prize-cup

[மாசி 17, 2046 / மார்ச்சு 01, 2015 தொடர்ச்சி]

[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்

2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல்

“தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்”

என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில்

வாசிக்கப் பெற்ற கட்டுரை.]

படிவங்கள் , பதிவேடுகள்:-

            1973 ஆம் ஆண்டில் படிவங்கள், பதிவேடுகள் ஆகிய அனைத்தும் தமிழில்தான் அச்சிட்டு வழங்கப்பட வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் அச்சிடப்பட வேண்டிய சில இருப்பின் தமிழ் வளர்ச்சி இயக்குநரின் இசைவைப் பெற்று, இசைவு பெறப்பட்ட சான்றையும் இணைத்து அச்சிட வேண்டும் என்றும், எழுதுபொருள் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்பாக 1981ஆம் ஆண்டும் ஒர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் ஆங்கிலத்தில் படிவங்களும் பதிவேடுகளும் அச்சிடப்படுவதற்கு முற்றுப் புள்ளி இல்லை. சிலவகைப் பதிவேடுகள், படிவங்கள் கூட்டுறவு அச்சகங்களில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு வருகின்றன. தமிழில் உள்ள காவல்துறை, நீதிமன்றத்துறை போன்றவற்றின் படிவங்கள் பல தமிழ் எழுத்திலான அயற்சொற்களைப் பயன்படுத்தியே அச்சிடப்படுகின்றன. படிவங்கள் தமிழில் இருந்தாலும், ஆங்கிலத்தில் எழுதக்கூடியவர்கள், படிவங்கள், பதிவேடுகள், ஆங்கிலத்தில் உள்ளமையால் ஆங்கிலத்தில் எழுதுவதைத் தொடருகின்றனர். இவற்றைத் தமிழில் வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு. எனினும் ஆங்கிலப்படிவங்களிலும் ஆங்கிலத் தலைப்புகள் உள்ள பதிவேடுகளிலும் தமிழில் எழுதும் உணர்வு இல்லாத பணியாளர்களின் செயற்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் நாம் கனவு காண்பது ஏன் என்று தெரியவில்லை.

நடுவணரசின் கணக்காய்வுத் துறையும், நமது அரசின் கருவூலத் துறையும்

            கருவூலப் பட்டியல்கள் முதலானவற்றில் ஆங்கிலம் பயன்படுத்த வேண்டும் எனக் கூறுவதற்குத் தெரிவிக்கப்படும் காரணம், இவை நடுவணரசின் கணக்காய்வுத் துறைத் தணிக்கைக்கு உட்படுவன என்பதே. பிற மாநிலங்களில் ‘மண்ணின் மைந்தர்கள்’ கொள்கை ‘வேரூன்றிய பின், தமிழ்நாட்டில் இத்துறையில் பணியாற்றுவோரில் பெரும்பாலோர் தமிழ்நாட்டு மக்களாகவே உள்ளனர். மேலும், இவர்களுக்கு அ.ஆ.ப.வ. 1084 பொது (த.வ.1.) துறை நாள் 25.5.1966 ஆணையின்படி வாரம் இருநாள் என்ற முறையில் 11 திங்கள் தமிழில் எழுதவும், படிக்கவும் பயிற்சி அளிக்கப்படுள்ளது. எம்மடலும் தமிழில் அளிக்கப்பட்டது எனக் கூறித் திருப்பி அனுப்பக் கூடாது என்றும், தேவையெனில் மேலும் பயிற்சி பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையெழுத்திலுள்ள பணிப் பதிவேடுகளையெல்லாம் இதே கணக்காய்வுத் துறையினர்தான் ஆய்வு செய்து ஓய்வூதிய ஆணை பிறப்பிக்கின்றனர். ஆதலின் கருவூலப் பட்டியல்கள், தொடர்பான மடல் போக்குவரத்துகள், அறிக்கைகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கே தேவையில்லை. இதற்காகக் குரல் கொடுப்போர்தான் யாருமில்லை. என்றபோதும் நடுவரசிலோ, நடுவரசின் சார்புத்துறைகளிலோ பணியாற்றினாலே தம்மை இங்கிலாந்து நாட்டவராக எண்ணிக்கொள்ளும் நம் நாட்டவர் இருக்கும்வரை விதிவிலக்கும் அகலப்போவதில்லை; தமிழும் வரப்போவதில்லை என்ற உண்மையை நாம் இன்னும் உணராமல் இருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.

பரிசும் தண்டனையும்:-

            தமிழ் ஆட்சி மொழிச் செயலாக்கத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் அலுவலகங்களுக்குப் பரிசுக் கேடயங்களும், நல்ல முறையில் தமிழில் குறிப்புகளும் வரைவுகளும் எழுதும் பணியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்குவதுபோல், செயற்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இத்திட்டத்தை முழுமையாக்க முடியாதா என்ற எண்ணத்திற்கும் இடமில்லை. ஏனெனில் அரசாணை நிலை எண்-24 கல்வித்துறை நாள் 06.01.82 இன்படி தமிழ்நாடு குடிமுறைப் பணியாளர் (வகைப்பாடு, கட்டுப்பாடு மேல்முறையீடு) விதிகளின் கீழ் தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தைச் சரிவர நிறைவேற்றாத அரசு அலுவலகள், பணியாளர்கள் நடவடிக்கை எடுக்கலாம். நடவடிக்கை எடுக்கவேண்டிய துறைத்தலைவர்களும், துறைச் செயலர்களுமே, இக்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும்பொழுது அவர்கள் அவர்கள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்?. எத்தனையோ பெயரளவு ஆணைகளில் ஒன்றாகத்தான் இதுவும் உள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்தும், தமிழுக்குத் தடையும்:-

            தனியார் பள்ளிகள் பலவற்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது கிடையாது. சில பள்ளிகளில் சமசுகிருதப் பாடல் பாடிய பின்தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும். ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா’ என்னும் தொடரை நீக்கியதாலோ, வரிகளை மாற்றியமைத்தாலோ பாடுவதில்லை என எண்ண வேண்டா. தமிழில் பேசினாலே தண்டனை வழங்கிவிட்டு, எப்படி நாம் தமிழ்த்தாய்க்கு வாழ்த்துப்பாடுவது என்ற ‘நடுநிலை உணர்வுதான்’ காரணம். தமிழில் பேசினால் தண்டனை வழங்குவதாகக் கூறுவதை உரியவர்கள் மறுத்தாலும், ஏறத்தாழ 90% பள்ளிகளில் இந்நிலை உள்ளது என்பதே உண்மை. (மதுரையிலும் சென்னையிலும் ஒவ்வொரு பள்ளியிலும் பயில்வோரைக் கேட்ட பொழுது, தமிழ் நாட்டில் தமிழன்னைக்குத் தடைவிதித்துள்ளது தெரிய வந்துள்ளது. இது பிற மாவட்டங்களுக்கும் பொருந்தும்) திங்களும், வெள்ளியும் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற கல்வி இயக்கத்தின் சுற்றாணை, தமிழ் வழங்கிய பள்ளிகளையும், இத்திசைக்குத் திருப்பி விட்டது. இத்தகைய உணர்வாளர்கள் நிறைந்துள்ள தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி குறித்து எண்ணுவதற்கே இடமில்லையே.

திருவள்ளுவர் ஆண்டு:-

            அரசாணைக்கிணங்க, அரசு ஆணைகளிலும் மடல்களிலும் தீர்ப்புகள் முதலாணவற்றிலும் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப் பேற வேண்டும் என நாம்அறிவோம். ஒரு பகுதி ஆணைகளிலும் ஒரு சில துறைகளிலும், சில துறைகளின் அழைப்பிதழ்களிலும் தவிர வேறெங்கும் இவ்வாறு குறிக்கப்படுவதில்லை என்பதையும் நாம் அறிவோம். அடிக்கல் விவரங்களிலும் திருவள்ளுவர் ஆண்டு பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. ஏன் வான்புகழ் வள்ளுவர் கோட்டத்தில் கூடத் திருவள்ளுவர் ஆண்டு பொறிக்கப் பெறவில்லை. செய்தியிதழ்களில் இடம் பெறுவதில்லை. இதழாசிரியர் திருவள்ளுவர் ஆண்டைக் குறிக்க விரும்பினாலும், ‘தமிழ் வளர்ச்சி பற்றிய படைப்புகள் விற்பனைப் பெருக்கத்திற்குப் பயன்பட்டால் போதும் உள்ள படியே உணர்வை வளர்க்கக் கூடாது எனக் கருதும் வெளியீட்டாளரால் திருவள்ளுவர் ஆண்டு குறிப்பது மறுக்கப்படுகிறது. சில இதழ்களில் வெளியீட்டாளர் விரும்பினாலும் ஆசிரியரின் உரிமை அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப் பெறுவதில்லை. தமிழ் நாட்டிலுள்ள தொலைக்காட்சி நிறுவத்தினர், திருவள்ளுவர் ஆண்டைக் குறிக்க விரும்பினாலும், தில்லியின் கொள்கை முடிவு தடையாக உள்ளது.

            திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்துவதில் உள்ள குறைபாட்டையும் இங்கே நாம் குறிப்பிட்டாக வேண்டும். தமிழ் ஆண்டுக் காலவட்டம் அறுபதிற்குமான பெயர்கள் தமிழில் இல்லை; இப்பெயர்களே தமிழை இழிவு படுத்துவனவாக உள்ளன. முன்பு இக்காலப்பகுப்பு முறை இருந்து இருக்கலாம். பின்னாளில் இடப்பட்ட பெயர்கள், நமக்கு இழிவு தருவனவாகவே உள்ளன. இவ்விழிவினைப் போக்கவும், தொடர் ஆண்டைக் குறிக்கவும் எழுந்த உணர்வின் வெளிப்பாடே திருவள்ளுவர் ஆண்டு. அவ்வாறிருக்க நாம் திருவள்ளுவர் ஆண்டுடன் சமகிருதத்தில் உள்ள ஆண்டு பெயர்களையும் குறிக்க வேண்டும் என்பது இழிவைத் துடைக்க முழுமனமின்றி ஒப்புக்குப் பிறப்பிக்கப்பட்டதாகவே உள்ளது. அதற்காக இப்பெயர்களை மொழி பெயர்த்து மேலும் இழிவு சேர்க்க வேண்டா. எனவே 60ஆண்டுப் பெயர்களைக் குறிக்க வேண்டா எனத் தெளிவாகவே ஆணை பிறப்பிக்க வேண்டும்.

            மேலும் மற்றொரு குறைபாடும் உள்ளது. ஆங்கில ஆண்டின் 28(29) 30, 31 நாட்கள் உள்ள திங்கள் யாவை என்பது உலகம் முழுவதும் ஒரே வகையாகத்தான் உள்ளது. ஆனால் தமிழில் 29,30,31,32 நாட்கள் உள்ள திங்கள் யாவை என்பதில் தமிழ்நாடு அரசு வெளியிடும் நாட்காட்டியிலும், தனியார் வெளியிடும் நாட்காட்டிகளிலும் வேறுபாடுகள் உள்ளன. இதில் குழப்பமன்றி ஒரே சீராக அனைவரும் கடைபிடிக்கும் வண்ணம் நாள்கணக்கைத் தெளிவாக வரையறுத்து அதனையே அனைவரும் பின்பற்றுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

            திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்த வேண்டும் என்னும் அரசாணை அரசுத் துரைகளில் மட்டும் பயன்படுத்தினால் போதும் என்ற போக்கும் அரசுத் துரைகளிலும் ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்தினால் போதும் என்ற வழக்காறும் உள்ளது போல்தான் ஆட்சிமொழிச் செயலாக்கம் குறித்த ஒவ்வோர் ஆணையின் நிலைப்பாடும் உள்ளது. எனவே ஆட்சிமொழிச் செயலாக்கம் குறித்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாலோ, இனி பிறப்பிக்கப்படுவதாலோ ஆட்சிமொழிச் செயலாக்கம் முழுமையைடையும் என நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

(இனியும் காண்போம்)

இலக்குவனார் திருவள்ளுவன்