(தோழர் தியாகு எழுதுகிறார் 85 தொடர்ச்சி)

பெரியாரும் திருக்குறளும் 1/2

அன்பர் வாலாசா வல்லவன் எழுதுகிறார்

இன்று காலை பெ.ம.வின் அடிப்பொடி கதிர்நிலவன் “பெரியார் திருக்குறளை மலம் என்று சொன்னார், இதோ பார் ஆதாரம் என்று காட்டுவதற்காக ஒரே ஒரு பத்தியை மட்டும் எடுத்துப் பதிவிட்டிருந்தார். முழுமையாகப்  பதிவிடும்படி கேட்டேன். அவர் பதியவில்லை. ஆனைமுத்து ஐயா தொகுத்த பெரியார் சிந்தனைகள் நூலிலிருந்து முழுமையாகப் பதிவிட்டுள்ளேன்.

“குறளும் – நானும்”

பேரன்பு படைத்த தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! வணக்கம். 

வள்ளுவர் குறளையும், அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது, பலர் என்னிடம், “எல்லாம் போய் விட்டால், நமக்கு எதுதான் நூல்!’ என்று கேட்பார்கள். நான், ‘இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் “அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?” என்று பதில் கூறுவேன். 

ஏறக்குறைய மத சம்பந்தமான காரியங்களில் மக்களுக்கு நம்பிக்கையே இருக்கக் கூடாது என்று கருதி அந்தப்படியாகவே பிரச்சாரம் புரிந்து வந்தேன். பிறகு நாளாக ஆக நல்ல அறிவாளிகளோடு – அறிவாளி என்றால் பண்டிதர்களோடு அல்ல, பொது அறிவுள்ள மக்களோடு, திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு – நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகிய போது குறளின் மேன்மை பற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள். நான், ‘இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே, இந்த இடத்தில் இப்படியிருக்கிறதே!’ என்று கேட்டேன். ‘அது பரிமேலழகரின் உரை; அது குறளாசிரியர் கருத்தல்ல’ என்று எடுத்துக் கூறி உண்மை உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாத்திரப்படி குறளுக்கு உரை எழுதி விட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து, குறளின் உண்மைக் கருத்தை எடுத்துக் காட்டினார்கள். 

அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றிப் பேசுகிறேன். அதுவும் அதையே ஆதாரமாக (Authority) எடுத்துக் கொண்டல்ல; ‘நான் சொல்லுகிற கருத்து- அதிலும் இருக்கிறது பார்!’ என்று கூறி வந்தேன். சிறிது குறை இருந்தாலும் இப்போதைக்கு இது இருக்கட்டும் என்று கருதினேன். 

புராணக் கருத்துகளிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் நம் மக்களுக்குப் பகுத்தறிவு வளர்ந்த பின், மூடக் கருத்துகள் ஆட்டம் கண்ட பின்தான் குறளின் பொருளை உணரும் அறிவு மக்களுக்கு உண்டாகும் என்று கருதி, முதலில் மூடக் கருத்துகளை அகற்றும் பணியில் பிரசாரம் புரிந்து வந்தேன். இன்று மக்களுக்குக் கொஞ்சம் அறிவுத் தெளிவு-பகுத்தறிவுத் தன்மை வளர்ந்து இருக்கிறதால் இன்று குறளைப் பற்றிப் பேசுகிறேன். 

‘குறளில் இப்படியிருக்கிறதே! நீ ஏன் இப்படி நடக்கிறாய்?’ என்று கேட்காதீர்கள். நான் சொல்லுவது அதில் இருக்கிறது என்ற அளவில்தான் – நான் குறளை ஆதரிக்கிறேன்; அதை அப்படியே முழுவதையும் ஒத்துக் கொள்ள மாட்டேன். 

உதாரணமாக, மாமிச உணவு உண்பதை வள்ளுவர் மிக வன்மையாகக் கண்டிக்கிறார்;  கொல்லாமையின் உயர்வு குறித்து வெகுவாக எழுதியிருக்கிறார். குறளிலேயே அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே என்பதற்காக நான் மாமிச உணவு உட்கொள்ளாமல் இருக்க முடியுமா? மக்களுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் குறள்தான் ஆதாரம் என்று சொல்லவில்லை. 

குறளிலிருந்து உங்களுக்கு வேண்டியதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேண்டாததைத் தள்ளிவிடுங்கள் என்றுதான் கூறுகிறேன். 

ஒரு கடையில் எல்லா சாமான்களும் கிடைக்கும் என்றால், அந்தக் கடையில் உள்ள எல்லா சாமான்களையும் நாம் வாங்கிக்கொண்டு வருவோமா? நமக்குத் தேவையான சாமான்களை மாத்திரந்தான் வாங்கிவருவோம். அது போலவே, குறளில் வேண்டியதை எடுத்துக் கொண்டு வேண்டாததை விட்டு விடுங்கள் என்று கூறுகிறேன். 

குறளில் ஏதோ சில குறைகள் இருக்கலாம் ; இருக்க முடியும். ஏனென்றால், அது 1950ஆவது வருடத்திய (இன்றைய) மாதிரி அல்ல. 2000 வருடத்திற்கு முந்திய சங்கதி. திருவள்ளுவர் திரிகாலமுணர்ந்த முனிபுங்கவ ரென்றோ, ஞானியென்றோ நாம் கொள்ளவில்லை. 2000 வருடங்களுக்கு முன்னர் ஒருவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் மின் விளக்கு, ஒலிபெருக்கி, இயக்கி முதலியவற்றைக் கண்டிருப்பானா? மதவாதிகள் வேண்டுமானால், ‘எல்லாக் காலத்தையும், முக்காலத்தையும் உணர்ந்த மகான் இவர்’ என்று பலரை விளம்பரப்படுத்தலாம். ஆனால், அது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. நாம் திருவள்ளுவரை மகான் என்றோ அவதார புருசரென்றோ ஒத்துக் கொள்ள மாட்டோம். 

திருவள்ளுவர் நல்ல அறிவாளி, ஆராய்ச்சிக்காரர். அந்தக் காலத்தில் மக்களிடம் பரவி இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் என்ற அளவில்தான் ஒத்துக் கொள்ள முடியும். 

அந்தப்படியிருக்க, 2000 ஆண்களுக்கு முன்னதாகத் திருவள்ளுவர் சொன்னவை எல்லாம் அப்படியே இன்றைக்கும் ஏற்றதாக இருக்க முடியுமா? இன்றைய நிலைக்கு நான் பேசும் கொள்கைகள் சரி; என் திட்டங்கள் சரி என்றால் எனக்குப் பிறகும், இன்னும் 100, 200, 1000 வருடங்களுக்குப் பிறகும் என் கொள்கைகள் – நான் வகுத்த திட்டங்கள் கொஞ்சங்கூட மாற்றப்படாமல் அப்படியே இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? அந்தப்படி இருக்க முடியுமா? 

காலத்திற்கு ஏற்ற முறையில்தான் எண்ணங்களின் விரிவும், கொள்கை, திட்டங்களும் இருக்க முடியும். போர் முறை பற்றித் திருவள்ளுவர் வில்,  வாள்,  வேல்,  கேடயம் என்ற ஆயுதங்களை வைத்துத்தானே எழுதியிருக்கிறார்? இன்று எழுதப்பட்டால் அணு குண்டைப் பற்றி எழுதுவார்கள் ; நாளைக்கு வேறொன்று. இந்தப் படியாகத்தானே மாறிக் கொண்டே போகும்! அப்படியிருக்க, எதையும் மாற்றக் கூடாது என்பது என்ன நியாயம்? ஆரியக் கருத்துகள், தத்துவங்கள் நம் நாட்டில் நுழையாதிருந்தால், நமக்குக் குறளே ஆதாரமாக – குறளே நம்முடைய மதமாக இருந்திருக்கும். ஆரியர்கள் திருவள்ளுவரை முதலிலேயே – பிறப்பிலேயே இழிந்தவராக ஆக்கி விட்டார்கள். 

இந்து மதத்தில் எந்தக் காரியங்களைச் செய்தவராக இருந்தாலும், அதிசயமான அற்புதமான-நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகளை அவர்களின் பிறவியில் – வரலாற்றில் புகுத்துவார்கள். இவன் குதிரைக்குப் பிறந்தான்; இவன் குரங்குக்குப் பிறந்தான்; இவன் யானைக்குப் பிறந்தான்; இவன் செத்துப் போனவனை உயிர் மீட்டு எழச்செய்தான்; இவன் மண்ணைச் சர்க்கரையாக்கினான்; குருடனுக்குக் கண் கொடுத்தான் – என்பது போன்ற அதிசயங்களைப் புகுத்தி விடுவார்கள். ஏனென்றால், அப்போதுதான் அதிலிருக்கும் குற்றங் குறைகள் பற்றி – ஆபாசங்கள் பற்றி யாரும் கேள்விகள் கேட்க மாட்டார்கள் என்ற கருத்தோடு! 

(தொடரும்)

தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 52