கூட்டம் போடும் கூச்சல்! – கெருசோம் செல்லையா

கூட்டம் போடும் கூச்சல்!    கூட்டம் போடும்  கூச்சலுக்கிணங்கி, கொடுக்கும் தீர்ப்பு அறமாமோ? ஆட்டம் போடும் தலைகளுக்கடங்கி, அடிமையாதலும் திறமாமோ? மாட்டிற்காகப் பொங்கும் மக்கள், மனிதரைக் கொல்தல் முறையாமோ? வேட்டை நாய்போல் வெறியும் திரும்பும், விண்ணின் அறத்தில் குறையாமோ? – கெருசோம் செல்லையா

வேண்டல் ஒருநாள் கூடிவரும்! – கெருசோம் செல்லையா

வேண்டல் ஒருநாள் கூடிவரும்! நீண்ட நாளின் விண்ணப்பம், நிறைவேறாது இருந்தாலும், ஆண்டவரின் நன்மக்கள், அண்டிக் கொள்வது அறமாகும். வேண்டல் ஒருநாள் கூடிவரும்; விரும்பும் நன்மை தேடிவரும். தோண்டத் தோண்ட அருளூற்று, தூயோர் வாழ்வில் உறவாகும்!   – கெருசோம் செல்லையா

கொடுமை செய்வோர் வாழ்கின்றார்! – கெருசோம் செல்லையா

கொடுமை செய்வோர் வாழ்கின்றார்!   கொன்று, திருடி, ஏமாற்றி, கொடுமை செய்வோர் வாழ்கின்றார்!. இன்று இவரைப் பாராட்டி ஏற்போர் நாட்டில் ஆள்கின்றார். அன்று இறைவன் உரைத்திருந்தும், அவற்றை மறப்போர் வீழ்கின்றார். நன்று எதுவென உணர்பவர்தான், நன்மை வழியில் மீள்கின்றார்!   – கெருசோம் செல்லையா  

கிறித்து பிறப்பு வாழ்த்து ​- கெருசோம் செல்லையா

கிறித்து பிறப்பு வாழ்த்து! ​   இல்லா நிலையில் யாவும் படைத்த இணையற்றவரே இறைவன். எல்லோருக்கும் மீட்பின் பொருளாய் இப்புவி வந்தவர் மைந்தன். வல்லோன் விரிக்கும் வலையை அறுத்து, வாழ வேண்டுமே மனிதன். நல்லாவியரால் நடத்தப்பட்டு, நன்மை செய்வான் புனிதன்.   கிறித்து பிறப்பின் மகிழ்ச்சி,  புத்தாண்டு முழுதும் நிலைக்க வேண்டும்!   -செல்லையா,  இறையன்பு இல்லம், செயலகக் குடியிருப்பு, இரட்டை ஏரி, சென்னை. www.iraiyanbuillam.com  

மலைபோல் பற்று எனக்கில்லை! – கெருசோம் செல்லையா

மலைபோல் பற்று எனக்கில்லை! மலையைப் பெயர்த்துக் கடலில் கொட்டும், மாபெரும் பற்றும் எனக்கில்லை. கலையழகுள்ள சிலைபோல் கட்டும், கைத்திறன் அறிவும் எனக்கில்லை. விலை மதிப்பில்லா பொருளாய்க் கிட்டும், விண்ணின் அன்பும் எனில் இல்லை. இலைபோல் கருகும் இவ்வாழ்வைக் காட்டும், இறைமுன் வந்தேன், குறையில்லை! – கெருசோம் செல்லையா

பார்வை இல்லார் வாழப் பாடுவோமா? – கெருசோம் செல்லையா

பார்வை இல்லார் வாழப் பாடுவோமா? உருவில் அழகு குறையுமானால், ஒப்பனை செய்ய ஓடுகிறோம்! தெருவில் அழுக்கு நிறையுமானால், தென்படுவோரைச் சாடுகிறோம்! எருவில்லாத பயிரைப் பார்த்து, ஏங்கலும் கொண்டு வாடுகிறோம். கருவிலிருந்தே பார்வை இல்லார், களிப்புடன் வாழப் பாடுவோமா? கெருசோம் செல்லையா

உணவளித்தால் உம்மை வாழ்த்துவரே! – கெருசோம் செல்லையா

உணவளித்தால் உம்மை வாழ்த்துவரே!   பசியென்று  வருபவரைப், பரிவுடன் பார்த்திடுவீர்! புசியென்று உணவளித்து, புன்னகையும் சேர்த்திடுவீர். கசியும் நீரூற்றாய்க் கண் கலங்கிக் கேட்பவர்கள், பொசியும் இறையன்பால், பொங்கியுமை வாழ்த்துவரே! – கெருசோம்  செல்லையா