(தோழர் தியாகு எழுதுகிறார் 195 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.).! 2/4 – தொடர்ச்சி)

இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 3/4


புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன?
இவை காங்கிரசு அரசால் கொண்டு வரப்பட்டாலும் இதன் பயன்பாடு பாசக ஆட்சியில்தான் பெருமளவு அதிகரித்திருக்கிறது. காங்கிரசு ஆட்சிக் காலத்தில் ஆண்டொன்றுக்கு 13 சஎதச(ஊபா) வழக்குகள் போடப்பட்டன என்றால் மோடி ஆட்சியில் ஆண்டொன்றுக்கு 34 வழக்குகள் என்னும் அளவுக்கு இது அதிகரித்திருக்கிறது.

பெரும்பாலான சஎதச(ஊபா) வழக்குகளில் பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்வதற்கான சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற சந்தேகக் காரணத்திற்கே பிரிவு 18 பயன்படுத்தப்படுகின்றது. தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வால் புலனாய்வு செய்யப்படும் 357 சஎதச(ஊபா) வழக்குகளில் 238 வழக்குகளில் பிரிவு 18 பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் வெறும் 36% வழக்குகளில் மட்டுமே ஏதோ ஒரு பயங்கரவாதச் சம்பவம் நடந்திருக்கிறது. மற்றவற்றில் எல்லாம் குற்றச் செயல்கள் எதுவும் நடைபெறவில்லை; சதிதிட்டம் தீட்டினார்கள் என்ற பெயரில் பணம் கிடைத்தது, ஆயுதம் கிடைத்தது என்று சொல்லி பிரிவு 18 பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரைத் தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்று சொல்லி இப்பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்படுகிறது.

சஎதச(ஊபா) வழக்குகளின் விசாரணை முடிவதற்குக் குறைந்தது 3 இல் இருந்து 5 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. பிணையை மறுத்து ஆண்டுக்கணக்கில் ஒருவரைச் சிறையில் அடைத்து வைப்பதே சஎதச(ஊபா)வின் குறி.

ஒன்றிய உள்துறை அமைச்சகம் மக்களவையில் கொடுத்த புள்ளிவிவரப்படி சஎதச(ஊபா) வழக்குகளில் சிறைபட்டோரில் 2018 இல் 16.32%, 2019 இல் 32.08%, 2020 இல் 16.88% மட்டுமே பிணையில் வெளிவந்துள்ளனர்.

சஎதச(ஊபா) வழக்குகளில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டுத் தண்டனை பெறும் விழுக்காடு சராசரியாக 27.57( 2015 – 2020 காலத்தில்) மட்டுமே. இதேகாலப்பகுதியில் சஎதச(ஊபா)வில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெறும் ஆட்களின் விழுக்காடு சராசரியாக 2.80 மட்டுமே.

(மேற்சொன்ன புள்ளிவிவரங்கள் அனைத்தும் மக்கள் குடிமை உரிமைக் கழகம்(PUCL) கடந்த 2022 அட்டோபரில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இருந்து பெறப்பட்டவையாகும்.)

‘குற்றம் இழைக்கவில்லை’ என மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு குற்றஞ்சாட்டப்பட்டவரின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வேறுவிதமாக மெப்ப்பிக்கப்படும்வரை யாரும் குற்றவாளி அல்ல என்ற இயற்கை நீதிக்கான கருத்தைத் தலைகீழாக மாற்றுகிறது சஎதச(ஊபா).

சஎதச(ஊபா) சொல்லும் அதிருப்தி என்றால் என்ன?
“இந்தியாவிற்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு குடிமகனையும் கைது செய்ய இந்தச் சட்டம் அரசுக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்குகிறது.அல்லது எதிர்காலத்தில் இத்தகைய அதிருப்தியை ஏற்படுத்தக்கூடிய ஆட்களைத் தடுத்து வைக்கலாம் என்கிறது.

இந்த அதிருப்தியின் பொருள் என்ன? பழங்குடிகள் தங்கள் நிலத்தில் வாழ்வதற்கான உரிமைக்காகவோ (காடுகள் உரிமைச் சட்டத்தின்படி) உழவர்கள் நிலத்தை உழுவதற்கான உரிமைக்காகவோ தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைக்காகவோ இசுலாமியர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவோ ஒருவர் பேசத் துணிந்தால், அதிருப்தியை ஏற்படுத்தியதற்காக அவர் சஎதச(ஊபா)வின் கீழ்க் குற்றஞ்சாட்டப்படலாம்!

யாரைத்தான் விட்டுவைத்தது சஎதச(ஊபா)?
மராட்டியத்தில் பீமா கோரேகான் வழக்கு!

கனிம வளங்களை பெருநிறுமங்கள்(கார்ப்பரேட்கள்) கொள்ளையடிப்பதற்கு எதிராக பழங்குடிகள் நடத்தும் போராட்டத்திற்குத் துணைநின்றவர்கள், தணிந்த(தலித்து) மக்களின் உரிமைக்காக உழைத்தவர்கள் இவ்வழக்கில் சிக்க வைக்கப்பட்டனர். நாடறிந்த மனிதவுரிமைச் செயற்பாட்டாளர், கலைஞர்கள், பேராசிரியர்கள், அருட்தந்தை இசுடான் சுவாமி முதலான 16 பேர் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் சிறைப்பட்ட அருட்தந்தை இசுடான் சுவாமி பார்க்கின்சன் நோய்க்கு ஆளாகியிருந்த 85 அகவை முதியவர். சிறையில் அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டு இவர் சாகடிப்பட்டதை நாடே கண்டது.

பீமா கோரேகான் வழக்கில் மூன்றுமுறை குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டுப் புதியபுதிய ஆட்கள் சேர்க்கப்பட்டனர். தலைமை அமைச்சரைக் கொல்ல சதிசெய்தனர் என்பதொரு குற்றச்சாட்டு. ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கணிணிக்குள் திருட்டுத்தனமாகச் சான்றுகளைத் திணித்துள்ளது மோடி அரசு என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. ஆனாலும் இவ்வழக்கில் பத்துக்கும் மேற்பட்டோர் இன்றளவும் பிணை மறுக்கப்பட்டுச் சிறையில் வாடிவருகின்றனர்.

மாணவர்களின் சுதந்திரமான சிந்தனை வளர்ச்சிக்கு துணைசெய்யும் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உள்ள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பல்கலைக்கழகங்களில் சனநாயகத்திற்கான துடிப்பான போராட்டங்களையும் விவாதங்களையும் முன்னெடுக்கக் கூடியவர்கள் வேட்டையாடப்பட்டனர். குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமர் காலித்து, சருசீவு இமாம் ஆகிய இருவரும் தில்லியில் நடந்த வன்முறைகளில் சதித் திட்டம் தீட்டியவர்கள் என்று சஎதச(ஊபா)வின் கீழ்க் குற்றஞ்சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சஃபூரா சார்கர், குல்சிமா பாத்திமா, நடாசா நர்வால், அசிப் இக்குபால் தன்கா, மீரான் ஐதர், தேவங்கனா கலிடா முதலான மாணவர்கள் சஎதச(ஊபா) வின் கீழ் வழக்கை எதிர்கொண்டவர்கள் ஆவர்.

ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இராசுதீபு சருதேசாயும் வினோத்து கே சோசும் உழவர் போராட்டத்தின் நிகழ்வுகளைக் குற்றாய்வு செய்ததற்காக அரசஇரண்டகச் சட்டத்தின்கீழ் வழக்கை எதிர்கொண்டனர். கவுகர் கீலானி, மசுரத்து சாக்குரா, பீர்சாடா ஆசிக்கு ஆகிய காசுமீரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மீது சஎதச(ஊபா)வின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் சித்திக்கு கப்பான் மீது உத்தரபிரதேச அரசு சஎதச(ஊபா) பிரிவுகளின்கீழ் வழக்குப் போட்டது.

பாசக அரசால் இயற்றப்பட்ட மக்கள் எதிர் வேளாண் சட்டங்களுக்கு எதிரான உழவர் போராட்டத்தின் போது அவர்கள் மீது சஎதச(ஊபா)வின்கீழ் வழக்குப் போட்டது மோடி அரசு.
அரசு உதவிபெறும் சுரங்க நிறுவனங்கள், தனியார் சுரங்க நிறுவனங்களிடம் உள்ள சட்டஎதிர் சுரங்கத்தை எதிர்த்துப் போராடும் மாவோவியர்கள், பிற பழங்குடிகளை இச்சட்டத்தின் கீழ் வேட்டையாடுகின்றனர். சார்க்கண்டின் மசுதூர் சங்கதன் சமிதி (இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டப்பூர்வமாக செயல்பட்டு 22,000 பழங்குடியினத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழிற்சங்கம்) போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களை அமைப்பாக்கும் தொழிலாளர்கள் அல்லது பம்பாய் மின்சார ஊழியர் சங்கத்தின் தொழிலாளர்கள் ஊபா( UAPA)வின் கீழ்க் கைது செய்யப்பட்டுச் சிறையில் நீண்ட காலம் அடைக்கப்பட்டனர். இதனால் அவர்களின் தொழிற்சங்கம் சிதைக்கப் பட்டது.

இசுலாமியர்கள், சீக்கியர்கள் ஆகிய மதச் சிறுபான்மையிருக்கு எதிராக இச்சட்டம் மிக மோசமாகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சமூகங்களைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் பிணையின்றிச் சிறையில் வாடுவது நடந்து கொண்டிருக்கிறது. எந்தக் குற்றமானாலும் இசுலாமியர் என்றால் சஎதச(ஊபா) பிரிவுகளைப் பயன்படுத்துவதும் அரச இயந்திரத்தின் இயல்பாக மாறிவருகின்றது. எடுத்துக்காட்டாக, முகமது அமீர் கான் என்ற இசுலாமிய இளைஞர் சஎதச(ஊபா) வின் கீழ்க் குற்றஞ்சாட்டப்பட்டு ’குற்றமற்றவர்’ என்று விடுதலை ஆவதற்கு முன்பு 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.


இவர்களுக்கு வாதாட முன்வரும் வழக்கறிஞர்கள் மீதும் சஎதச(ஊபா) பாய்கிறது. மராட்டியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்கு, தெலங்கானாவைச் சேர்ந்த 9 வழக்கறிஞர்கள், தமிழ்நாட்டில் வழக்கறிஞர் முருகன் எனசஎதச(ஊபா) வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்காக வாதாட முன்வந்த வழக்கறிஞர்களை சிறையில் அடைத்து மிரட்டும் வரிசையில்தான் இன்று முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்துத்துவத்தின் இந்து தேசியத்தை ஏற்காத இசுலாமியர்கள் ஒருபக்கம்! இந்து தேசியத்தை ஏற்காத காசுமீர், தமிழ்நாடு, பஞ்சாப்பு, நாகலாந்து, மணிப்பூர்முதலான மாநிலங்களைச் சேர்ந்த தேசிய இன அரசியல் ஆற்றல்கள் இன்னொருபக்கம்! இந்துத்துவத்தின் பெருநிறுமக்(கார்ப்பரேட்டு) கொள்ளையை எதிர்க்கும் மத்திய இந்தியாவைச் சேர்ந்த பழங்குடிகள், நக்குசல்பாரி அமைப்பினர், உழவர்கள், தொழிலாளர்கள், இன்னொருபக்கம்! இவர்கள் எல்லாரும் இந்தியாவுக்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்தியதற்காக சஎதச(ஊபா)வின் கீழ்க் குற்றஞ்சாட்டப்பட்டு வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.


(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 223