தலைப்பு-நல்லதோர் வீணை : thalaippu_nallathoarveenai

நல்லதோர் வீணை செய்தே…

நாட்டு விடுதலையைத் தன் உயிர்மூச்சாகக் கருதி, வீர விடுதலை வேண்டி, வேறொன்றும் கொள்ளாது நின்ற மகாகவி பாரதியார், விடுதலையை மாற்றாரிடமிருந்து பெறுமுன், இந்திய இனம் பெண்மைக்கு விடுதலை அளிக்க வேண்டுமென விரும்பினார். பெண் விடுதலை இயக்கம் உருவானது.

பாரதியார் “பெண்மை வெல்க” எனக் கூத்திட்டார். “பெண்ணறத்தினை ஆண் மக்கள் வீரந்தான் பேணுமாயின் பிறிதொரு தாழ்வில்லை” என்று எடுத்துக்கூறினார். சக்தியும், சிவனும் இணைந்து செயற்பட்டால் வெற்றி பெறுவது திண்ணம் என உணர்ந்து, விடுதலைப் போராட்ட வேள்வியிலே பெண்ணினத்தை ஈடுபடுத்த வேண்டினார்.

“ஆணுக்குப் பெண் விலங்கு என்ற பண்டை வழக்கத்தை ஒழித்து, குறைவிலா அறிவு பெற்று, ஆணுக்கு நிகராக வாழவல்லார் தம்மைத் துணைக் கொண்டு கடமை செய்வீர்” என அறிவுறுத்தினார் மகாகவி.

பெண்களின் முன்னேற்றத்திற்காக வேதநாயகம் பிள்ளை ‘பெண்மதி மாலை’ என்னும் கருத்தமைந்த நூலை உருவாக்கிப், பெண்களின் வாழ்வுக்கும் உயர்வுக்கும் வழிகாட்டினார். மகாவித்துவான் சவராயுலு(நாயக்கர்) என்பார் முதன் முதலில் பெண்களுக்கென்றே புதுச்சேரியில் தனிப் பள்ளியைத் தொடங்கிய பெருமைக்குரியவர்.

பாரதி, தம்பிக்கு எழுதிய கடிதத்தில், “பெண்ணைத் தாழ்மை செய்வோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது. பெண்ணை அடைந்தவன் கண்ணை அடைந்தவன் என்றெழுது” என்கிறார்.

மகாத்மா காந்தியோ, “ஆண்களைவிடப் பெண்களுக்கு அன்பும் பொறுமையும் அதிகம். பெண்ணில்லாமல் ஆணில்லை. மிருகத்தனமான துணிச்சலில் பெண்ணைவிட ஆண் சிறந்தவனாக இருக்கலாம். ஆனால், தன்னை வன்முறை இச்சைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளத் துணிவதில் ஆணிணும் பெண்ணே சிறந்தவள்” என்று பெண்ணினத்தை உயர்த்திப் பேசியுள்ளார்.

பண்புநலன் பெற்ற பெண்டிர் ஆடவர்க்கு இணையாக, ஏன் ஒருபடி மேலாகவே கல்வி, அறிவு, பதவி என அனைத்திலும் மேலோங்கி நிற்கிறார்கள். இதற்குக் காரணமென்ன? அவர்கள் ஆழ்ந்தகன்ற நுண்ணுணர்வு, கால அருமை அறிதல், நீதிக்குப் புறம்பாக நடக்காத நல்லியல்பு, செயல் திட்டம், செயல் தூய்மை எனப் பலவகையான் உயர்ந்து நிற்பதால், வேலைவாய்ப்புகள் பெண்டிரைத் தேடி வருகின்றன.

  இன்றைக்குப் படிப்பும் அழகும் மட்டும் ஆண் மகனைக் கவர்வதில்லை. பணிக்குச் சென்று பொருளீட்டும் பெண் என அறிந்த பின்னரே திருமணம் செய்ய உடன்படுகின்றனர். பணிக்குச் செல்லாத பெண்ணுக்குத் திருமணச் சந்தையில் விலையில்லை என்ற எண்ணம் மக்கள் மனத்தைவிட்டு அகலவில்லை.

அதிலும், கணவனினும் மனைவி அதிகம் படித்துவிட்டாலோ, அதிக ஊதியம் பெறுபவளாக இருந்தாலோ ஆணினம் தாழ்மையுணர்ச்சியில் பெண்மையை வாட்டும் நிலைதான் உள்ளது.

இன்று நாடெங்கும் நாளும் நடக்கும் சீர்கேடான நிகழ்வால் தம்மைப் பலி கொடுக்கும் பெண்ணினத்தை நினைத்தால், உள்ளமும் உடலும், அச்சத்தால் நடுங்குகிறது.

நள்ளிரவில் ஒரு பெண் நடு வீதியில் எதற்கும் அச்சமின்றி நடந்துசெல்லும் நாளே நாம் உண்மையிலே விடுதலை பெற்ற நாள் என ஓங்கியுரைத்த காந்தி மகான் இன்று இருந்தால், இன்று நிகழும் கொடுமை கண்டு தன்னுயிரையே நீத்திருப்பார்.

பட்டப்பகலில் பலரும் உலவும் தொடர் வண்டி நிலையத்தில், பட்டம் பெற்ற கணினி மென்பொருள் பொறியியல் வல்லுநரான ஓர் இளம் பெண் கயவன் ஒருவனால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். நம் நாடு விடுதலை பெற்றது உண்மையா?

தன் குடும்பத்திற்காக உழைக்க, உடல் வருத்தி, போதிய உணவின்றிச் செல்லும் பெண்ணினத்தைக் காக்க காவலர்கள் எவரும் தொடர் வண்டி நிலையத்தில் கண்காணிப்பு செய்யாமல் இருந்தது விடுதலை பெற்றமையாலா?

குற்றவாளிகளைப் பிடித்துத் தண்டனை வழங்கிவிட்டால் இதுபோன்ற சிக்கலுக்கு முடிவு கிடைத்துவிடுமா? இல்லை.

பெண்கள், சில ஆண்களின் போலியான கவர்ச்சிகரமான பேச்சில் மனத்தைப் பறி கொடுத்து, தங்கள் வாழ்வுக்கு முடிவு தேடிக் கொள்ளக் கூடாது.

ஆடவர்கள், பெண் குலத்தைத் தங்களின் உடன்பிறப்புகளாக எண்ணி மதிக்க வேண்டும், தங்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதில் ஆண்கள் தங்கள் மனத்தைச் செலுத்த வேண்டும்.

சங்கக்காலத்தில், தவறு செய்பவரைப் பாசக் கயிற்றால் பற்றி, நடுவூரில் பலர் காண அறைந்துண்ணும் சதுக்கப் பூதம் இருந்தாகச் சிலப்பதிகாரம் வாயிலாக அறிகிறோம்.

அறியோன் ஒருவன்

அறியாக்கரி பொய்த்து அறைந்துணும் பூதத்துக்

கறை கெழுபா சத்துக் கையகப்படலும் (அடை. காதை: 78-79)

நம் ஊரிலும் இதுபோல், கொலையாளிகளைத் தேடிப் பிடித்து, தீர ஆய்ந்து, அவனே கயவன் என்று அறிந்தவுடன் நடுவூருள் அனைவரும் பார்க்க அவனைத் துன்புறுத்தி, அவன் உயிர் நீக்கலாம் என்ற சட்டம் வந்தால் தீயவர்களுக்கு அஃது ஒரு பாடமாக அமையும். குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு. தவறு செய்வோர் யாராக இருப்பினும் இதற்கு விதிவிலக்கில்லை என்று சட்டம் இயற்ற வேண்டும்.

திரைப்படங்களில் தொலைக்காட்சிகளில் வன்முறைக் காட்சிகள் இடம்பெறத் தடை விதிக்க வேண்டியது அரசின் தலையாய கடமை.

திருக்குறள் கூறும் நெறிகளை, அவற்றை விளக்கும் கதைகளைக் கூறும் நிகழ்ச்சிகள், கதைகளை உருவாக்கி, திரும்பத் திரும்ப அவற்றை ஒளிபரப்பினால், ஒழுக்க நெறியை மனித சமுதாயம் விரும்பி ஏற்கும்.

கொலை, களவு, சூது, மது, மங்கை போன்ற தீய ஒழுக்கங்கள் குடியைக் கெடுப்பன என்பதை உணர்ந்து செயற்படும் நாள் என்று வருமோ, அன்றுதான் நம் நாடு முழு விடுதலை பெற்றுவிட்டது எனலாம்.

பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்து, படித்து, ஆணுக்கு இணையாகப் பணியாற்றும் மகளிர்க்கு அவர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் ஒத்துழைப்பும் மனித நேய அணுகுமுறையும் மிக மிக இன்றியமையாதது.

“நல்லதோர் வீணை செய்தே அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?”

தி.வே.விசயலட்சுமி : thi.ve.visayalatchumi

தி.வே. விசயலட்சுமி

தினமணி 02,07,2016

Dinamani-logo-main

 

 

பெண் ஓவியம் நன்றி: அமிர்தபிரபு வளைத்தளம்