(தோழர் தியாகு எழுதுகிறார் : நாம் வந்த பாதை தவறு – தொடர்ச்சி)

கீற்று நேர்காணல் (2)(இ) : மினர்வா & நந்தன்


மூலதனம் தமிழாக்கம்


சிறையில் இருக்கும் போது நீங்கள் செய்த மிக முக்கியமான பணி மூலதனத்தை மொழிபெயர்த்தது. அந்த எண்ணம் எப்படி ஏற்பட்டது?

சிறைக்குச் செல்லும் வரை மார்க்குசு, இலெனினின் எழுத்துகளை அதிகம் படித்தது இல்லை. படித்திருந்தால் சாரு மசூம்தாரின் எழுத்துகள் என்னை ஈர்த்திருக்காது. சிறைக்குள் நான் முதலில் படித்தது இலெனினின் புத்தகங்கள். அதுதான் எல்லாப் புத்தகங்களையும் தேடிப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. மார்க்குசின் கூலியுழைப்பும மூலதனமும் போன்ற சிறுசிறு புத்தகங்களைப் படிக்கும் போதுதான் இதற்கெல்லாம் அடிப்படை மார்க்குசின் ‘மூலதனம்’ என்பது தெரிந்தது. என்னுடைய மாமாதான் அக்கா வழியாக மூலதனம் ஆங்கிலப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தனுப்பினார்.

சிறையில் இருந்த தோழர் இலெனினும், ஏ.சி..கே.வும் நான் மூலதனத்தை மொழிபெயர்க்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
(அப்போது நாங்கள் தூக்குக் கைதிகள். 1974 ஏப்பிரலில் தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் கைதிகளாகி விட்டோம். அந்த ஆண்டு மே மாதம்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க சிறைப் போராட்டம்.)
1975இல் மொழிபெயர்ப்பு வேலையை ஆரம்பித்தேன். 76 நடுவில் மூலதனத்தின் முதல் பகுதியை மொழிபெயர்த்து முடித்து விட்டேன். 77இல் என்னை மதுரை சிறைக்கு மாற்றினார்கள். அங்கிருந்து மொழிபெயர்த்த பகுதிகளைத் தோழர் ஏ. பாலசுப்பிரமணியத்துக்கு அனுப்பினேன். அவர் என்.சி.பி.எச்.-இடம் ஒப்படைத்தார். அவர்கள் இரா. கிருட்டிணையாவிடம் கொடுத்து கருத்துக் கேட்டார்கள். அவர் நல்ல மொழிபெயர்ப்பாளர். சோவியத்தில் 12 வருடங்கள் தங்கி இருந்து பல புத்தகங்களை மொழிபெயர்த்தவர். பல மூலதன மொழிபெயர்ப்புகளை மறுதலித்தவர். ஆனால் அவர் என்னுடைய புத்தகத்தை வெளியிடலாம் எனக் கருத்து தெரிவித்தார்.

மொழிபெயர்ப்பை மாசுகோவிற்கு அனுப்பினார்கள். அவர்கள் மூன்று பகுதிகளையும் சேர்த்து வெளியிடலாம் எனக் கருத்து தெரிவித்தார்கள். 79 கடைசியில் மீதமுள்ள இரண்டு தொகுதிகளையும் மொழிபெயர்த்துத் தருமாறு தோழர் பாலசுப்பிரமணியம் என்னிடம் கேட்டார். அப்போது நான் சென்னை சிறையில் இருந்தேன். 80 சனவரி இறுதியில் தொடங்கி ஏப்பிரல் 22ஆ ம் தேதி இரண்டாம் தொகுதியை மொழிபெயர்த்தேன். தினமும் இவ்வளவு நேரம் எனத் திட்டமிட்டு இந்த வேலையைச் செய்தேன். ஒருநாள் இரவு இரண்டு மணிக்கு ஆரம்பித்து மறுநாள் இரவு இரண்டு மணி வரை கூட எழுதியிருக்கிறேன்.

மே முதல் நாள் மூன்றாம் தொகுதியை ஆரம்பித்து நவம்பர் 7ஆம் நாள் மொழிபெயர்த்து முடித்தேன். என்னுடைய புத்தகங்களோடு கலந்து அதை வெளியே அனுப்பினேன். அதன் பிறகு அடுத்தடுத்த வருடங்களில் திருச்சி, கடலூர் எனப் பல சிறைகளுக்கு மாற்றப்பட்டேன். அந்த நேரத்தில் என்னுடைய மொழிபெயர்ப்பு மாசுகோவில் அச்சாகிக் கொண்டிருந்தது. அச்சகத்தில் வேலை செய்பவர்களுக்குத் தமிழ் தெரியாததால் ஒவ்வொரு எழுத்தையும் பெரிதாக வடிவமைத்து வைத்துக்கொண்டு உருவத்தைப் பார்த்து ஒவ்வொரு எழுத்தாக அச்சேற்றிக் கொண்டிருந்தார்களாம்.

அந்த நேரத்தில் சோவியத்து வீழ்ந்தது. இதில் என்னுடைய மொழிபெயர்ப்பும் காணாமல் போனது. ஆனால் என்.சி.பி.எச்.-இடம் அதனுடைய தட்டச்சு வடிவம் இருந்தது. அதை அவர்கள் ஒரு காப்பிரைட்டரிடம் கொடுக்க அவர் அதை் தப்பும் தவறுமாகத் திருத்தி வைத்திருந்தார். அதை மீண்டும் திருத்தி வடிவமைப்பதற்காக, ‘மூன்று வருடங்கள் தொடர்ந்து மாசுகோவில் தங்கியிருக்க மொழிபெயர்ப்பாளரை அனுப்ப முடியுமா? என்று மாசுகோவில் இருந்து கேட்டார்கள். நான் அப்போது சிறையில் இருக்கிறேன். விடுமுறையில் இரண்டு மூன்று நாட்கள்தான் வெளியில் வந்து போக முடியும். இதற்கு முன்னரே என்னுடைய தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதைக் குறிப்பிட வேண்டும்.

எனவே புத்தக வடிவமைப்பைச் சென்னையிலே செய்யலாம் என முடிவெடுத்து நான் சென்னை சிறைக்கு மாற்றல் வாங்கி வந்தேன். சிறையில் இருந்து கொண்டே அதன் திருத்த வேலைகளில் ஈடுபட்டேன். 85 நவம்பர் கடைசியில் விடுதலையானேன். மொழிபெயர்ப்புக்குத் தேவைப்பட்டது இரண்டு ஆண்டுகள்தான். ஆனால் அதைத் திருத்தி அமைப்பதற்கு ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டன. அத்தனை உழைப்பையும் கொடுத்து எல்லா வேலைகளையும் முடித்த பிறகு புத்தகம் வெளிவர வேண்டா என என்.சி.பி.எச். முடிவெடுத்து விட்டார்கள்.

கலைஞர் ஆட்சிக்கு வந்ததைப் பயன்படுத்திக் கொண்டு நாகநாதன் சமதக்கினியின் மூலதன மொழிபெயர்ப்பைக் கொண்டுவர முயன்றார். கலைஞரின் முன்னுரையோடும் ஐந்து இலட்ச உரூபாய் நிதிஒதுக்கீட்டோடும் அது வெளிவந்தது. மூலதனம் என்ற பெயரில் அது மிக அபத்தமாக வந்த புத்தகம்.

அப்போதும் ‘செலவு அதிகமாகும்’ எனக் கூறி என்னுடைய புத்தகத்தை வெளியிட என்.சி.பி.எச். யோசித்தது. ‘முன்வெளியீட்டுத் திட்ட அறிவிப்பு வெளியிடலாம்’ என்ற யோசனையைக் கூறினேன். அதன்படி பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டார்கள். ஊர் ஊராகப் போய்ப் பேசினேன். நல்ல வரவேற்பு இருந்தது. புத்தகமும் வெளிவந்தது.

என்னுடைய மொழிபெயர்ப்பில் முதல் புத்தகம் மட்டும்தான் சரியாக வந்திருப்பதாகக் கருதுகிறேன். இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் புரிந்து கொள்ளக் கடினமானவை. மார்க்குசு முதல் தொகுதிக்காக இருபத்தைந்து ஆண்டுகள் செலவிட்டார். பிரெடெரிக்கு எங்கெல்சு இரண்டாம் தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளும், மூன்றாம் தொகுதிக்கு 9 ஆண்டுகளும் எடுத்துக்கொண்டார். முதல் தொகுதி இலக்கியத் தரத்தோடு இருக்கும். இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் வெறும் ஆய்வுக் குறிப்புகளாக இருக்கும். இன்னமும் யாராவது தமிழில் அதை எளிமையாக மொழிபெயர்க்க முன்வந்தால் அவர்களுக்கு குறிப்புகள் தரத் தயாராக இருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் இன்னொரு முறை மூலதனத்தை எளிமையாக மொழிபெயர்ப்பது சாத்தியமா என்று தெரியவில்லை.

சிறையில் இருந்து வெளி வந்தபிறகு மா.பொ.க.(சிபிஎம்) கட்சியில் சேர்ந்தீர்கள். அதற்கு என்ன காரணம்?

நான் காங்கிரசில் இருந்த போதே மா.பொ.க.(சி.பி.எம்.) செயலாளராக இருந்த தோழர் ஏ.பி. (ஏ. பாலசுப்பிரமணியம்) அவர்களுடன் நல்ல பழக்கம் இருந்தது. சிறையில் இருந்த போது மீண்டும் அவருடன் தொடர்பு ஏற்பட்டது. நெருக்கடிக் காலக்கட்டத்தின் போது மா.பொ.க.(சி.பி.எம்.), “நாடு ஒரு சருவாதிகார அரசியலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் வல்லிய(பாசிச)த் தன்மையுடையவை” என்ற கருத்தை வெளியிட்டது. இது எங்களை ஈர்த்தது. இ.பொ.க.(சி.பி.ஐ.) இந்திய அரசின் அடக்குமுறைக்கு ஆதரவாக இருந்தது. மா.பொ.க.(சி.பி.எம்.)தான் அதை உறுதியோடு எதிர்த்தது.

‘சீனா போன்று ஒரே மொழி பேசக் கூடிய நாடாக இந்தியா இருந்தால், மா.பொ.க.(சி.பி.எம்.)தான் சரியான வழி காட்டக் கூடியதாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. அந்த நம்பிக்கை இப்போதும் இருக்கிறது. ஆனால் இந்தியா பலமொழிகளைப் பேசுகின்ற, பல சாதிகளைக் கொண்ட நாடாக இருப்பதால்தான் அது சாத்தியமில்லாமல் இருக்கிறது. சாதி, மொழி இரண்டு சிக்கல்களும் இல்லாத இந்தியாவிற்கு அறிவியல்பூர்வமான வேலைத் திட்டம் என்பது மா.பொ.க.(சி.பி.எம்.)உடையதுதான். ஆனால் அவை இரண்டும் இந்தியாவில் சிக்கல்களாக இருப்பதும், அவை குறித்து மா.பொ.க.(சி.பி.எம்.) கவனம் கொள்ளாமல் இருப்பதும்தான் இன்றளவுக்கும் அந்தக் கட்சிக்கு இருக்கும் பெரிய பலவீனம். நக்குசலைட்டுகளும் அப்படித்தான் இருந்தார்கள். சாதியை ஓர் உணர்ச்சி அடிப்படையில்தான் நாங்கள் அணுகினோம்.

தேசிய இன தன்வரையறை உரிமையையும் தோழர்கள் பாலசுப்பிரமணியம், சுந்தரய்யா போன்றவர்கள் ஆதரித்தார்கள். இராமமூர்த்தி, இ.எம்.எசு. போன்றவர்கள் எதிர்த்தார்கள். இந்த ஒரு நிலைப்பாட்டைத் தவிர மற்றக் கொள்கைகளில் எங்களுக்கு மா.பொ.க.(சி.பி.எம்.)உடன் வேறுபாடு இருக்கவில்லை. எனவே மா.பொ.க.(சி.பி.எம்.-இல் சேருவது என முடிவெடுத்தோம். 75இல் இதுகுறித்து ஏ. பாலசுப்பிரமணியத்துக்குக் கடிதம் எழுதினோம். அவர் எங்களைச் சிறையில் வந்து சந்தித்தார். அதிலிருந்து நாங்கள் சி.பி.எம். உறுப்பினர்கள்தான். சிறையிலிருந்து விடுதலையாகி, பின்பு கட்சியிலிருந்து நான் நீக்கப்படும் வரை மா.பொ.க.(சி.பி.எம்.) உறுப்பினராக இருந்தேன்.

(மா.பொ.க.)சி.பி.எம். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள், தமிழ்த் தேசியத்திற்கான சாத்தியங்கள், தமிழ்த் தேசியவாதிகள் தனித்தனியாக செயல்படுவது, பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்கியது, சல்லிக்கட்டு தமிழரின் அடையாளமா உள்ளிட்ட கேள்விகளுக்கு தியாகுவின் பதில்கள் நிறைவுப் பகுதியாக – அடுத்து…)

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 298