க் கவிபாடிய அ.கி. பரந்தாமனார்பற்றியும் பாடியுள்ளார். கல்வியின் சிறப்பு குறித்து கீர்த்தனைப் பாடல் ஒன்றும் பாடியுள்ளார்.

  இலக்குவனார் கவிதைகள் உயிரோட்டம் உள்ளவை. உயர்ந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை. உணர்ச்சி மிக்கவை. தமிழ்ச் சமுதாயத்தின் நலனுக்காகத் தோன்றியவை. தமிழ்ச் சமுதாயத்தினின்று இலக்குவனாரைப் பிரித்து அறிய முடியாது. தமிழ்க் கவிதை வரலாற்றில் இலக்குவனாருக்குச் சிறப்பான ஓர் இடம் உண்டு. மலரும்மணமும்போலக் கவிதையும் இலக்குவனாரும் இயைபு கொண்டவர்கள். இயல்பாகவே பாடும் ஆற்றல் பெற்றவர் இலக்குவனார். காலமும் இடமும் சூழலும் கவிஞன் பாடுவதற்குத் தூண்டுகோல் ஆகின்றது.

  ‘எழுத்து என்பது இலக்குவனாரைப் பொருத்த அளவில் கவிதையாகும். எந்த ஒரு செய்தியையும் கேள்விப் பட்ட மாத்திரத்தில் அகவல் நடையில் எழுதிவிடுவார்.17

 இலக்குவனார் உரைநடை  செய்யுள் நடை போல திட்ப நுட்பம் செறிந்து விளங்குகிறது. ஓசை நயம் பொருந்திப் படிப்போர்க்குத் கழிபேருவகை ஊட்டும் தன்மை உடையதாய் விளங்குகிறது. ‘கரும வீரர் காமராசர்’ என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள உரைநடை நூல் வரலாற்றுக் குறிப்புகள் நிறைந்து காணப்படுகிறது. அகவல் ஓசை பொருந்தி அமைந்துள்ளது. செய்யுள் நூல்போலச் செவிக்கு இன்பம் பயக்கின்றது.

எடுத்துக்காட்டாக

மக்கள் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் தமிழே முதன்மை பெற வேண்டும். கல்வி மொழி தமிழாக வேண்டும். அரசு செய்யும் மொழி தமிழாக வேண்டும். இன்றைய வழிபடும் மொழி இன்றமிழாக வேண்டும். வீட்டில் தமிழ், வெளியில் தமிழ், ஆட்சியில் தமிழ், தெருவெல்லாம் தமிழ் முழக்கம், தேயமெல்லாம் தமிழ் முழக்கம்’18 என்ற பகுதியில் அறிந்து மகிழலாம்.

  இலக்குவனார் பாடியுள்ள கவிதைகளில் நாற்பத்தைந்து கவிதைகளை மட்டும் ஆய்வாளர் தம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளார். கவிதையின் எண்ணிக்கை குறைவு என எண்ண வேண்டா. எண்ணிக்கையை வைத்தா நாம் கவிதைகளை மதிப்பிடுகின்றோம்? அல்லவே.

 ‘சங்கக் காலத்துப் புலவர்களின் இலக்கிய வன்மை மென்மைகளைப் பாட்டின் எண்ணிக்கையை வைத்து அளக்கலாகாது. அளக்க முடியாது. நூறு பாடியோர் பாவின் வனப்பும் ஒன்று பாடியோர் பாவின் வனப்பும் சங்கத் தன்மையனவாகவே உள’19 என்னும் முனைவர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் கூற்று எண்ணிப் பார்க்கும் தகுதியுடையது. எனவே, கவிதையின் சிறப்பை அளவாகக் கொண்டு மதிப்பிடுவோம்.

 ஒரே ஒரு பாடல் பாடி சிறப்பு அடைந்தவர்களும் சங்கப் புலவர் வரிசையில் இடம் பெற்றுள்ளனர். முரஞ்சியூர் முடிநாகராயர், பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், சோழன் நல்லுருத்திரன், ஆதிமந்தியார், பாண்டியன் தேவி கோப்பெரும் பெண்டு, காவிரிப்பூம் பட்டினத்துப் பொன் வனிகனார் மகனார் நம்பூதனார், காரிகிழார், இரணிய முற்றத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் முதலிய புலவர்கள் ஒரே ஒரு பாடல் பாடி சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

  பாடல் அல்லது கவிதை என்று சொல்லும் போது இரண்டு அடிகளையுடைய குறட்பாவும் ஒரு கவிதைதான். அறுநூற்று ஐம்பத்தேழு அடிகளையுடைய ‘துரத்தப்பட்டேன்’ என்ற அகவலும் எண்ணிக்கையில் ஒரு கவிதை தான். நான்கு அடிகளையுடைய இரங்கற்பாவும் 20 (நாவலர் சோம சுந்தர பாரதியார் மறைவு குறித்துப் பாடியது) ஒரு கவிதை தான்.

ஆய்வில் இடம் பெறும் கவிதைகளுக்குரிய அடிகளின் எண்ணிக்கை 1745 ஆகும்.

குறிப்புகள்

  1. சி. இலக்குவனார், எழிரலசி அல்லது காதலின் வெற்றி, `தமிழ் நூல் விபர அட்டவணை’ 1931-35 ஏழாம் தொகுதி, இரண்டாம் பகுதி, சென்னை 1983, ப-573.
  2. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், இலக்கியப் பண்னை, புதுக்கோட்டை, 1954, ப-28.
  3. சி. இலக்குவனார் அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து, குறள்நெறி வெளியீடு, மதுரை, செப்டம்பர், 1968.
  4. நா. காமராசன், நேர்காணல்-3, நாள்; 4.10.87
  5. சி. இலக்குவனார், கரும வீரர் காமராசர், நாஞ்சில் புத்தகமனை, நாகர்கோவில் 1956, பக். 65-66.
  6. முனைவர் வ.சுப. மாணிக்கம், தமிழ்க்காதல், பாரி நிலையம், சென்னை 1962, ப-329
  7. சி. இலக்குவனார், நாவலர் பாரதியார் நினைவு மலர்,

திருவள்ளுவர் கழக வெளியீடு, மதுரை 1960, ப-3.