இனஅழிப்புமுகாம் :inaazhippumukaam

கண்டுபிடிக்கப்பட்டது இனஅழிப்பு வதை முகாம் : நாம் என்ன செய்யப் போகிறோம்?

  திருகோணமலையில் இயங்கிய கமுக்க முகாம் என்பது தடுப்பு முகாம் அல்ல. அது.இனஅழிப்பு வதை முகாம்.

  வகைதொகையில்லாமல் ஓர் இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கமுக்க இடத்தில் வைத்து ஒரு வேற்றின அரசின் படைகள் சித்திரவதை செய்து படுகொலை செய்வதென்பது இனஅழிப்பு உள்ளடக்கங்களைக் கொண்டது.

 யூதர்களை இனஅழிப்பு செய்ய கிட்லர் பயன்படுத்திய ஆசுட்டுவிச்சு படுகொலை முகாமிற்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் திருகோணமலை இனஅழிப்பு வதைமுகாம்.

  பலவந்தமாகக் காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவிற்கு இது தெரியாததல்ல. அவர்கள் கிட்டத்தட்ட தமது விசாரணை முடிவில் இந்தப் புள்ளிக்கு அண்மையாக ஒத்துவரும் கருத்துகளை வெளியிட்டுள்ளார்கள்.

  எனவே, இனி இதை இனஅழிப்பு என்று நிறுவுவது தமிழர் தரப்பின் கைகளில்தான் தங்கியுள்ளது. உள்குத்துகளையும் உள்ளக முரண்பாடுகளையும் தாண்டிக் களம்,புலம், தமிழகம் எங்கும் பரவியிருக்கும் தமிழர் ஆற்றல் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டிய மிக முதன்மையான தருணம் இது. உண்மையிலேயே மே 18 இற்குப் பிறகு தமிழின அழிப்பு தொடர்பாகக் கிடைத்த குறிப்பிடத் தகுந்த அனைத்துலக ஆதாரம் இது.

  சமந்தா பவரும் இன்று இலங்கை வருகிறார். தமிழர் தரப்பு அவருக்குக் கொடுக்கும் நெருக்கடியே இதன் அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கும்.

  தமிழர்கள் உள்ளுர் அரசியலையும் தாண்டிச் சிறிதளவேனும் பூகோள – மண்டல அரசியல் வழி நின்று சிந்திக்க வேண்டும். அதுவே நடந்த இனஅழிப்புக்கான நீதியை நோக்கி நம்மை நகர்த்தி செல்லும்.

  ஐநா மனித உரிமை ஆணையாளர் அறிக்கையிலுள்ள பாலியல் வல்லுறவுக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆதாரங்களும் மேற்படி பலவந்தமாகக் காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் “இனஅழிப்பு வதை முகாம்” குறித்த (அந்தச் சொல்லாடல் பயன்படுத்தப்படவில்லை. உண்மையில் அந்த முகாம் குறித்த கண்டுபிடிப்பு அதனையே அடையாளப்படுத்துகிறது; உறுதி செய்கிறது) கண்டுபிடிப்பும் நமது நீதிக்கான பயணத்திற்குக் கிடைத்த குறிப்பிடத்தகுந்த சான்றுகளாகும்.

  தமிழின அழிப்பில் ஐநா முதன்மைக் குற்றவாளி என்ற புரிதல் எமக்கு நிறையவே உள்ளபோதும், அதே சமயம் எமது நீதிக்கான பயணத்தில் ஐநாவை விட்டு நாம் விலகி பயணிக்க முடியாதென்று நாம் தொடர்ந்து குறிப்பிட்டு வந்தது இந்தப் பொருளில்தான்.

  இந்த மாதிரியான ஐநாவின் செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்டு அதில் முழுமையாகத் தங்கியிருக்க வேண்டும் என்று இதைப் பொருட்படுத்திக் கொள்ளக்கூடாது.

  ஐநாவின் இனஅழிப்புப் பங்களிப்பை அம்பலப்படுத்தல் – அதற்கு இணையான (சமாந்தரமான) செயற்பாடுகளை நோக்கி நகர்தல் என்று வேறு களங்களையும் தமிழர் தரப்பு திறக்க வேண்டும். அதன் வழி ஐநாவுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவதனூடாக சார்வான விளைவுகளை உருவாக்க முடியும்.

  அதுவே எல்லாரையும் நம்பிப் படுகொலைக் களத்தில் வீழத்தப்பட்ட ஓர் இனத்தின் சாணக்கியமாகவும் – தந்திரமாகவும் இருக்க முடியும்.

  முள்ளிவாய்க்கால் என்பது தோல்வியின் – அழிவின் குறியீடு அல்ல. வெளித்தோற்றத்தை வைத்து அது அப்படிப் பொருட்படுத்தப்படுகிறது. எதிரிகளுக்கு அத்தகைய  பொருட்படுத்தல் தேவையாகவும் இருக்கிறது. ஆனால் உள்ளடக்கத்தில் முள்ளிவாய்க்கால் என்பது எமது விடுதலைக்கான திறவுகோல் என்பதே வெளிப்படையான உண்மை.

  உள்ளக, வெளியக ஆற்றல்கள், கழுத்தறுப்புகள் ஒரு போராட்டத்தை வீழ்த்த ஒன்றிணைந்ததை அடுத்து வேறு தெரிவுகள் இன்றித் தலைவரும், போராளிகளும், தம்மையே ஆகுதியாக்கி நடத்திய சத்திய வேள்வி அது.

  யார் எப்படி அதைப் புரிந்து கொண்டாலும் நாம் முள்ளிவாய்க்காலை அப்படித்தான்: புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் அறம் மட்டுமல்ல எமது விடுதலைக்கான அடித்தளமும்கூட..

  இன்று கிடைத்துக்கொண்டிருக்கும் இனஅழிப்பு ஆதாரங்கள் இதை உறுதிசெய்கின்றன.

  மாவீரர்நாளை நினைவுகூரும் கனத்த நாட்களில் நாம் இருக்கிறோம். இன்றிலிருந்தாவது அவர்களது ஈகத்தைப் பொருளுள்ளதாக்க முரண்பாடுகளைக் களைந்து ஒன்றிணைவோம்.

இனி எல்லாம் எமது கைகளிலேயே தங்கியுள்ளது

மணி மாறன்

ஈழம் மி-செய்தி

முத்திரை-வெளிச்ச வீடு :muthirai_velichaveedu