(தோழர் தியாகு எழுதுகிறார் 212 : “ஐம்பது பவுனும் ஐந்நூறு தலைக்குத்தும்”-தொடர்ச்சி)

தமிழ்ப் பணி, பின் ஆலயப் பணி

இனிய அன்பர்களே!


வரலாற்றில் சுவடு பதித்த பெருமக்களை வெறும் அறிவூற்றுகளாகப் பார்த்தலும் பார்க்கச் செய்தலும் போத மாட்டா. அவர்களைக் குருதியும் சதையுமாக அறிதலும் அறியச் செய்தலும் வேண்டும். காலம் நீண்டு கரைந்த பின் இதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்போதும் கூட அவர்களின் அறிவுப் படைப்புகள் அல்லாத பொருண்மியப் படைப்புகள் அவர்களைக் கற்கப் பேருதவியாகும். அவ்வுலகியத்தில் ஆழ்ந்த சமயக் குருமார்களைப் பொறுத்த வரை அவர்களின் இவ்வுலகிய ஈடுபாடுகளும் ஆக்கங்களும் நம் மதிப்பாய்வுக்கு முகன்மையானவை.

காலுடுவெல்லின் முதற்பெரும் படைப்பு (magnum opus) “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்”தான் என்பதில் ஐயத்துக்கிடமில்லை.

காலுடுவெல் ஒப்பிலக்கணம் நூலினை கிரியர்சன் மொழியாராய்ச்சிக் குறிப்புகளுடன் காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை, கா. அப்பாதுரை பிள்ளை ஆகியோரின் அழகான தமிழாக்கத்தில் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1941 செட்டம்பரில் வெளியிட்ட போது அதன் பதிப்புரை இவ்வாறு கூறிற்று:

எண்ணிற் சிறந்ததுந் தமிழ்: எழுத்திற் சிறந்ததுந் தமிழ்:
பண்ணிற் சிறந்ததுந் தமிழ்; பாரிற் பரந்ததுந் தமிழ்;
மண்ணிற் பழையதுந் தமிழ்: மாசற்றொளிர்வதுந் தமிழ்;
கண்ணிற் சிறந்ததுந் தமிழ்; கண்ணிமை சான்றதுந் தமிழ்
!

தேனினுமினியது தமிழ், தெவிட்டாச் சுவையது தமிழ்;
இலக்கணஞ் சிறந்தது தமிழ், இயல்வளஞ் செறிந்ததுதமிழ்;
ஒப்புயர்வற்றது தமிழ், ஒண்கலை நிறைந்தது தமிழ்;
தன்னேரிலாதது தமிழ்; தனிப் பதம் வாய்ந்தது தமிழ்”

என்றெல்லாம் பாட்டாலும் உரையாலும் பலப்படப் புகழ்ந்து மகிழும் பான்மையது உயர்தனிச் செம்மொழியாகிய நந்தமிழ் மொழி, எனினும் இச்சீரிய மொழியின் உயர்வு சிறப்புகளைத் தமிழ் மக்கள் மட்டும் எடுத்துக்கூறிக் கொள்வது அத்துணைச் சிறப்பெய்துவிப்பதாகது. என்னை? உலகில் வழங்கும் மொழிகள் பலப்பல; அவ்வம் மொழிக்குரியார் தத்தம் மொழியே தலைசிறந்தது என்று கூறிக் கோடல் இயல்பேயாகலின், உலக மொழிகள் பலவற்றுள்ளும் சிறந்த மொழிகள் சிலவற்றைத் தேர்ந்து கொண்டு அவற்றுடன் தமிழ் மொழியை ஒப்பிட்டுச் சீர்தூக்கி எவ்வகையிலும் சிறந்தது தமிழ்மொழியே என்று முடிவு கூறின், யாவராலும் அஃது எளிதில் ஏற்றுக்கொள்ளப்பெறும். அதிலும் தமிழ்மொழிக்குரியலரான வேறொரு செம்மொழியாளர் காய்தலுவத்தலின்றித் தேர்ந்து, ஆராய்ந்து தெளிந்து அத்தகைய முடிபு கூறின் அதை விரைந்தேற்று போற்றுதல் அனைவர்க்கும் கடனன்றோ?

அத்தகைய அரும்பெறலாராய்ச்சியைச் செய்து முடித்துத் தமிழ் மொழிக்கு ஏற்றம் அளித்த பெரியார் நேரிய வணக்கத்திற்குரிய (Right Reverend) இராபருட்டு காலுடுவெல், டி.டி., எல்.எல்.டி., ஆவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலிருந்து தமிழ்நாடு போந்து கிறித்து சமயத் தொண்டுடன் தமிழ்த் தொண்டும் புரிந்த ஐரோப்பியர் பலருள்ளும் கால்டுவெல் ஐயர் தலைசிறந்தவர் ஆவார். அவர் இயற்றியளித்த “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற ஒப்பரிய ஆராய்ச்சி நூல் தமிழ் மொழிக்கு உலக மொழிகளிடையே வியக்கத் தக்கதோருயர் நிலையளித்தது. தமிழ் மொழி வளர்ச்சிக்குப் புத்துயிரளித்தது. தமிழ் மக்களின் பண்டைப் பெருமைக்கும், நாகரிகச் சிறப்பிற்கும், கலை வளத்திற்கும் என்றும் அழியாச் சான்று பகர்ந்தது; பகராநின்றுவருகின்றது.

இராபருட்டு காலுடுவெல்லின் வாழ்க்கைப் பெரும்பணி தமிழுக்கானது, அது மொழிநூல் தொடர்பானது. நோக்கங்கள் என்னவாயினும் அவர் தந்த ஒப்பிலக்கணம் குமுக-அரசியல் தாக்கங்கள் கொண்டது. காலுடுவெல்லின் ஒப்பிலக்கண நூல் ஒப்பிலாதது. அது பற்றிய மதிப்பாய்வுகள், கருத்தெதிர்க் கருத்துகள் இன்றளவும் தொடர்கின்றன. முதுபெரும் அறிஞர்கள் முதல் இளம் மாணவர்கள் வரை கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலை விரிவாழ்ந்து ஆராய்வது மகிழ்வுக்குரியது.

தமிழராய்ச்சிக்கு அடுத்தபடி அவர் செய்த சமயப் பணிக்கு நிலைத்த சான்றாக இருப்பது தூயத் திரித்துவ ஆலயம் (மும்மைக் கோயில்).
அந்தக் கோயிலுக்குள் அருள்திரு கிப்புசனோடும் நெல்லை பீட்டரோடும் காலுடுவெல் நினைவகப் பணியாளரோடும் நிற்கிறேன். சற்றொப்ப ஓராண்டு முன்பு தி இந்து ஆங்கில நாளிதழில் இந்தக் கோயில் குறித்து The Lasting Legacy of Idayankudi’s Transformation என்ற தலைப்பில் பி. கோலப்பன் எழுதிய வரிகளை நினைவு கூரலாம்:

A few sara kontrai trees (Cassia fistula) in full bloom and a variety of trees, particularly giant tamarinds, on the campus of the Holy Trinity Church in Idayankudi in Tirunelveli present a contrasting look to the period when Robert Caldwell arrived here in 1841. As the scholar-missionary had reminisced later, there was hardly anything but sand and palmyras, and he even had plans of relocating himself away from the neighbourhood.

Today, the transformation and the lasting legacy of Caldwell, who authored the Comparative Grammar on the Dravidian or South-Indian family of Languages, are ubiquitous in Idayankudi. One should climb the bell tower of the church that was constructed under his supervision in order get a bird’s eye view of the development. Even after a century, the church retains its pristine condition. A few boys tried to strike up a tune by tapping the bells and music filled the air.

நெல்லை இடையன்குடியில் தூயத் திரித்துவ தேவலாய வளாகத்தில் பூத்துக்குலுங்கும் சரக்கொன்றை மரங்கள், வேறு பல வகையான மரங்கள், குறிப்பாகப் பெரும் பெரும் புளிய மரங்கள். 1841ஆம் ஆண்டு காலுடுவெல் இங்கு வந்திறங்கிய காலத்தில் இருந்த நிலைமையே வேறு. அறிஞரும் திருப்பணியாளருமாகிய அவர் பிற்காலத்தில் தம் நினைவுக் குறிப்புகளில் எழுதியது போல், அங்கு காணப்பட்டதெல்லாம் மணலும் பனை மரங்களும் தவிர வேறில்லை எனலாம். அவரே கூட அங்கிருந்து வேறு பகுதிக்குப் பெயரலாமா என்று பார்த்தாராம்.

இன்று, திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்ப ஒப்பிலக்கணம் எழுதிய காலுடுவெல் நிகழ்த்திய மாற்றமும், நீடித்து நிலைக்கும் அவரது மரபுச் செல்வமும் இடையன்குடியில் நீக்கமற மணக்கின்றன. இங்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பறவைப் பார்வை பார்க்க வேண்டுமானால் அவரது மேற்பார்வையில் கட்டப்பட்ட மணிக் கோபுரத்தில் ஏறிப் பார்க்க வேண்டும். அகவை நூறுக்கு மேல் ஆன பிறகும் இந்தத் தேவாலயத்தின் தொல்வனப்பு குன்றவில்லை. சிறுவர்கள் சிலர் மணிகளையடித்துப் பண் மீட்ட, இன்னிசை காற்றில் கலந்து பரவியது.

இதோ அந்தக் கோபுரம்! கால்டுவெல் கட்டியது. உச்சியில் அந்த மணிகள்! கதவு திறந்து அந்த மங்கலான அறைக்குள் நுழைந்து படியேறலானோம். எனக்கு முன் அந்த இளைஞர் செல்பேசியிலிருந்து எனக்கு வெளிச்சம் காட்டிக்கொண்டு முன்செல்ல எனக்குப் பின்னால் அருள்திரு கிப்சனும் பீட்டரும். மிகக் குறுகலான சுழற்படிகள் வழியே ஏறினோம். “ஐயா, கவனம்” என்று எனக்குச் சொல்லிக் கொண்டே இருந்தனர்.

ஒருவருக்கு மட்டும்தான் வழி. முந்திச் செல்லவும் முடியாது, எதிரில் வந்து கடந்து செல்லவும் முடியாது. குண்டாக இருந்தால் நுழையவே முடியாது, திணறியடித்து ஏறினாலும் இடையில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். கைப்பிடியெல்லாம் கிடையாது. படிகளும் சுவரும் வழுக்காத பழுப்புக் கருங்கல்லில் அமைக்கபப்ட்டிருந்தன. இதோ இதோ என்று படிக்கட்டு முடிவின்றிப் போவது போல் இருந்தது. ஆனால் ஏறி முடிக்கும் பொது 25-26 படிகள்தான் இருக்கும் என்று தெரிந்து கொண்டேன். ஆனால் முதல் தளத்தைதான் அடைந்திருந்தோம். அங்குதான் அந்தப் பெரிய மணிகள் வைக்கப்பட்டுள்ளன.

உச்சிக்குச் செல்ல இன்னும் பல படிகள் ஏற வேண்டும். அவை மரப் படிகள், இன்னுங்கூட செங்குத்தாகவும் உயரமாகவும் இருந்தன. அருள்திரு கிப்புசன் நல்ல உயரம். அவருக்கு முன்பே ஏறிய அனுபவமும் இருக்க வேண்டும். எத்தனைப் படியானாலும் எவ்வளவு கடினமாய் இருந்தாலும் ஏறி விட வேண்டும் என்ற உறுதி மட்டும் எனக்கிருந்தது. உச்சிக்குச் செல்லச் செல்லப் படிகள் இன்னுங்கூடுதலான குத்துயரத்தில் இருந்தன. மரம் தேய்ந்து சற்றே சரிவாகவும் இருந்தன. ஏறி ஏறிக் கடைசியில் கையை ஊன்றி ஓர் உந்து உந்தி உடலைத் திருப்பி உட்கார்ந்து எழுந்து உச்சியை அடைந்து விட்டோம். அவ்வளவுதான்!

இங்கிருந்து கொண்டு சுற்றுமுற்றும் பார்க்க உவரிக் கடல் வரை காண முடிந்தது. அந்த உச்சியில் அமர்ந்து காற்றின் விரைவீச்சுக்கு நடுவில் அருள்திரு கிப்புசனிடம் கேட்டுக் காலுடுவெல் பற்றியும், அவர் கட்டிய தூய திரித்துவ ஆலயம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் இருந்தன. மூச்சு முட்ட ஏறியதற்குப் பலன் இருக்க வேண்டுமே?

நான் ஒருபோதும் மறவாத அந்த மார்க்குசு மேற்கோள் அப்போதும் நினைவுக்கு வந்தது:
“அறிவியலுக்கு அரச பாட்டை ஏதுமில்லை. அதன் களைப்பூட்டும் செங்குத்துப் பாறைகளில் ஏறத் துணிந்தவர்களுக்கே அதன் ஒளிரும் உச்சிகளை எய்துகிற வாய்ப்புண்டு.”

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 239