(தோழர் தியாகு எழுதுகிறார் 248 : உயிரற்ற உடலும் உண்மைக்குப் போராடும் – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

தாழி (277) மடலில் வெளியிட்ட UPR IN TAMILNADU  THE REFUGEE CRISIS IN TAMILNADU அறிக்கையின் தமிழாக்கம் இதோ –

தமிழ்நாட்டில் உலகளாவிய காலவட்ட மீளாய்வு –

தமிழ்நாட்டில் ஏதிலியர் நெருக்கடி 

1.    தமிழ்நாடு ஓர் இந்திய மாநிலம். தமிழ்நாட்டின் ஏதிலியர் நெருக்கடி என்பது இந்தியாவின் எதிலியர் நெருக்கடியில் ஒரு பகுதியாகும். ஆனால் இந்தியாவின் ஏதிலி நிலவரையில் தமிழ்நாட்டுக்குரிய தனியிடத்தை மறுப்பதற்கில்லை.

2.    தமிழ்நாடு அரசு இலங்கைத் தமிழ் அகதிகள் பற்றி 01. 06. 2021இல்  வெளியிட்ட  கணக்கெடுப்பில் உள்ளபடி, 106 முகாம்களும் இரண்டு சிறப்பு முகாம்களும் (இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி) உள்ளன. முகாம்களுக்குள் 58,822 ஏதிலியர் கொண்ட 18,944 குடும்பங்களும், முகாம்களுக்கு வெளியே 34,122 ஏதிலியர் கொண்ட 13, 533 குடும்பங்களும் உள்ளன. இரண்டு சிறப்பு முகாம்களிலும் 70 தமிழ் ஏதிலியரும், சென்னை அருகே கேளம்பாக்கத்தில் மியான்மரிலிருந்து வந்த 20 குடும்பங்களைச் சேர்ந்த 80 (உ)ரோகிங்க்யா ஏதிலியரும் உள்ளனர்.       

3.    இந்தியா 1948ஆம் ஆண்டிற்குரிய உலகளாவிய மாந்தவுரிமைச் சாற்றுரையில் ஒப்பமிட்டுள்ளது. ஆனால் 1951ஆம் ஆண்டிற்குரிய ஏதிலியர் தகுநிலை பற்றிய ஐநா உடன்படிக்கையிலும், 1967ஆம் ஆண்டிற்குரிய வகைமுறை உடன்பாட்டிலும் அது ஒப்பமிடவில்லை. அவற்றில் ஒப்பமிட உறுதியாகத் தொடர்ந்து மறுத்து வருகிறது. ஏதிலியரும் நாடற்றோரும் தொடர்பான உடன்படிக்கைகளை ஏற்புறுதி செய்யுமாறு ஐநா ஏதிலியர் உயராணையம் (UNHCR) அளித்த பரிந்துரையை இரண்டாம் உலகளாவிய காலவட்ட மீளாய்வில் (UPR II) இந்தியா ஏற்கவில்லை. இந்தியாவில் ஏதிலியர் (அகதிகள்) உண்டு. ஆனால் ஏதிலியரை அறிந்தேற்றல், பதிவேற்றுதல், நடத்துதல் பற்றிய சட்டம் எதுவுமில்லை. ஆகவே இந்தியா இலங்கை ஏதிலியரை உறைவிடம் தேடுவோர், சட்டப் புறம்பாகக் குடிபெயர்ந்தோர் அல்லது (அயலார் சட்டத்தின் படி) அயலாராக நடத்துகிறதே தவிர, ஏதிலியருக்கான ஐநா உயராணையம் வழிகாட்டியவாறு ஏதிலியராக நடத்தவில்லை.

4.    தஞ்சம் நாடுவோரையும் ஏதிலியரையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கைகளில் ஒப்பமிடவும்,  இப்பொருள் குறித்து உள்நாட்டுச் சட்டத்தின் ஊடாக ஒரு சட்டமுறைப்படியான செயல்வழியை இயற்றவும் இந்தியா தவறி விட்டமைதான், மதத்துக்கு மதம் பாகுபாடு காட்டக் கூடியதும், எனவே அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானதுமாகிய பேர்போன குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இந்திய அரசால் இயற்ற முடிந்தமைக்குக் காரணமாயிற்று.

5.    தமிழ்நாட்டினால் தன் பேணுகையில் உள்ள ஏதிலியரின் நலம் பற்றி மட்டுமே பேச முடியும் – ஏதோ அவர்களின் உரிமைகளை உறுதி செய்யாமலே கூட அவர்களின் நலத்தைக் காக்கவும் மேம்படுத்தவும் முடியும் என்பது போல! இந்தியக் குடியுரிமைக்கான அவர்களின் தேடலைத் தமிழக அரசு ஆதரிக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு அவர்களின் கோரிக்கையைக் கருதிக் கூடப் பார்க்காது.

பரிந்துரைகள்:

1)    ஐநா ஏதிலியர் உயராணையம் பரிந்துரைத்துள்ளவாறு ஏதிலியரும் நாடற்றோரும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கைகளில் இந்தியா ஒப்பமிடவும் அவற்றை ஏற்புறுதி செய்யவும் வேண்டும். ஏதிலியரை நடத்தும் முறை பற்றி உள்நாட்டுச் சட்டமும் இயற்ற வேண்டும்.

2)    ஐக்கிய நாடுகள் ஏதிலியர் உயராணையம் அனைத்து ஏதிலியர் முகாம்களிலும் முழு வலிமையுடன் இயங்க இந்தியா இடமளிக்க வேண்டும். ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் குறுக்கிடாமல் ஐநா ஏதிலியர் உயராணையம் தற்சார்பாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

3)    இந்தியா தன் குறையைச் சரிசெய்யுமுகத்தான் தெற்காசிய வட்டார ஒத்துழைப்புச் சங்கத்தின் (சார்க்) சார்பைப் பயன்படுத்தி, ஏதிலியர் பற்றிய 2004 தெற்காசியச் சாற்றுரையையும், பன்னாட்டு உடன்படிக்கைகளையும், ஏதிலியர் பற்றிய 1984 கார்ட்டசெனா சாற்றுரையையும் கருதிப் பார்க்கலாம்.

4)    பல்வேறு வட்டாரங்களிலிருந்தும் வகைபிரித்த காலங்களிலிருந்தும் வரக் கூடிய ஏதிலியர்களுக்கிடையே இந்தியா பாகுபாடு காட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஐந்தாண்டுக்கு மேல் இந்தியாவில் தங்கியுள்ள அகதிகள் அனைவர்க்கும், இந்தியாவில் பிறந்த அவர்களின் குழந்தைகளுக்கும் இந்தியா குடியுரிமை வழங்க வேண்டும். இந்தியாவும் சிறிலங்காவும் இலங்கை திரும்ப விரும்புவோரின் அடிப்படைத் தேவைகள் அனைத்துக்கும் கூட வழிவகை செய்ய வேண்டும்.

5)    இந்திய வம்சாவளித் தமிழ் ‘அகதிகள்’ எனப்படுவோர் உள்ளடியே தாயகம் திரும்பியோர்தாம் என்பதால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் சிக்கலைத் தீர்க்கும் வகையில் இந்திய அரசு இந்திய வம்சாவளியினரான ஏதிலியரைக் கண்டறிவதற்காக தமிழ்நாட்டிலும் வெளியிலும் உள்ள ஏதிலியர் முகாம்களில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குவது பற்றி திருவாளர் சாஸ்திரி, திருவாட்டி சிறிமா பண்டாரநாயக்கா ஆகிய இரு தலைமையமைச்சர்களும் ஒப்பமிட்ட உடன்பாட்டின் படி அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். இவ்வாறான தாயகம் திரும்பியோருக்குக் குடியுரிமை வழங்குவது இந்திய அரசுக்கு ஒரு பன்னாட்டுக் கடப்பாடு ஆகும். இனியும் காலத்தாழ்வின்றி இதனைச் செய்து முடிக்க வேண்டும்.

6)    உண்மையில் சட்ட ஆணை இல்லாத சிறைச்சாலைகளே ஆன (ஐநா கூடுதல் வகைமுறைகள் I, II, 1977) இலங்கைத் தமிழ் ஏதிலியருக்கான சிறப்பு முகாம்களை இந்திய மூடிவிட வேண்டும்.

(தொடரும்)
தோழர் தியாகு 18/02/2022.  

தாழி மடல் 279