(திருக்குறள் அறுசொல் உரை 108. கயமை தொடர்ச்சி)

 

 

திருக்குறள் அறுசொல் உரை

03. காமத்துப் பால்

14. களவு இயல்

 

  அதிகாரம் 109. தகை அணங்கு உறுத்தல்

                   தகுதிமிகு தலைமகளது அழகு,

                   தலைமகனது  மனத்தை  வருத்துதல்

                                     

                    (01-10  தலைமகன்  சொல்லியவை)

 

  1. அணங்குகொல்…? ஆய்மயில் கொல்லோ…? கணங்குழை

      மாதர்கொல்….? மாலும்என் நெஞ்சு.

       தெய்வ மகளோ….? மயிலோ….?

மண்மகளோ….? என்மனம் மயங்கும்.

 

  1. நோக்கினாள்; நோக்(கு)எதிர் நோக்குதல், தாக்(கு)அணங்கு

      தானைக்கொண்(டு) அன்ன(து) உடைத்து.

அவளின் எதிர்ப்பார்வை, தெய்வமகள்

படையோடு தாக்குவது போன்றது.

 

  1. பண்(டு)அறியேன் கூற்(று)என் ப(து);அதனை, இனிஅறிந்தேன்,

      பெண்தகையால் பேர்அமர்க் கட்டு.

       பெண்வடிவில் போரிடுவதே எமன்

என்பதை, இன்று அறிந்தேன்.

 

  1. கண்டார் உயிர்உண்ணும் தோற்றத்தால், பெண்தகைப்

      பேதைக்(கு) அமர்த்தன கண்

       இவ்இளம் பெண்ணின் கண்கள்,

காண்பாரோடு போரிட்டு உயிர்குடிக்கும்.

 

  1. கூற்றமோ….? கண்ணோ….? பிணையோ….? மடவரல்

      நோக்கம்,இம் மூன்றும் உடைத்து.

        எமனோ….? கண்களோ….? பெண்மானோ….?

இவளது பார்வையில், இம்மூன்றும்.

 

  1. கொடும்புருவம் கோடா மறைப்பின், நடுங்(கு)அஞர்

      செய்யல மன்இவள் கண்.

இவளது புருவம் வளையாது

இருந்திருந்தால், துன்பம் வந்திராது.

 

  1. கடாஅக் களிற்றின்மேல் கண்படாம், மாதர்

      படாஅ முலைமேல் துகில்.

இவளது இளமார்பக மேல்ஆடை,

யானையின் முகப்படாம் போன்றது.

 

  1. ஒண்ணுதற்(கு) ஓஒ உடைந்ததே…! ஞாட்பினுள்,

      நண்ணாரும் உட்கும்என் பீடு.

பகைவரிடம் என்வீரம், தோற்காது;

இவளது அழகுமுன், தோற்றதே….!

 

  1. பிணைஏர் மடநோக்கும், நாணும் உடையாட்(கு),

      அணிஎவனோ ஏ(து)இல தந்து….?

மான்பார்வை, நாண்அழகு உடையாளுக்கு

மற்ற நகைகள் எதற்கு….?

 

  1. உண்டார்கண் அல்ல(து), அடுநறாக், காமம்போல்,

      கண்டார் மகிழ்செய்தல் இன்று.

கள்ளை, உண்டால்தான் மகிழ்ச்சி;

காதலியைக், கண்டாலே மகிழ்ச்சி.

பேரா.வெ.அரங்கராசன்