தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙூ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙு] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி)
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்
[ஙூ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி
மேனாடுகளில் படிக்கும் பொழுதே பணியாற்றிக் கல்விச்செலவைத் தம் உழைப்பால் ஈடுகட்டும் நிலையை இக்காலத்தில் பார்க்கின்றோம். ஆனால், அக்காலத்திலேயே அதுவும் பள்ளிமாணவ நிலையிலேயே பேராசிரியர் கல்வி மீதுள்ள ஆர்வத்தினாலும் உழைப்பின் மீதுள்ள மதிப்பாலும் இந்நிலையை மேற் கொண்டார். பிறருக்குக் கல்வி கற்பித்து அதனால் பெறும் வருவாயைக் கல்விச் செலவிற்குப் பயன்படுத்திக் கொண்டார். தம் தமிழாசிரியர் பெரியவர் பொன்னண்ணாக் களத்தில் வென்றார் அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தந்து அவர் தரும் உதவிகளை ஏற்றுக் கொண்டார். ‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்னும் பொழுது உழைத்து ஈட்டிக் கற்பது மேலானதன்றோ! பேராசிரியர், வாய்ப்பு உள்ள பொழுதெல்லாம் ஊர் மக்களிடையே தமிழுணர்வையும் தமிழ் இலக்கியச் சிறப்பையும் பகுத்தறிவினையும் தன்மானத்தையும் ஊட்டத் தவறவில்லை. தொடக்கத்தில் சிறுவன் பேசுகின்றான், கேட்போம் என வந்தவர்கள் எல்லாம் பின்னர் அவர் பொழிவுத்திறனையும் ஆழ்ந்தகன்ற கல்வியையும் அறிந்து ஈடுபாடு காட்டினர்.
பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றதும் வேலைக்குச் செல்லுமாறு அண்ணனின் தூண்டல். ப.இ.வ. தேர்ச்சி பெற்றிருந்ததால், தொடக்கப்பள்ளி ஆசிரியராகலாம் அல்லது அரசு துறைகளில் எழுத்தராகப் பணியாற்றி மேலும் மேலும் உயர்நிலை அடையலாம் என்பது நண்பர்களின் அறிவுரை. ஆனால், அவர் உள்ளம் அதற்கு இடம் தரவில்லை. தமிழறிஞர்களால் போற்றிப் புகழப்பட்ட தமிழ் உணர்வு தமிழின் பக்கமே அவரைத் திருப்பியது. தம் தமிழாசிரியர் பெரியவர் பொன்னண்ணாக் களத்தில் வென்றார் அறிவுரைக்கிணங்கத் திருவையாற்றிலுள்ள அரசர் கல்லூரியில் தமிழ் பயில விரும்பினார். தன் முயற்சியில் அங்குச் சென்று சேர்க்கைக்காக வேண்டினார்; இடமும் கிடைத்தது; தங்கிப் படிப்பதற்கான ஏற்பாடுகளுக்காக ஊர் திரும்பினார். வந்த இடத்தில் ‘சாம்பவான் ஓடை’என்னும் ஊரில் தொடக்கப்பள்ளியில் பயிற்சி பெறாத ஆசிரியப்பணி கிடைத்து அங்கே பணியில் சேர்ந்தார். தன் மடியில் தவழ வேண்டிய தவமகன் இங்கே உழல்வதைத் தமிழ்த்தாய் விரும்புவாளா? ஆய்வாளர் ஒருவர் பயிற்சி பெற்றவரையே நியமிக்க வேண்டும் எனக் கூறியதால் இவ்வேலை போயிற்று. எனவே, திருவையாற்றுக்குத் திரும்பி அரசர் கல்லூரியில் உவகையுடன் புலவர் படிப்பில் கவனம் செலுத்தினார்.
இக்கல்லூரியின் பெயர் வரலாறு, தமிழ்ப்பகைவர்கள் விழிப்புடனும் ஒற்றுமையாகவும் செயல்படுவதால் தமிழன்பர்கள் அவர்களினும் மிகுதியாக விழிப்பாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்ற உண்மையை உள்ளத்தில் பதித்தது. உயர்திரு பன்னீர் செல்வம் அவர்களும் தமிழவேள் உமாமகேசுவரம் (பிள்ளை) அவர்களும் அரசர் கல்லூரியில் தமிழ்ப் புலவர் படிப்பை ஏற்படுத்தினர். இதனால் சமசுகிருதம் பயிலும் பிராமணர்கள் நிறைந்த இக்கல்லூரியில் தமிழ் படிக்கத் தமிழ் மாணவர்கள் சேர்ந்தனர். படிப்படியாகத் தமிழ்மாணவர் எண்ணிக்கை பெருகியது. இதனால் பொறாமையுற்ற பிராமண மாணவர்கள் சிலர் சமசுகிருதக்கல்லூரி என்னும் பெயர் உள்ள கல்லூரியில் தமிழுக்கு இடம் தந்தது தகாது எனப் போர்க்கொடி தூக்கினர். இக்கல்லூரியை நிறுவிய சரபோசி மன்னர் தம் அறக்கட்டளை ஆவணத்தில் என்ன குறித்திருக்கின்றார் என ஆராய்ந்து தமிழ் கற்பிக்க நிறுவப்பட்ட கல்லூரி எனக் கண்டறிந்தனர். உடனே சமசுகிருதப் பற்றாளர்கள் உள்ளதும் போய்விடும் என்ற அச்சத்தில் தமிழ், சமசுகிருதம் என இரண்டுமே கற்பிக்கப்படட்டும் என மன்றாடினர். இரக்கமுற்றுத் தமிழ்த் தலைவர்கள் உடன்பட்டாலும் இதே பெயர் இருந்தால் என்றேனும் ஒருநாள் மீண்டும் தொல்லை தருவர் என உணர்ந்தனர்; எனவே, தமிழ், வடமொழி கற்பிக்கும் அரசர் கல்லூரி எனப் பெயர் மாற்றினர். இதனைப் பேராசிரியர் தம் வாழ்க்கை வரலாற்று நூலிலேயே குறிப்பிட்டுள்ளார். பெயரில் என்ன இருக்கின்றது என இளக்காரமாகக் கருதுவது தவறு என்பதற்கு இதுவும் ஒரு சான்று அல்லவா?
பெரும்புலவர் உலகநாதர்(பிள்ளை), கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் (பிள்ளை) முதலான அருந்தமிழ்ப்புலவர்கள் ஆசிரியர்களாக வாய்த்த காரணத்தால் பேராசிரியரின் தமிழ்ப் புலமை சுடர்விடலாயிற்று. கல்லூரி நூலகத்தில் இருந்த, அறிஞர் கால்டுவெல் அவர்களின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் முதலான மொழியியல்பற்றிய ஆங்கில நூல்கள் அனைத்தையும் கற்று மொழி ஆராய்ச்சி அறிவையும் அதனை ஆங்கிலத்தில் புலப்படுத்தும் திறனையும் வளர்த்துக் கொண்டார். கவிதைகளிலும் சொற்பொழிவுகளிலும் கருத்து செலுத்தி வந்தவர் தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைகளை இலக்கிய இதழ்களில் எழுதினார். எனவே, தஞ்சாவூரில் மணம் வீசிய அவர் புகழ்ப்பூ தமிழகமெங்கும் மணம் வீசத் தொடங்கியது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply