(சித்திரை 06, 2046 / ஏப்பிரல் 19, 2015 தொடர்ச்சி)

 

ஆ.வெ.முல்லைநிலவழகன்

ஆ.வெ.முல்லைநிலவழகன்

காட்சி – 21

(நாடகக்காட்சி – 7)

அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில்

இடம்      :     அருண்மொழி இல்லம்

நிலைமை  :     (அருண்மொழி பாடலைக் கேட்ட பூங்குயில்

அன்புக் கணவனை ஐயம் கொள்ள

திருவளர்ச் செல்வனோ திருத்தியதோடு

இன்பத்தைப் பொழியவும் செய்கிறான் ஆங்கே)

அரு       :      பொழிபிறை நனி நெற்றி! தோழி!

                                                                எழில் இதழ் கனிக்கொவ்வை! தோழி!

வழிகின்ற குழல் அருவி! தோழி!

பொழிகின்ற வாய் அமுதம்! தோழி!

விழி இரு ஒளி வைரம்! தோழி!

அழிவில்லாக்கனி இதுவாம் தோழி!

மொழி அரிச் சுவடியிலே! காதல்!

வழிதனி வைத்துவிட்டேன்!

வான் விடி நிற மேனி! தோழி!

வெண்முல்லைப் பல்வரிசை! தோழி!

தேன் கனிக் கவிகன்னம்! தோழி!

பூஞ்சுமை உடல் கொடியாம்? தோழி!

வான் மதிமுகம் என்றான்! தோழி!

இளந்தண்டு கை எனக்காம்! தோழி!

தேன் வெள்ளச் சொல்லாலே! தோழி!

மயிலென அணைத்து விட்டான்!

விந்தையோ நிகழ்ந்ததனால்! தோழி!

வேறொரு நினைவில்லை! பெற்ற!

தந்தைக்கு மறைத்திடலாம்! தோழி!

தாயவள் கண்டுவிட்டாள்! தோழி!

கந்தையாய் எண்ணாதே! தோழி!

கரை கடந்திடவில்லை! தோழி!

உந்தனின் துணை வேண்டும்! கள்ளப்!

                                                                புதுப்புண்ணை நான் மறைக்க!

பூங்       :     எந்தன் கவிஞரே! என்ன பாடினீர்?

எந்த உலகத்தில் உந்தப் பார்க்கிறீர்?

அரு       :     உற்றுக் கேட்பது குற்றமாகுமே!

கற்ற பாடத்தை காற்றில் விடுவதா?

பூங்       :     காற்றில் வந்ததால்! காதைத் தீட்டினேன்!

நேற்று சொன்னதை எண்ண மறுப்பதா?

அரு       :     கோபம் புரியுது! கொள்கை புரியுது;

தாபமிகுதியால் சங்கு ஒலிக்குதோ?

பூங்       :     காதல் மிகுதியால் மோதல் ஆனதோ?

ஊதல் காற்றென உள்ளம் வாடுதோ?

அரு       :     மனத்தில் நஞ்சை நீ ஊற்றி வளர்த்திட,

 தினத்தில் கொடியென வேர்கள் தோன்றுமே!

                (இருவர் விழிகளும் இனிய நதிகளாய்

திறமையோடவை இணையத் துடித்தன!)

(விழிகள் இரண்டுமே விழித்து மெல்ல

வழியும் காதலை விரித்து உரைத்தது)

இமைகள் மூடித் திறக்க

இதழ்கள் கூம்பி விரிய

கைகள் நெளிந்து ஓட

மெய்கள் ஊடிப் பிணைய

பாதம் பாங்காய் அமைய

நாதம் மூச்சாம் ஆங்கே!

வேதமும் ஆங்கே ஒன்றாம்

வேண்டிய பொருளும் ஒன்றாம்

இன்றென்ன இன்பம் என்றே

எழிலார் நங்கை குழற

நன்றே சொன்னாய்! என்றே

நங்கைக்கு நவின்றான் தேனை!

(காட்சி முடிவு)

Sparrow (பாடும்)