aalamaram_banyantree01

அணுவுக்குள் இருக்கும்

ஆற்றலைப் போல

மிகச்சிறு விதைக்குள்

அடங்கியிருந்த பேருருவம் நான்.

ஆலமரம்

அற்புத அருமரம்.

ஈகக் குருதியின்

சேற்றில் முளைத்து

உகங்களின் தாகம்

தேக்கிய விழிகளின்

கண்ணீர்த் துளிகளால்

துளிர்த்த மரம் நான்.

விரிந்து கிளை பரப்பி

விழுதுவிட்டு அடர்ந்து

பசுமையாய் பரந்து நிற்கிறேன்

என்

படர்ந்த நிழலுக்காகவும்

பழத்தின் சுவைக்காகவும்

நேசமாய் வந்தமரும்

பறவைகளின் பாசறை நான்.

பற்பல வண்ணப் பறவை இனங்களின்

மொழிகள் என்னவோ வேறு வேறுதான்

பாடும் பண்ணின்

சிந்தனை மட்டும் என்றென்றும் ஒன்று.

நான் உழைக்கும் பறவைகளின்

உற்சாகக் கூடாரம்.

அவர்களின் ஒவ்வொரு உற்சவமும்

என் கிளைகளிலே அரங்கேற்றம்.

வாய்மைதான் வாழும் முறைமை

சமத்துவம் அன்பு அமைதி எல்லாம்

என் மாறாத பாடம்.

எனவே கழுகுகளையும் கோட்டான்களையும்

என் தன்மானத் தளிர்கள்

தடை செய்துவிடுகின்றன.

கூடு கட்டுவதற்கென்ன

குந்துவதற்குக்கூட

என் கொள்கைக் கொம்புகள்

இடம் தருவதில்லை.

கட்டணம் செலுத்தினாலும்

கண்டிப்பாய் அனுமதியில்லை.

காலங்களின் சுழிப்பில்

என் வேதனைகளும் சோதனைகளும்

சொல்லி முடியாதவை.

வரலாற்றில்அருந்திறல் மரம் நான்.

பசுமை மாறாத

பால் மனம் கொண்டதால்

வறட்சியைத் தாங்கி

வளர்ந்த மரம் நான்.

சில பறவைகள்

எங்கிருந்தோ வந்து

என் கனிகளைச் சுவைத்த பின்

எழும்பிப் பறந்து

என் தலை மீதே

எச்சமிட்டுச் செல்கின்றன.

சில

இங்கே பழம் தின்று

எங்கோ சென்று

கொட்டை போடுகின்றன.

சிலவோ

சிறகுகள் முளைக்கும்

சின்னப் பறவைகளின்

பிள்ளைப் பருவப் பேச்சில்

பிழைகாண முயன்று

முளைக்கும் சிறகுகளை

மொட்டையடிக்க முனைகின்றன.

என்னால் மரங்கொத்திப்

பறவைகளை மட்டும்

மன்னிக்க முடிவதில்லை.

என் ஆடையை உரித்து

அவமானப் படுத்துவதில் அல்லவோ

அவை ஆனந்தம் அடைகின்றன.

என்னில்

பொந்துகளை உண்டாக்கிப்

பாம்புகளை அழைத்துவரப்

பயணப்படுகின்றன.

நீரைத் தேடி நிலத்துக்குள் ஓடி

என் வேர்கள் எப்போதும்

களைப்பின்றி உழைக்கும்.

என் விதைகள் கசந்தாலும்

கனிகள் என்றும் இனிமையானவை.

என் முடிமுதல் அடிவரை

அன்றாடம் எனக்கு

அல்லல்கள் ஆயிரம்.

என் வேர்கள் பதிந்த மண்ணில்

அங்கங்கே வீசும்

கந்தக நெடியால் என்

கண்கள் கசிவதை கவனித்தீர்களா..

பாட்டுப் பறவைகளுக்கு மட்டுமே

பழம் தின்னக் கொடுக்கும்

ஏழை மரம் நான்.

வாழையைப் போல

வளைந்து கொடுக்கும்

வாய்ப்பு எனக்கில்லை.

என்னை வீழ்த்த முடியவில்லையே

என்று

புயல்கள் என்னிடம் வந்து

புலம்பிவிட்டுப் போகின்றன.

வெறும் காற்றுக்காகவா

கவலைப்பட போகிறேன்.

வெளிச்ச விழுதுகள்தான் என் வேர்கள்

காற்றில் ஆடினாலும்

பெருமிதமாய்க் கால்கள் பதிக்கும்.

ஆலமரம் நான்

அற்புத அருமரம்!

நன்றி: தாமரை, சனவரி 1991

     அனைத்து இந்திய வானொலி, 1995

 

poet ezhilventhan

–   முனைவர்  எழில்வேந்தன்

அலைபேசி: 9444995600