karunanidhi-meeting03

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்  மருத்துவர்நந்தகோபாலக் கிருட்டிணனை ஆதரித்து கடலூரில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: தமிழக முதலமைச்சராக இருக்கிற அம்மையார்  செயலலிதா, ஏதோ தமிழ்நாட்டு மக்களுக்காக அவர்தான் கவலைப் படுவதை போலவும் நமக்கெல்லாம் தமிழ்நாட்டு மக்களை பற்றிக் கவலை கிடையாது போலவும்  பேசி வருகிறார். தி.மு.க வின் ஈடுபாடு தமிழ்ச்சமுதாயத்தை வாழவைக்க வேண்டும் என்பது ஒன்றுதான். செயலலிதா நம்மை எல்லாம் எந்த அளவிற்கு அவதிக்கு ஆளாக்கியுள்ளார் என்பதை நான் சொல்லாமலேயே  பட்டறிவு மூலம் தெரிந்துவைத்திருக்கிறீர்கள்.

 வருகின்ற வழியெல்லாம்  சிற்றூர்கள் தோறும் இருள் மண்டிக்கிடக்கின்ற காட்சியைப் பார்க்கிறேன். தேர்தலிலே வெற்றி பெற்று பதவி பொறுப்பை ஏற்ற உடன் என்ன சொன்னார். மூன்று மாதத்தில் தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லாமல் செய்வேன் என்று சொன்னவர் இப்போது  மின்சாரமே இல்லாமல் செய்துவிட்டார். ஆகவே எதையும்  செய்ய முடியாத செய்ய இயலாத ஆனால் செய்துவிட்டேன் செய்யப்போகிறேன் என்று பொய்யுரைப்பதில் பொல்லாதவராக உள்ளார். தமிழகத்தில் அனைவரின் இதயங்களையும் கவ்வியுள்ள  சிக்கல்  இலங்கைத் தமிழர்  சிக்கல். அந்த இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழர்களுக்கு உண்டா இல்லையா? தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் தீர்மானத்தை ஏன் கொண்டுவரவில்லை என்று  செயலலிதா கேட்கிறார்.

 நாம் கொண்டுவராத தீர்மானங்கள் ஒன்றா, இரண்டா? நான்  செயலலிதாவிற்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் சொல்லிக்கொள்வேன் 1956 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி அவர்களுக்காகத் தீர்மானம் கொண்டுவந்தோம். அதற்குப் பிறகும் கூடசட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்கள்  சிக்கலில் தி.மு.க வின் கோரிக்கை ஏற்கப்படவேண்டும் இல்லை என்றால்  விலகுவோம் என அறிவித்து அதனைச் செய்தோம். தி.மு.க இலங்கைத் தமிழர்களுக்காக வாதாடிய போது செயலலிதா அதற்காகக் கவலைப்படவில்லை. இன்றைக்குச் சொல்கிறார், கருணாநிதி ஒரு கண்டனம் கூடத்தெரிவிக்கவில்லை என்று. இலங்கைத் தமிழர்கள் படுகின்ற பாட்டை எடுத்துக்கூறி நாம் தீர்மானம் கொண்டு வந்த போது அதனைக் கேலி செய்தவர்தான்  செயலலிதா.

செயலலிதா நினைத்திருந்தால் அன்றைக்கே தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போர்குரல் எழுப்பியிருக்கலாம். ஆனால் போர்க்குரல் எழுப்பிய  நம்மைப் பார்த்து  செயலலிதா இலங்கையில் நடப்பது போராட்டமோ விடுதலை கிளர்ச்சியோ அல்ல அது ஒரு சண்டை எனக்கூறி நம்மை  எல்லாம் ஏமாற்றப்பார்த்தவர்.  செயலலிதாவைக் கேட்கிறேன். எந்தப் போராட்டத்தை நாங்கள் நடத்தாமல் விட்டுவிலகினோம். தி.மு.க வை பொறுத்த வரையில நானும் பேராசிரியரும் இலங்கைத் தமிழர்களுக்காக சட்டமன்றத்தில்  இருந்து விலகிவிட்டு வெளியே வந்தவர்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அண்ணா பெயரால் அமைந்த நூல் நிலையத்தை இருந்த இடமே தெரியாமல் செய்த செயலலிதாவிற்கு தமிழ்ப்பற்று ஒரு கேடா? பாவேந்தர் ஆய்வுக் கூடத்தை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிய செயலலிதாவிற்குத் தமிழ்பற்று ஒரு கேடா? தொல்காப்பியப்பூங்கா, செம்மொழிப் பூங்கா எங்கே? செம்மொழி என்ற உன்னதமான பரிசைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்தவர் கருணாநிதி என்ற காரணத்தால் அந்த பூங்காக்களை அழித்து ஒழிக்கச் செய்தவர் செயலலிதா.

செயலலிதா  தமிழர்களை ஒட்டு மொத்தமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழ்மக்களை ஏமாற்றி தமிழ் நாட்டைப் பிடித்தார். அது மட்டுமல்ல. கடந்த இரண்டு வாரங்களாக நான் தான் இந்திய நாட்டின் பிரதமர் என்று கூறிவந்த நிலையில் அது வராது என்று தெரிந்ததும் நான் இந்தியாவில்அமைய உள்ள அரசாங்கத்திலேஅங்கமாக இருக்க முயல்கிறேன் என்கிறார். நீ அங்கமாக இரு அல்லது அசிங்கமாக இரு. ஆனால் தமிழர்களின் பங்கமாக இருக்காதே என எச்சரிக்க விரும்புகிறேன். தமிழர்களின் மானம், மொழி, கலை  பண்பாடு இவற்றையெல்லாம் காப்பாற்றும் மாபெரும் இயக்கம்தான் திமுக.

இவ்வாறு அவர் பேசினார்.

 முன்னதாக புதுச்சேரி அண்ணா திடலில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:

 “இந்தியா முழுமையும் நடக்கும் இந்த தேர்தலில் நேற்று வரை ஒருவர் கல்யாணமே ஆகாமல் இருந்தார். அவர்தான் இந்தியத் தலைமையாளருக்கான வேட்பாளர். இன்றைக்குப் பத்திரிகையில் பார்த்தால் அவருக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என்ற செய்தியை வெளியிடுகிறார்கள். கல்யாணம் ஆகாமல் இருந்தாலும் அது என்ன பெரிய ஆச்சரியம். நம்முடைய பெருந்தலைவர் காமராசர் கடைசி வரை திருமணமாகாமல் தேசத் தொண்டு ஆற்றவில்லையா? அதுபோலத் தேசத் தொண்டு ஆற்றப் போகிறார் என நினைத்தோம். ஆனால்வேட்பு மனு அளித்த செய்த பிறகு மோடிக்குக் கல்யாணமாகி விட்டது என்ற உண்மையை, இதுவரை மறைத்து வைக்கப்பட்ட உண்மையை வெளியிட்டு இருக்கிறார்கள்.

 ஒரு வேளை அவர் இந்தியத்தலைமையாளரானால் இன்னும் என்னென்ன உண்மைகள் வெளியே வரும் என்பது தெரியாது. திருமணமான பிறகு அந்த உண்மையை மறைக்க அவசியம் இல்லை. மோடி வித்தை என்பார்களே அந்த மோடி வித்தைக்கு இதுதான் பொருளோ நாம் கருத வேண்டி இருக்கும். அத்தகைய ஒருவர், தென்னகத்தில், திராவிடத்தில், தமிழகத்தில் உள்ள நம்மை எல்லாம் இன்னும் சொல்லப் போனால் புதுவையிலே உள்ள நம்மை எல்லாம் ஆளப்போகிறார் என்றால் அந்த ஆட்சி எப்படி இருக்கும்? அந்த ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சியாக இருக்க வேண்டும் என  வரையறுக்க வேண்டிய நியாயத் தராசு நம் கையில்தான் இருக்கப் போகிறது. அந்த நியாயத் தராசை வைத்து இந்த நாட்டை ஆளத் தகுதியானவர் யார் என நாம் பார்க்காமல்  இதைச் செய்து விட்டோமே எனக் கவலைப்படப் போவதும் நாம்தான். நல்ல வேளையாக இவர்களைத் தேர்ந்தெடுத்ததால் தப்பித்தோம் எனப் பெருமூச்சு விட்டு ஆறுதல் பெறுவதும் நாம்தான்.

 இந்த இரண்டு நிலைகளில் நமக்கு எந்த நிலை வேண்டும்.சாதி, மத வேறுபாடு, பிரிவினை, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற  வேறுபாடு பார்ப்பவர்கள் வேண்டுமா? எல்லோரும் சமம் என்ற சமநிலை வேண்டுமா? பாபர் மசூதிக்கு வந்த ஆபத்து, நாட்டில் உள்ள  பிற மசூதிக்கு வரலாமா? அப்படி வந்தால் நாடே இரணகளமாக மாறும். நாம் மீண்டும் அடிமைப்படுவோம் என்பதை மறந்து விடாமல் உங்கள்  முடிவை எடுக்க வேண்டும். அந்த முடிவுதான் சமத்துவமான ஒரு நாட்டை, சாதி பேதமற்ற, மத பேதமற்ற ஒரு நாட்டை உருவாக்கக் கூடிய முடிவு அந்த முடிவு எடுப்பதற்கு நீங்கள் உதவியாக இருக்க வேண்டும் என்று கேட்கிறேன். உதயசூரியன் சின்னத்தை மறவாதீர்கள்.” இவ்வாறு அவர் பேசினார்.

 முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நேற்று நண்பகல் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளர்கள் மருத்துவர்முத்தையன் (விழுப்புரம்), மணிமாறன் (கள்ளக்குறிச்சி), சிவானந்தம் (ஆரணி) ஆகியோருக்கு ஆதரவாக திமுக தலைவர் கருணாநிதி பரப்புரை ஆற்றினார்.

அப்போது, அவர் பேசும்போது,

திமுகவைப் பொருத்தவரை இந்தத் தேர்தலில் மதவாத சக்திகளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்றும் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு ஆதரவு தருவது என்றும் முடிவெடுத்து அதை நிறைவேற்ற உங்கள் ஆதரவை நாடி வந்திருக்கிறோம். உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுக்கு நண்பர்களாக இருப்பவர்களை உணர்ந்து கொள்ள வேண்டும். அது திமுக என உங்களுக்கு தெரியும். நாள்தோறும் புதிதாக கட்சிகள் உருவாகி வருகிறது.

அப்படிப்பட்ட கட்சிகள் தேர்தல் நேரத்தில் தமிழகத்தை வேட்டைக் காடாக மாற்றி வருகின்றன. ஊரை ஏமாற்றும் ஒரு சிலரைப் பயன்படுத்தி கொண்டு நடத்தும் நாடகங்களை பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தி விட்டு உங்கள் உழைப்புக்கு மதிப்பளித்து எதிர்காலத்துக்கு பயன்தரும் திட்டங்களை அளிக்கும் கட்சி திமுக என்பதை மனதில் நிறுத்தி திமுக மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு வழிவகை செய்ய வேண்டும்என்றார்