(வள்ளுவர் சொல்லமுதம் 6 : அன்பும் அறமும் : அ. க. நவநீத கிருட்டிணன் – தொடர்ச்சி)

வள்ளுவர் சொல்லமுதம்

ரு. அன்பும் அறமும்.02

“முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
தற்காய் உதிர்தலும் உண்டு”

என்பது அம் முனிவர் மொழி. குழந்தை பிறந்த வுடனே இறந்து போதலும் உண்டு. தக்க இளம் பருவத்தில் இறத்தலும் உண்டு. முறையே முதுமை பெருகி மறைதலும் உண்டு. ஆதலின், “யாம் இளை யம் என்னது கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்‘ என்று மக்களே ஏவினர். இவ் அறத்தை ஆற்றும் முறைமையை விளக்கப் போந்த முனைப்பாடியார் என்னும் மூதறிஞர், அறத்தைப் பயிர் என்று உருவகப் படுத்தினர். அறக்கதிர்ப் பைங்கூழைப் பயிரிடும் திறத்தைத் தெளிவுறக் காட்டுகிறார்,

இன்சொல் விளைநிலன. ஈதலே வித்தாக

வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி

அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்

பைங்கூழ் சிறுகாலைச் செய் ’’

என்பது அப்புலவரது அருமைப் பாடல். அறமாகிய கதிரைத் தோற்றும் நறும்பயிர் செழிக்க நன்னில மாய் அமைவது இன்சொல்லே. அவ் இன்சொல் ஆகிய விளைநிலத்தில், ஈதலை வித்தாக விதைத்தல் வேண்டும். இடையே தோன்றும் வன்சொற்களாகிய களைகளைப் பிடுங்க வேண்டும். உண்மை என்னும் உரத்தை இடுதல் வேண்டும். அன்பு என்னும் தண்ணீரைப் பாய்ச்சுதல் வேண்டும். இவ்வாறு ஈதலாகிய விதையை விதைத்துப் பயிர் செய்தால் அறமாகிய கதிரைத் தரும் பெரும்பயிர் அணியுற்று ஓங்கி வளரும் என்று உரைத்தருளினார் அப் புலவர் பெருமான்.

இங்ஙனம் அறத்தைப் புரிவதால் விளையும் பயன் யாது? இம்மையில் செல்வமும் மறுமையில் வீடுபேறும் இனிது பெறுவர். எடுக்கின்ற பிறவிதோறும் இனிய துணையாக வந்து பயனைத் தந்திடும். இவ்வாறு பயன் தரும் இயல்பை, அளவைகள்கொண்டு நிறுவ வேண்டாம்; கண்களாலேயே நேரில் கண்டுகொள்ளலாம் என்பர் திருவள்ளுவர். பல்லக்கைச் சுமப்பவன், அதில் அமர்ந்து செல்லுபவன் ஆகிய இருவர் நிலைகளி னின்றே அறத்தின் பயனை அறிந்துகொள்ளலாம் என்று சொல்லுவர்.

அறத்தை ஆற்றுதற்குரிய நிலைகளை இரண்டாக வகுத்தார் நம் பொய்யில் புலவர். அவை இல்லறம், துறவறம் என்று சொல்லப்படும். இவற்றுள் இல் லறமே நல்லறம் என்றும் அதுவே முதன்மை வாய்ந்தது என்றும் மொழிந்தருளினர். அறம் என்று சிறப் பித்துச் சொல்லத்தக்கது இல்லறமே என்பதை நன்கு வலியுறுத்துவார். அறன் எனப்பட்டது இல்வாழ்க் கையே, என்று உறுதி தோன்ற உரைப்பார். கருத் தொருமித்த காதல் மனையாளுடன் கனியும் சுவையும் போலக் கூடிக் களிப்புடன் நடத்தும் சிறப்பான இல் லறமே சீரிய நேரிய பேரறமாகும் என்பது தெய்வப் புலவர் திருவுள்ளம்.

தொடரும்)

வள்ளுவர் சொல்லமுதம்

வித்துவான் நவநீத கிருட்டிணன்