(தோழர் தியாகு எழுதுகிறார் : நந்திதா அக்குசரின் பொதுக் குடியியல் கட்டுரை – தொடர்ச்சி)

“பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (5)

இனிய அன்பர்களே!

பொதுக் குடியியல் சட்டம் பற்றிய நந்திதா அக்குசரின் கட்டுரை (தாழி மடல் 288) படித்தீர்கள் அல்லவா? மீண்டும் படியுங்கள். பொதுக் குடியியல் சட்டம் பற்றிய வினாவைப் பாசக எதிர்ப்பு என்ற ஒற்றைக் கோணத்தில் பார்த்தல் எப்படிப் பிழையானது என்பதை விளங்கிக் கொள்ள அது உதவும்.

இயங்கியல் அணுகுமுறையோடு இச்சிக்கலில் நாம் முகங்கொடுக்க வேண்டிய முரண்பாடுகளையும் நந்திதா வரிசைப்படுத்துகின்றார். முதனிலை, எதிர்நிலை, சேர்நிலை (thesis, antithesis, synthesis) எனும் எகலின் ஆய்வுமுறைக்கு இக்கட்டுரை விளக்கமாக அமைகிறது.

இயற்கையிலும் குமுகத்திலும் பல்திற முரண்பாடுகள் இயக்கத்தில் உள்ளன. நாம் அவற்றை ஆய்வுநோக்கில் பிரித்தறியும் தேவை உள்ளதே தவிர உண்மையில் அவை பின்னிப் பிணைந்து இயங்குகின்றன. ஒன்றை ஒன்று சார்ந்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் இயங்குகின்றன.

பொதுக் குடியியல் சட்டத்தை எடுத்துக் கொண்டால் நாம் முகங்கொடுக்க வேண்டிய உரிமை முரண்பாடுகள் இவை:

பெண்ணுரிமைகளும் பழங்குடி உரிமைகளும்; பெண்ணுரிமைகளும் சமயச் சிறுபான்மையினரின் உரிமைகளும்; பெண்ணுரிமைகளும் மனிதவுரிமைகளும்.

இந்த உரிமைகள் அனைத்தையும் வரலாற்றின் இந்தக் கட்டத்தில் – இந்தக் காலத்திலும் இந்தக் களத்திலும் – இணக்கப்படுத்தி ஈடேற்றம் பெறச் செய்யும் போராட்டத்தில் பாசிச எதிர்ப்புக்கும் தேசியத் தன்தீர்வுரிமைக்குமான பங்கு குறித்தெல்லாம் விரிவாக ஆய்வு செய்தாக வேண்டும். உரிமைக் கருத்தியலின் இன்றியமையாக் கூறுகளில் ஒன்றாக பெண்ணியத்தை ஏற்றுக் கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை. ஆனால் அது மட்டுமே தனித்தியங்கி வெற்றி பெற முடியும் என்று நான் கருதவில்லை. நந்திதா என்ன கருதுகிறார் என்று இந்தக் கட்டுரையிலிருந்து என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

அவருடைய ‘பெண்கள் சட்டம் குறித்த தெளிவரை‘ ஆங்கில நூலை(DEMYSTIFICATION OF LAW FOR WOMEN) தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன். படித்து விட்டுச் சொல்கிறேன்.

பொதுக் குடியியல் சட்டம் பற்றிய உரையாடலை அடுத்தடுத்துத் தொடர்வோம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 289