புரட்சிக் கவிஞர் புகழுடன் எய்தினார் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

    தமிழிலக்கிய வானில் எழிலுறு ஞாயிறாக இலங்கித் தம் இன்றமிழ்ப் பாக்கதிர்களால் மூட நம்பிக்கை இருளைப் போக்கிக் கொண்டிருந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சித்திரைத் திங்கள் 9ஆம் நாளில் (21-4-64இல்) பூதவுடல் நீக்கிப் புகழ் உடல் எய்திவிட்டார். அச்சமின்றி ஆண்மையுடன் அடிமை நிலையை எதிர்த்து அழகிய பாடல்களை எழுதிய கைகள் அயர்ந்துவிட்டன; சூழ்ந்திருப்போர் விருப்பு வெறுப்பினை நோக்காது உள்ளத்தில் தோன்றியனவற்றை ஒளிமறைவின்றி முழங்கிய வாய் ஓய்ந்துவிட்டது. எழுபத்துமூன்று ஆண்டுகள் இவ்வுலகில் நடமாடிய கால்கள் சாய்ந்துவிட்டன. இனி நம் ஏறனைய பீடு நடைப்பெரும் புலவரைப்…

கவிக்குயில் எங்கே – நாகை சு.இளவழகன்

புயல்போல பாட்டெழுதிச் சுழல வைத்தப் புதுச்சேரிக் கவிக்குயிலே பறந்ததெங்கே? இயற்கையெனும் கொடும்பாவிக் குரலைக் கேட்டோ எழுந்தெம்மைப் பிரிந்தே நீ சென்றுவிட்டாய் திரும்பாத பெரும்பயணம் சென்ற ஐயா திருநாட்டை மறந்தாயோ? என்று காண்போம். அரும்பிவரும் தமிழுலகின் பொற்காலத்தை அருகிருந்து பாராமல் எங்கே சென்றாய்? அழுகின்ற எங்களையார் ஆற்ற வல்லார்? அடுத்த பல தலைமுறைக்கும் வீர மூட்டித் தொழுகின்ற நிலைபெற்றாய்; உன்னை இந்தத் தொல்லுலகில் இனியென்று காண்போம் ஐயா பாரதிக்கு தாசனென எழுந்த நீயோ பைந்தமிழின் எதிரிகளை ஒடுக்கி வைத்தாய் பாரதிரத் தமிழ்பாடி வந்தாய், இன்றோ பாட்டெல்லாம்…

வெண்முகிலே! நில்மின், செல்மின்! – புதுகை மா.நாகூரான்

  1.வெண்முகிலே! வேகங்குறைமின், நில்மின் நில்மின் வேதனையால் கூறுகின்றேன் கேன்மின் கேன்மின் ஒண்கவிதை தந்திட்ட எந்தண் மூத்தோன் ஒளிர்கின்ற உன்னுலகில் உலவி வந்தான் மண்ணுலகில் அதனினைவாய் அலைக்கப்பட்டு மன்றாடும் என்செயலை அவர்க்குச் சொல்வி விண்ணுலகை விட்டுவிட்டு இங்கே வந்து விழிப்புள்ள என்னில்லில் வாழச் சொல்லேன். 2. மொழியென்றால் வேம்பென்று வாழ்ந்து சாகும் விழிகெட்ட வீணர்க்கு அறிவை யூட்ட மொழிக்கென்று வாழ்ந்து இறந்த மூத்தோர் தம்மை வழிகேட்க மாண்டாயோ? அன்றி யிந்த மொழிக்காக செய்ததெல்லாம் வீணே என்று மொழிப்பற்றை விட்டுவிட்டு விழியை மூடி மொழியாது ஓய்வெடுக்க…

நெஞ்சில் வாழ்க நிலைத்து – மு.வில்லவன்

  தனிச்சொல் தமிழ்ச் சொல்லைச் சேர்த்தொன்றாய்ப் பாடி கனிச்சுவை ஈந்த தலைவா – கனி சுவைத்த நற்றமிழர் நெஞ்சினில் நீங்காது நீவாழ்ந்து இற்றரையில் வாழ்க இனிது.   தட்டி எழுப்பி தமிழுர்வு ஊட்டி வந்(து) எட்டி நீ சென்றாய் கவித்தலைவா! –  விட்டின்று சென்றாலும் உன் கவிதைப் பார்க்கும் தமிழ் நெஞ்சில் என்றென்றும் வாழ்க இனிது.   மொழி வாழ்ந்தால் வாழ்வுண்டு நற்றமிழர்க்கும்; பாரில் மொழியழிந்தால் வாழ்வில்லை காண்பீர் –  விழிபோன்று காப்பீர் எனவுரைத்த பாவேந்தர்! நின்வழியை காப்பவர் நெஞ்சில் புகு.   வண்டமிழர்…

குயில் பிரிந்த கூடு – புலவர் இரா இளங்குமரன்

1.குயில்பிரிந்து போய்விட்ட கூடே அம்மா! குளிர்மதியம் மறைவுற்ற வானே அம்மா! பயிர்கருகிப் பசையற்ற வயலே அம்மா! பறையின்றி நடைபோடும் படையே அம்மா! உயிரமுதாம் நரம்பறுந்த யாழே அம்மா! ஓடியுண்டு போகப்பட்ட வாளே அம்மா! பயிலுணர்வுப் பாவேந்தன் பிரிந்துபோன பைந்தமிழ்ப் பாவுலகம் ஐய ஐயோ! 2. நெஞ்சத்தில் பட்டவெலாம் கற்கின்றோர்கள் நெஞ்சத்தில் படுமாறு நேர்மையாகச் செஞ்சொற்கள் கொண்டுரைக்க வல்லோன் யாவன்? செழுந்தமிழே பேச்சாக மூச்சும் ஆகக் கொஞ்சற்கும் கெஞ்சற்கும் வன்கண்மைக்கும் குலையாமல் தளராமல் தமிழைக் காத்த அஞ்சாத அடலேற்றைப் புலியின் போத்தை, அருந்தமிழை, ஆரமிழ்தை இழந்தோம்…

எவரிடம் காண்பது …. – கவிஞர் இளங்கம்பன்

அருந்தமிழ்த் தாயுவக்க அளப்பரும் பணி பரிந்தோய்! பெரும்பகை முகில் கிழித்து பேரொளி தந்த வீர! இருபதாம் நூற்றாண்டிற்கோர் இணையிலாக் கவிஞரேறே! அருவிபோல் எமக்(கு) இனித்த அரசே நீ மறைந்தாயாமே! குன்றுபோல் நிற்குமுன்றன் கோலத்தை; மாற்றறார் சூழ்ச்சி ஒன்றுக்கும் ஆட்படாத உறுதியை, புரட்சிப் போக்கை, கன்றுக்குத் தாய்போல், கன்னிக் கவிஞர்பால் குழையும் மாண்பை என்றினிக் காண்பதையா! எவரிடம் காண்பதையா? – குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964

கண்ணீர்ப் பெருக்கினைக் காண் – கவிஞர் முத்தன்

  கத்து கடல்சூழ் புதுவைக் கருங்குயிலே! புத்தமுதப் பாடற் பொழிவாய் நீ – இத்தரையில் மொத்த புகழ் ஒத்தவிசை எத்தனையோ அத்தனையும் நத்திச் சுவைத்தாய் நன்று. பாடும் இசைக்குயிலே. பாரதி தாசனே! தேடு சுவைபடைத்த தேன்பொழிலே! கூடு துறந்து தமிழ்ச்சோலை சுற்றறுத் தேனோ பறந்தாய் மறைந்தாய் பகர்! கானக்குயிலே! கனித்தமிழின் இன்சுவையே மோனப் பெருந்துயிலின் மூழ்கியதேன்? -ஞானத் திருவிளக்கே பாவுலகில் தேடினும் உன்போல் ஒருவிளக் குண்டோவுரை! பாட்டுத் திறத்தாலே பைந்தமிழைக் காக்கும் – மாங் காட்டுக் குயிலரசே! காதலினால் – நாட்டிலுறு கேடுகளைப் போக்கக்…

‘‘தாய்மொழி விழிப்புணர்வு’’ – கவிஞர் சொ.நா.எழிலரசு

தமிழே குறி குறளே நெறி தமிழா! அறி தமிழுக்கு முதல் அகரம் தனிச்சிறப்பு ழகரம் ழகரம் பேசு சிகரந் தொடும் பேச்சு பிழையாகப் பேசாதே களையெனத் தழைக்காதே தமிழுடன் ஆங்கிலம் சோற்றுடன் கல் நீக்கிடு தனித்தமிழ் பேசு தமிழே நம் மூச்சு தமிழ்ப் பேசா வாய் தாங்கிடும் மெய் பொய் தமிழ் வாழ வாழ் தவறினால் தமிழ் பாழ்   ‘‘ழகரமாமணி’’ கவிஞர் சொ.நா.எழிலரசு செயலர், பொதுச்செயலர், தனித்தமிழ்ப் பயிற்றகம், தமிழ் ழகரப்பணி மன்றம், துரைப்பாக்கம், சென்னை.

குறள் நெறி வாழ்க – கவிஞர் கதி.சுந்தரம்

1. தமிழினமே! எழுந்தார்த்துக் குறளென்னும் கேடயத்தைத் தாங்கி நின்றே இமிழ்கடல்சூழ் உலகுய்ய வழிகாட்டு! கலையூட்டு! எழிலை ஈட்டு! குமிழியெனும் இளமைதனைக் கொழிதமிழின் குறள் நெறிக்கே கொடுத்து வாழ்வாய்! அமிழ்தனைய வளம்பலவும் நாடெய்தும்; ஆல்போலப் பெருகி வாழ்வாய்! 2. தூளாக்கு வஞ்சகத்தைத் தோள்தூக்கு முயற்சிக்கே என்று பாடி. ஆளாக்கும் குறள்நெறியை அவனியெலாம் பரப்பிடுவீர்! முழக்கம் செய்வீர்! தாளாற்றிப் பொருள் சேர்ப்பீர்! தருபுகழைப் பெற்றுவாழ்வீர்! வேற்று நாட்டார் கேளாத பழங்காலம் கிளைவிரித்தே அறமுரைத்த குறளே! வாழ்க!!  – குறள்நெறி தை 2, 1995 /15.01.1964

தமிழ் வாழ்க நாளும் – நாமக்கல் கவிஞர்வெ.இராமலிங்கம்(பிள்ளை)

தமிழென்று தருகின்ற தனியந்தப் பெயரில் அமிழ்தென்று வருகின்ற அதுவந்து சேரும். நமதிந்தப் பெயர்கொண்ட மொழியென்ற எண்ணம் தமிழர்க்குப் புகழ்மிக்கத் தருமென்றல் திண்ணம்.       1 பயிருக்கு நீர்என்ற பயன்மிக்க வழியே உயிருக்கு வெகுநல்ல உணர்வுள்ள மொழியே. துயருற்ற மனதிற்குத் துணைநின்றே உதவும்; அயர்வற்ற ஞானத்தை அடைவிக்கும் அதுவே.       2 அன்பென்று அதைமிக்க அறிவிக்க நின்று துன்பங்கள் தருகின்ற துயரத்தை வென்றே இன்பத்தின் நிலைசொல்ல இணையற்ற வழியாம்; தென்புள்ள தமிழென்று திகழ்கின்ற மொழியாம்.       3 அருளென்ன உலகத்தின் அறிவாள ரெல்லாம் பொருள்கொள்ளும் பொருள்தன்னைப் புரிவிக்கும் சொல்லாம்; இருள்கொண்ட…

வெல்க குறள் நெறி – புலவர் வேலவன்

  1. கூடல் நகரில் குறள்நெறித் தென்பெருகி ஓடல் இனிதே உவந்தது. 2. குறள் நெறிப் பூங்குயிலே கொள்கைப் புரட்டர் குரல்நெறிக்க வந்தாயோ கூறு. 3. எழுதத் தெரிந்தோர் எழுத்தாள ராகுந் தொழுநோய் துடைப்பாய் துணிந்து. 4. பிறழ்நெறியே பேசுகின்ற பித்தருளும் மாற குறள்நெறியே கூவு குழைந்து. 5. அருள்நெறி பேச அவம் செய்து வாழும் இருள்நெறி யாளரை எற்று. 6. பாலில் நீர் பெய்துவிற்கும் பாவியரைப் போலெழுது நூலில்தீச் சொற்கலப்பின் நூறு. 7. குறுக்குவழி யோடுங் குறுமதியைக் கொட்டிப் பொறுப்பு வழிகாட்டிப் போற்று,…

ஒற்றுமையே உயர்நிலை – கவிமணி

                ஒற்றுமையாக உழைத்திடுவோம் – நாட்டில்      உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்; வெற்றுரை பேசித் திரிய வேண்டாம் – இன்னும்      வீணாய்ப் புராணம் விரிக்க வேண்டாம்.                 கூடி விருந்துண்ண வேண்டவில்லை – பெண்ணைக்      கொண்டு கொடுக்கவும் வேண்டவில்லை; நாடி எவரொடும் நட்பினராய்த் – தேச      நன்மைக் குழைப்பதில் நட்டம் உண்டோ?                    கீரியும் பாம்புமாய்ச் சண்டையிட்டு – சாதி      கீழென்றும் மேலென்றும் நாட்டிவிட்டு, பாரதத் தாய்பெற்ற மக்கள் என்று – நிதம்      பல்லவி பாடிப் பயன்…