(வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 1/3  தொடர்ச்சி)

வரலாறு படைக்கும் அன்வர்-பானுமதி : thalaippu_varalaarupadaikkum_anwar_banumathi

2

   ஈழத் தமிழர்களின் மரணம் இவரது மனத்தைப் பல்லாயிரச்சுக்கலாக உடைத்துப் போட்டுள்ளது. அந்த உடைந்த சில்லுகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதையாகக் கண்ணீர் சிந்துகின்றன. மரணம் பேசியதைப் போலவே இவரது கவிதைகளில் மயான பூமியும் பேசுகிறது. மனிதனின் மரணத்தைத் தன் மடியில் தாங்குவது மயானம். அம்மயானமே,

மனித எச்சங்களெல்லாம்

மக்கிப் போனவுடன்

தூது அனுப்புகிறேன்

 

அதுவரை உங்கள்

துப்பாக்கி முனையை

குத்தகைக்கு விடுங்கள்

குருவிகள் கூடு கட்டி

குடும்பம் நடத்தட்டும் !

என்று படுகொலைகளின் சுமை தாங்காமல் விம்மி வெடிக்கிறது அன்வரின் கவிதையில்.

மானுடர்க்குக் கலவிதான் கவலையைத் தீர்க்கும் மாமருந்து. அதனால்தான்,

காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம்

கலவியிலே மானுடர்க்குக் கவலைதீரும்

…. … …. … …. …

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே

என்று காதல் செய்யத் தூண்டுவார் பாரதி.  நஞ்சுபோல ஏறி வரும் விலைவாசி உயர்வால் மனிதன் இது போன்ற அடிப்படை இன்பங்களைக் கூடத் துய்க்க முடியாமல் போய் விடுகிறது என்னும் சமுதாயச் சூழலை,

சீறும் பாம்பாய்

சீறிப்பாய்கிறாள்

சில அடி தூரம்

தள்ளியே படுக்கச் சொல்லி

என் அன்பான வீட்டுக்காரி

 

காரணம் கேட்டால்

கடுப்போடு சொல்கிறாள்

பொட்டிப்பால் மா

பொல்லாத விலையாம் !

 

என்னும் இக்கவிதை கூறுகிறது. மெல்லிய தூரிகையால் ஒப்பனை செய்யப் பெற்ற ஓவியப் பாவையாய் அழகு காட்டுகிறது இக்கவிதை.

  உலகில் முரண்கள் எல்லாம் இரட்டையாக இருக்கும். இன்பம் துன்பம், இரவு பகல், நல்லன கெட்டன, அழுகை சிரிப்பு என்பன போல. வறுமையும் வளமையும் முரண்பட்ட இரண்டே. உலகெங்கும் மாட மாளிகையும் கூரைக் குடிசையுமான ஏற்றத் தாழ்வை மாற்ற எத்தனையோ பேர் போராடியும் இன்றளவிலும் சமமாக்க முடியவில்லை.

“வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்” என்று பாரதி சொல்வான். இங்கோ வீணாகப் போகும் மிச்ச உணவைக் கூட பிச்சைக் காரர்களுக்கும் இடாத கொடு மனக்காரர்களே பெரும்பாலும் வளமான வாழ்க்கை வாழ்கின்றனர். இதனைக் கண்டு பொங்கும் கவிஞர்,

சிறுகுடலை

பெருங்குடல் தின்றுவிடுமளவு

பசிமயக்கம் தலைசுற்ற

 

நாற்றமெடுக்கும் பிரியாணிக்கு

மண்ணள்ளி போடுகிறேன்

என்று கூறும் போது இருப்பதை எல்லாம் பொதுவில் வைக்கும் காலம் வராதா என்று படிப்பவரை ஏங்கச் செய்து விடுகிறார்.

  விலைவாசி உயரும் போது ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் குறைவதும் வறுமை நிலையை அடைவதும் தவிர்க்க முடியாததாகிறது. இதன் முடிவு கடன். என்ன பாடு பட்டும் துண்டு விழும் பற்றாக்குறையால் பட்ட கடனைக் கட்ட முடியாமல், கடன் பட்டார் விம்முவதை,

ஓடி ஆடி

உடலைப் பிழிந்து

உறக்கம் தொலைத்தாலும்

 

ஊனப்பட்டுத்தான்

போகிறது

என்

முயற்சி எனும்

முடிவிலிகள்

ஓடுவது

நான் ஆயினும்

துரத்துவது

கடன் ஆயிற்றே ?

என்று புனைந்துள்ளார். இக்கவிதை ஓட ஓட விரட்டும் கடன்காரர்களைக் கண் முன் நிறுத்துகிறது.

  முதியோர் இல்லங்கள் ஒருபுறம் பெருகி வருகிறது. மதிப்பு கருதி சிலர் முதியோர் இல்லங்களுக்குத் தம் பெற்றோரை அனுப்புவது இல்லை என்ற போதும் இல்லத்தில் அவர்களை முறையாகப் பாதுகாப்பதும் இல்லை. பெற்றோர் தம் மக்களின் இல்லத்திலேயே அகதிகளாகி வருந்தும் நிலையைப் படம் பிடிக்கிறார் பின் வரும் கவிதையில்.

 

ஒற்றைப் பீங்கான்

ஒடிந்த குவளை

 

ஒரு நாற்காலி

நலிந்து போன மெத்தையென

நான்கு கண்களுக்கு மறைவாக

 

நாள்பட்ட சளியும்

நரை விழுந்த தலையுமாய் !

பிள்ளை வீட்டுத் தாழ்வாரத்தில் 

இக்கவிதை, நிச்சயமாகப் படிப்பவரின் கண்களுக்குள் விழுந்த தூசாக உறுத்தும். அப்படிப் பட்டவர்களின் மனத்தைத் திருத்தும் என்பது உறுதி. சற்றேறக் குறைய இதே கருத்தைக் கூறும் ‘வயோதியக் குழந்தை’ என்னும் கவிதையும் இந்த இளைஞனின் முதியவர்களை மதிக்கும் பண்பை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

 

அட்டை-தடம்தொலைத்ததடயங்கள் : attai_thadamtholaitha_thadayangal

 

அன்புடன்…

எழுத்தாளர், முனைவர். ப. பானுமதி

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,

வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி

அண்ணாநகர் கிழக்கு,

சென்னை 600 102

99412 98850

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum