(அதிகாரம் 072. அவை அறிதல் தொடர்ச்சி)

attai_kuralarusolurai

02. பொருள் பால்
06. அமைச்சு இயல்
அதிகாரம் 073. அவை அஞ்சாமை

             கூட்டத்தார் திறன்களை ஆராய்ந்து

              சற்றும்  அஞ்சாது பேசும்திறன்

  1. வகைஅறிந்து வல்அவை வாய்சோரார், சொல்லின்

     தொகைஅறிந்த தூய்மை யவர்.  

         தூயநல் சொல்அறிஞர் சொல்வல்லார்

        கூட்டத்தில் வாய்தவறாது பேசுவார்.

  1. கற்றாருள் கற்றார் எனப்படுவர், கற்றார்முன்

     கற்ற செலச்சொல்லு வார்.              

         கற்றார் மனம்பதியச் சொல்வாரே

        கற்றாருள் கற்றார் எனப்படுவார்.       

  1. பகைஅகத்துச் சாவார், எளியர்; அரியர்,

     அவைஅகத்(து) அஞ்சா தவர்.

        போர்க்களத்தில் சாவார், மிகப்பலர்;  

        அவைஅஞ்சாது சொல்வார், மிகச்சிலர்.

  1. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித், தாம்கற்ற

     மிக்காருள் மிக்க கொளல்.

        கற்றார்முன் மனத்துள் செலச்சொல்;

        மிகக்கற்றாரிடம் கல்லாதன கேள்.

  1. ஆற்றின் அள(வு)அறிந்து கற்க, அவைஅஞ்சா

     மாற்றம் கொடுத்தல் பொருட்டு.

        அவையில் தெளிவாய்ப் பதில்தருமாறு

        அளவை அறிந்து கற்க. 

  1. வாளொ(டு)என் வன்கண்ணர் அல்லார்க்கு? நூலொ(டு)என்

     நுண்அவை அஞ்சு பவர்க்கு?

        கோழையின் கைவாளாலும், அவைஅஞ்சுவான்

        கற்ற நூலாலும் பயன்என்.?

  1. பகைஅகத்துப் பேடிகை ஒள்வாள், அவைஅகத்(து)

     அஞ்சும் அவன்கற்ற நூல்.

         அவையில் பேசுதற்கு அஞ்சுவான்

         கற்றநூல், பேடியின் கைவாள்போல்.

  1. பல்அவை கற்றும் பயம்இலரே, நல்அவையுள்

     நன்கு செலச்சொல்லா தார்.             

        பல்அவைகளை ஆய்ந்தும், நல்அவையில்

        பதியச் சொல்லார், பயன்இல்லார்.

  1. கல்லா தவரின் கடைஎன்ப, கற்(று)அறிந்தும்,

     நல்லார் அவைஅஞ்சு வார்.

    கற்றுஅறிந்தும், நல்அவையில் சொல்ல

        அஞ்சுவார், கல்லாரினும் கீழ்ஆவார்.

  1. உளர்எனினும் இல்லாரோ(டு) ஒப்பர், களன்அஞ்சிக்

     கற்ற செலச்சொல்லா தார்.

        கற்றதை மனம்பதியச் சொல்லாதார்.

        கற்றாரே என்றாலும் கல்லாரே

பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 074. நாடு)