இந்நாடு முழுதும் பரவியிருந்தோர் தமிழரே ! – மறைமலையடிகள்

பண்டைக்காலத்தே ஆசியாக் கண்டத்தில் வடதிசைப் பக்கங்களில் இருந்த ஆரியர், குளிர்நனி மிகுந்த அவ்விடங்களை விட்டு, இந்திய நாட்டிற் குடிபுகுதற்குமுன், இவ்விந்தியநாடு முழுதும் பரவியிருந்த மக்கள் தமிழரேயாவர். (கேம்பிரிட்ஜின் தொல்லிந்திய வரலாறு) -தமிழ்க்கடல் மறைமலையடிகள்: முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை: பக்கம். 35  

உலகியல் பொருளறிவு பிறரிடம் இல்லை – மறைமலையடிகள்

உலகியல் பொருளறிவு பிறரிடம் இல்லை   இத்துணை நுட்பமான உலகியற் பொருள் அறிவு பண்டைக்காலத்துத் தண்டமிழ்ப் புலவரிடங் காணப்படுதல் போல, மற்றைமொழிகளில் வல்லராய் விளங்கிய ஏனையப் பழம் புலவரிடத்துங் காணப்படுதல் அரிது. இன்னும் இவ்வாறே பழைய தமிழ்ப்புலவர் உலக இயற்கைக்கும் மக்களியற்கைக்கும் உள்ள பொருத்தம் பற்றி அவர் வெளியிட்ட அரிய கருத்துக்களின் விழுப்பமும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிற் பரக்கக் காணலாம். -தமிழ்க்கடல் மறைமலையடிகள்: முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை: பக்கம். 32-33

சங்கக் காலத்தில் ஆரிய நம்பிக்கை அன்றாட வாழ்வில் இடம்பெறவில்லை – சு.வித்தியானந்தன்

சங்கக் காலத்தில் ஆரிய நம்பிக்கை அன்றாட வாழ்வில் இடம்பெறவில்லை. சங்க காலத்திலே தமிழகத்தில் அந்தணரும், முனிவரும் வாழ்ந்தனரெனினும் அவர்கள் செல்வாக்குப் பிற்காலத்தில் இருந்த அளவுக்கு மேம்பட்டிருக்கவில்லையெனக் கூறலாம். சங்க நூல்களில் ஆரிய நம்பிக்கைகளும், சமயக் கோட்பாடுகளும் கூறப்பட்டிருப்பது உண்மையே. ஆனால் பொதுவாக நோக்குமிடத்து மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவை இடம் பெறவில்லை எனலாம். நகர வாழ்க்கையில் இவற்றின் செல்வாக்கு சிறிது சிறிதாகப் பெருகிக்கொண்டே வந்தது. பொதுமக்கள் தங்கள் மூதாதையரின் வழிபாட்டு முறைகளையே பின்பற்றினர். -பேராசிரியர் முனைவர் சு.வித்தியானந்தன்

சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 3: மறைமலை இலக்குவனார்

(ஆனி 20, 2046 / சூலை 05, 2015 தொடர்ச்சி) பாடல் பெற்ற பல்வேறு ஒலிகள் அருவி ஒலி இயற்கையொலிகளில் அருவி ஒலியை மிகப் பெரிதும் சங்கச் சான்றோர் போற்றியுள்ளமைக்குச் சங்கப்பாடல்கள் சான்று பகர்கின்றன. ‘பெருவரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப’18 எனவும்‘அருவி விடரகத்து இயம்பும் நாட’19 எனவும் அதன் ஆரவாரத்தையும்“ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்”20 எனவும் ‘ஒல்லென விழிதரு மருவி’21எனவும் அதன் ஒலிச்சிறப்பையும் பதிவுசெய்துள்ளனர். ‘இன் இசை இயத்தின் கறங்கும் கல்மிசை அருவி’22என்று அருவியின் ஓசையை ஓர் இசைக்கருவியோசையாகவே அவர்தம் செவிகள் நுகர்ந்துள்ளன.’வயங்குவெள் அருவி…

சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 2: மறைமலை இலக்குவனார்

(சூன் 28, 2015 தொடர்ச்சி)2  போராரவாரம்:   பேராரவாரம் மிக்க சூழல்களையும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய சங்கச் சான்றோர்கள் போராரவங்களையும் பதிவு செய்துள்ளனர். புறப்பாடல்களைவிட மிகுதியாக அகப்பாடல்களில் இவை நுவலப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஊரார் அலர் தூற்றலின் கொடுமையால் துன்புறும் தலைவியும் தோழியும், அலரினால் எழுந்த ஆரவாரம் போராரவாரத்தைக் காட்டிலும் பெரிதாக விளங்கியதாக எடுத்துக்கூறும் வகையில் இப் பாடல்கள் அமைந்துள்ளன.   “அன்னி என்பவன் குறுக்கைப் போர்க்களத்தில் திதியன் என்பவனது தொன்மையான புன்னை மரத்தின் பெரிய அடியை வெட்டித் துண்டித்தபொழுது கூத்தர் அவனைப் போற்றிச் செய்த…

இயற்கைப்பின்னணி தமிழுக்கே உள்ள சிறப்பு – நெ.சுப்பையா

அக உணர்வுகளை இயற்கையோடு பின்னிப்பாடும் அருமை, தமிழ் இலக்கியங்களுக்கே உள்ள சிறப்பு   சங்க இலக்கியங்களை அகம் புறமென இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவற்றுள் அகமென்பது மனத்தின்கண்ணே நிகழும் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் சித்தரித்துக் காட்டும் பாடல்களையேயாம். அவை அகப்பாட்டு எனப்படும். இப்பாட்டில் சிறந்த மக்களைப் பற்றியே பேசப்படும். புறமென்பது புறத்தே நடக்கும் காரியங்களை விளக்கிக் காட்டும் பாடல்களையேயாம்; அவை புறப்பாடெனப்படும். தலைவன், தலைவியாகிய இருவர்பால் நிகழும் உணர்ச்சிகளைச் சொல்லோவியமாகக் கவின் பெறக் காட்டினார்கள் நம் சங்கத்துச் சான்றோர்கள். அகத்தே நிகழும் உணர்ச்சிகளை, இயற்கையோடு…

சங்க இலக்கியங்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பவை – இரா.சாரங்கபாணியார்

சங்க உவமை உணர்த்தும் உயிரியல் அறிவாற்றல் சங்கப் புலவர்கள் கையாண்டுள்ள இயற்கை உவமைகளை நோக்கும் போது பயிரினங்கள், விலங்கினங்கள் முதலியவற்றின் இயல்புகளை அவர்கள் எத்துணைக் கூர்ந்து நோக்கியறிந்திருந்தனர் என்பது பெறப்படும். – பெரும்புலவர் முனைவர் இரா.சாரங்கபாணியார்: இயற்கை விருந்து: பக்கம்.3 சங்க இலக்கியங்கள் வாழ்வியல் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பவை சங்க இலக்கியங்கள் சாதி, சமய, இன வேறுபாடற்றவை. வாழ்வியல் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பவை. பொருட் சிறப்பும், கருத்துச் செறிவும், சொல்லினிமையும் வாய்ந்தவை. அவை அகத்திணை, புறத்திணை என இருபாற்பட்டுப் பெரும்பாலும் காதல், வீரம், குறித்துப்…

தமிழ் இலக்கியத் தோற்றக் காலத்தை அறுதியிட்டுரைக்க இயலாது – சி.இலக்குவனார்

தமிழ் இலக்கியத் தோற்றக் காலத்தை அறுதியிட்டுரைக்க இயலாது   ‘இலக்கியம்’ என்பது தூய தமிழ்ச் சொல். இதனை “இலக்கு+இயம்’ எனப் பிரிக்கலாம். இது ‘குறிக்கோளை இயம்புவது’ என்னும் பொருளைத் தருவது. வாழ்வின் குறிக்கோளை வகையுற எடுத்து இயம்புவதே இலக்கியமாகும். ஆகவே, இலக்கியத்தின் துணைகொண்டு அவ்விலக்கியத்திற்குரிய மக்களின் வாழ்வியலை அறிதல் கூடும். தமிழிலக்கியத்தின் துணை கொண்டு தமிழ் மக்களின் வாழ்வியலை அறியலாம்.   தமிழ் மக்களின் வரலாற்றை அறிவதற்குத் துணைபுரிவனவற்றுள் முதன்மை இடம் பெறுவதும் தமிழ் இலக்கியமேயாகும். தமிழ் இலக்கியம் தொன்மை நலம் சான்றது. அதன்…

சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 1: மறைமலை இலக்குவனார்

1 கட்டுரையின் நோக்கம்:   கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தராக விளங்கிய சங்கத் தமிழர், தம்மைச் சுற்றியும் ஒலிக்கும் ஒலிகளையறிந்து அவ்வொலிகளின் வழித் தம் இயக்கத்தை அமைத்துக்கொண்டனர்.   வளியின் போக்கையறிந்து நீரில் கலன்களைச் செலுத்தும் முறைமையையறிந்த தமிழர்,நிலத்தில் தம்மைச் சூழ்ந்தமையும் ஒலிகளின் மாறுபாடுகளை வகைப்படுத்தியறிந்து ஊறு நேர வாய்ப்புள்ள வழிகளைத் தவிர்த்துக் கொள்ளும் விழிப்புணர்வைப் பெற்றிருந்தனர். இனிய ஓசைகளைச் செவியாரத் துய்த்தும் இன்னா ஓசைகளை இனங்கண்டு பிறர்க்குரைத்தும் ஒலிகளை ஒப்புநோக்கிக் கூறியும் தம்மைச் சூழ்ந்திருந்த ஒலிச்சூழலமைவை அவர்கள் ஆய்ந்துரைத்த திறம்…

சங்க இலக்கியத்தில் கனவுக் குறிப்புகள் – ச.வே.சுப்பிரமணியன்

சங்க இலக்கியத்தில் கனவுக் குறிப்புகள்   சங்க இலக்கியத்தில் ஏறத்தாழ நாற்பத்து நான்கு கனவுக் குறிப்புகள் காணப்படுகின்றன. சில, தலைவன் தலைவியர் கண்டனவாகவும், சில பறவை, விலங்குகள் கண்டனவாகவும் அமைகின்றன. – நல்லறிஞர் ச.வே.சுப்பிரமணியனார்: இலக்கியக் கனவுகள்: பக்கம்: 17-18 சங்கத்தமிழ் கற்றால் கீழ்மை போகும் பழம் சங்கப் பனுவலைக் கற்றால் கிழம் போகும் கீழ்மையும் போகும் – அறிஞர் வ.சுப.மாணிக்கனார்

‘அகம்’ என்றால் என்ன? – சி.இலக்குவனார்

‘அகம்’ என்றால் என்ன?   ‘அகம்’ என்றால் என்ன? ஒத்த அன்பினையுடைய தலைவனும் தலைவியும் தனித்துக் கூடுகின்ற காலத்துத் தோன்றி, மன உணர்ச்சியால் நுகரப்படும் (அநுபவிக்கப்படும்) இன்பம், அக் கூட்டத்தின் பின்னர், அவ்வின்பம் இவ்வாறு இருந்தது எனச் சொல்லால் விளக்கிக் கூற முடியாமல் எப்பொழுதும் உள்ளத்தே நிகழும் உணர்ச்சியால் நுகரப்படுவதால் ‘அகம்’ எனப்பட்டது. அகம் உள், உள்ளம்: அதுபற்றி எழும் ஒழுக்கத்தை ‘அகம்’ என்று கூறினர். எளிமையாகக் கூறினால் காதல் இன்பம் என்பதாகும். காதலின்பம் உணர்ச்சி வயத்தது; உணர்ச்சி உள்ளத்தைப் பற்றியது. பண்டைத் தமிழ்ப்…

சங்க இலக்கியங்கள் உளவியல் இலக்கியங்களாகும் – தமிழண்ணல்

  சங்க இலக்கியத்திற்குப் பிறிதொரு பெயர் சூட்டு என்று கேட்டால், தயங்காமல், ‘உளவியல் இலக்கியம்’ எனக் குறிப்பிடலாம். அகத்திணைப் பாடல்கள் நூற்றுக்கு நூறும், புறத்திணைப் பாடல்கள் நூற்றுக்கு எழுத்தைந்தும் ‘உளவியல்’ பற்றியனவே ஆகும். ஏதேனும் ஒரு மனநிலையை மட்டுமே அல்லது அம்மனநிலை விளைவுக்குரிய சூழலை மட்டுமே அவை பாடுபொருளாய்க் கொண்டவை. எனவே உளவியற் கொள்கைகளையும் பிராய்டு, (இ)யங்கு, என்பாரின், பாலியல், உளவியற் ஆய்வுகளையும் கற்றுணர்ந்தால் சங்க இலக்கியக் கல்விக்கு அது பெரிதும் துணைபுரியும். – தமிழ்ச் செம்மல் தமிழண்ணல்: சங்க இலக்கிய ஒப்பீடு: பக்கம்….