பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 4
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 3 தொடர்ச்சி)
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 4
உதாரன் – அமுதவல்லி
எண்சீர் விருத்தம்
அமுதவல்லி : பாராண்ட தமிழ்மன்னர்
பணிந்து காத்த
பைந்தமிழை வளர்க்கின்ற
புலவீர் வாழ்க
சீரார்ந்த தளையென்றும்
சிறப்பு நல்கும்
செவிக்கினிய தொடையென்றும்
அடிய ளந்து
நேராக வகுத்தளித்த
நெறியைச் சொன்னீர்
நீடுபுகழ்த் தமிழ்ப்பாவின்
வகைமை சொல்வீர்
வேராகிக் கிளைபரப்பல்
விளங்கச் சொல்வீர்
வென்றுலகைத் தமிழாள
வினைமு டிப்போம்
உதாரன் : கார்முழங்கிப் பொழிகின்ற
நீர்ப்பெ ருக்கில்
கழினியெலாம் பொதியாகக்
குவியும் செந்நெல்
போர்முழங்கி வருகின்ற
பகைவ ரெல்லாம்
புறங்கொடுக்கப் புவியெங்கும்
விரியும் மேன்மை
ஊர்முழங்கி ஒலிக்கின்ற
விழாப்பெ ருக்கில்
ஒருங்கிணையுங் காதலர்தாம்
மகிழும் நாட்டின்
பேர்முழங்கும் சீராட்சி
மன்னன் நங்காய்
பெருமைமிகு தமிழ்ப்பாவின்
வகைமை காண்போம்
பாவென்னும் சொல்லுக்கு
நமக்கு முன்னோர்
பரந்துபடும் ஓசையெனும்
பொருளைக் கொண்டார்
நாவொன்றும் ஒலியினிமை
செவியா லோர்ந்து
நால்வேறு திறமாக
வடிவங் கொண்டு
பாவினிய அகவலுடன்
கலிப்பா வெண்பா
பகுத்துரைத்தார் வஞ்சியுடன்
அவற்றின் மேலும்
தாவினிய தாழிசையை
விருத்தம் சேர்த்து
தக்கவாறு துறைவளர
வழிவ குத்தார்
சிந்து கண்ணி
அமுதவல்லி : வெண்பா என்னும் ஒண்பாவை – நான்
விளங்கிக் கொண்டு கவிபாட
நண்பாய்க் கொள்ளும் வகையோடு
நவில்வீர் இன்னே மகிழ்வோடு
நேரிசை வெண்பா
உதாரன்:
கட்டமைத்துச் சொல்லால் கருத்திழைத்துக் காலத்தால்
விட்டகலா வேர்ப்பலா வெண்பாவாம் – நெட்டுயிர்த்
தெண்ணரிய செய்தி யிதழ்மூடிக் கண்ணசைவில்
பெண்ணுரைக்கும் காதல் பெரிது
குறட்பா
பானையின் சோற்றுப் பதமாகச் செந்தமிழ்ப்
பாவினுக் கொன்றாம் குறள்
பேச்சைச் சுருக்குவர் சான்றோர் சிலசொல்லில்
மூச்சை விரிக்குந் தமிழ்
தன்மனத்தால் தான்மகிழுந் தன்மையாய்த் தான்பிறர்க்கு
நன்னயமே கொண்டொழுகல் நாடு
கற்றன வாய்ந்து கருத்தை யுணர்ந்தல்லால்
உற்றவ ருண்டோ அறிவு
மண்டுங் களிப்பிற்கு மற்றொன் றிலதென்க
தொண்டினுஞ் சீர்த்த பொருள்
நேரிசைச் சிந்தியல் வெண்பா
ஒப்பப் பொதுவாம் உடன்பிறந்த மக்கட்கு
தப்பென்ன கண்டீர் தரணியும் – அப்படியாய்
ஒப்பப் பொதுவாக்கல் நன்று
நாளைக்கு வேண்டி நலிவாரும் நாடோறும்
வேளைக்கொன் றாக விரும்பிக்- களைப்பாரும்
பூமிக்கு வேண்டாப் பொறை
இன்னிசைச் சிந்தியல் வெண்பா
வேட்டுவ நாய்க்கு விருந்தாமே வெள்ளாடு
ஏட்டறி வில்லா இளையோரு மற்றாவர்
தேட்டறிவு கொண்டார்க்குத் தேர்ந்து
காதொடிந்த ஊசியினால் கந்தலாடை தைப்பதோ
ஆதாய மில்லாமல் ஆற்றுநீரை மாற்றுகென்றே
வேதாந்தம் பேசுதலு மற்று
உன்றன் உரிமை வழங்கா தொளித்துன்
கடமையை வேண்டல் கயமையாம் என்றே
நடுங்காது கூறு நயந்து
மறுக்குங் குணமும் மனித வியற்கை
தடுக்குஞ் செயலைத் தகாதாய் விடுக்க
மயங்கும் பிறர்தாம் மதித்து.
நேரிசை வெண்பா
சொல்வன்மை மிக்கார்க்குச் சுற்றமென வேண்டாவாம்
கல்வன்மை கொண்டாளைக் காத்தொருவர் நில்லாரே
நல்லறிவு தேர்ந்தாரும் நாடுவரோ நம்பிக்கை
புல்லறிவுப் பொய்மதமும் போக்கு
அனைத்தும் படைத்தவன் ஆண்டவ னென்றால்
பிணைக்குந் துயர்க்குப் பிறர்யார் – பிணையல்
வினையும் விளைவும் விளைப்பவர் நாமோ
நினையின் நகையிது நீக்கு
கற்பித்தோன் முட்டாள் கயவன் பரப்பியோன்
கற்பனைக்கு மொவ்வாக் கடவுளை – முற்படத்
தற்புத்தி யேதுமின்றித் தான்வணங்கி நிற்போன்றான்
கற்காலப் பண்பின் கடை
மூக்கள வுண்ணுமொரு முந்நூறு பண்டமும்
நோய்க்கள வாகுமே யாக்கைக்கு – நோக்கின்
பகுத்தறிவா லாய்ந்து பயன்கொள்ளாப் பேதை
தொகுத்தறிவு தொல்லை தரும்
நரியோடு நாய்கூடல் நானிலத்தார் காணார்
பரிவொடு பாவையாள் நோக்கின் – எரியதில்
நெய்யிட்ட நீர்த்தாகி நெஞ்சங் குலையாரார்
பொய்யிட்ட சாதியைப் போக்கு
வேம்புங் கரும்பும் வியனுலகில் யார்யார்க்குந்
தாம்மாறித் தோன்றுந் தகையில – நோம்எனத்
தன்னெஞ் சறிவன தான்பிறர்க் காக்குமோர்
கன்னெஞ்சு கொள்வோன் கடை
இன்னிசை வெண்பா
மற்றவர்க்குத் தீங்கு மனமொழி மெய்யாலே
உற்றிடுங் கொல்லென உள்ளந் துணுக்குற
எற்றென் றிரங்குவ எண்ணா தொழுகுறின்
மற்றெம் மதமும் மயக்கு
சண்டையும் சத்தமும் ஒங்கவிட் டப்புறமாய்
மண்டையில் குட்டின் மதிப்பரோ ஆசானை
நல்வினையுந் தீவினையும் நாமாகச் செய்யவிடும்
புல்லறிவுத் தெய்வத்தைப் போக்கு
இயற்கை மருமத்தின் ஏதுணர மாட்டார்
மருட்கையாய்ச் சொன்னார் மதமுங் கடவுளும்
ஆராய்ந் துணரும் அறிவிய லொன்றாலே
நேராய்ந்து கொள்ளுக நின்று
குப்பையில் குன்றியுள குன்றியில் மூக்குளதாம்
ஒப்புரவா யொண்ணுங்கால் இப்புவியும் – அப்படியே
அம்மஇவர் மேலென்றே அஞ்சாதெஞ் ஞான்றும்
பகையிலும் பண்புள பற்று
வெளி விருத்தம்
வாவா வென்றே
வருந்துவர் மயங்குவர் – ஒரு சாரார்
ஆஆ வென்றே
அஞ்சுவர் ஒதுங்குவர் – ஒரு சாரார்
ஏஏ வென்றே
இகழ்வர் எளியர் – ஒரு சாரார்
வாயே ஆயின்
வாய்க்கும் நன்றாய் – வெண்பாவே
அறுசீர் விருத்தம்
அமுதவல்லி : வெண்பா என்னுங் கவிபாட
விளங்கிக் கொண்டேன் முறையாக
கண்போற் புலவர் காத்திருக்கும்
கவிதை மரபும் நனிநன்றே
உதாரன் : திண்மை விழையும் அறிஞர்க்குத்
தீந்தமிழ்ப் பாடல் வெண்பாவே
எண்மை கொண்ட அகவற்பா
இயல்பை உரைப்பேன் நாளைநான்
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி
Leave a Reply