(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 35 தொடர்ச்சி)

‘பழந்தமிழ்’  36

8. பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்- தொடர்ச்சி

  இன்றுள்ள இந்திய மொழிகளுள் ஆரியம் ஒழிந்த பிறவெல்லாம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே இலக்கியங்களைப் பெற்றுள்ளன.

  வட இந்திய மொழிகள் எனப்படுவன அசாம் மொழி, வங்காள மொழி, குசராத்தி மொழி, காசுமீரி மொழி, இந்தி மொழி, மராத்தி மொழி, ஒரியா மொழி, பஞ்சாபி மொழி, உருது மொழி என ஒன்பதாம்.

  அசாம் மொழியில் இலக்கியம் என்று கூறத்தக்கதாய்த் தோன்றியது கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான்.

  வங்காள மொழி இருபதாம் நூற்றாண்டில் சிறந்த முறையில் பல்வகைப் பகுதிகளிலும் வளர்ச்சியுற்றிருந்த போதிலும், நமக்கு இன்று கிடைத்துள்ள முதல் கையெழுத்தேடு கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும்.

 குசராத்தி மொழி தன் மூலமொழியான அபப்பிரம்ச மொழியின் தொடர்பற்றுத் தனிமொழியாக உருவெடுத்தது கி.பி. பதினோராம் நூற்றாண்டில்தான், அது உரையிலும் பாட்டிலும் இலக்கிய வளம்பெறத் தொடங்கியது கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான்.

  காசுமீரி மொழியில் இயற்றப்பட்டுள்ள பழைய இலக்கியம் சதிகந்தாவின் (Shati Kantha)  மகா நியாய பிரகாசு ஆகும். இதன் காலம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு ஆகும்.

  இன்று இந்தியாவின் முழுப் பகுதிக்கும் பொது மொழியாக விளங்க உருவாக்கப்பட்டு வரும் இந்தி மொழியில் இலக்கியம் தோன்றியது கி.பி. பத்தாம் நூற்றாண்டில்தான்.

  மராத்தி மொழியின் முதல் பாட்டு இயற்றப்பட்ட காலம் கி.பி. 1188 ஆகும்.

 ஒரியா மொழியின் முதற்புலவர் வாழ்ந்த காலம் கி.பி. பதினான்காம் நூற்றாண்டு ஆகும்.

 கலப்புப் பாலிமொழியில் எழுதப்பட்டுள்ளதை ஒரியா மொழிக்குரியதாகும் என்று கூறுவர் சிலர். அங்ஙனம் அதனை ஏற்றுக் கொள்வதாயின் ஒரியா மொழியின் தோற்றக் காலம் கி.பி.எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும்.

 பஞ்சாபி மொழி என்பது வேதப் பிராகிருதம் வேத அபப்பிரம்சமாக மாற்றப்பட்டதாகும். பஞ்சாபி மொழியின் இலக்கியத் தோற்றம் கி.பி. எட்டு, ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்ததாகும்.

 உருது மொழி, சூரசேனி பிராகிருதத்திலிருந்து உருவெடுத்தது. முசுலீம் ஆட்சிக்குப் பிறகு பஞ்சாபில் வழங்கிய கிளை மொழிகளின் சொற்களோடு இந்திய மொழியல்லாத மொழியின் ஒலிப்பகுதிகளும் சேர்ந்து உருது பிறந்ததாகும். பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கடைசியில் பாபா பரிதின் பாடல்களும் அமீர் குசுருவின் பாடல்களும் நமக்குக் கிடைத்தன. உருதுவின் இடையீடு அற்ற இலக்கிய வரலாறு கி.பி. 1420-இலிருந்தே தொடங்குகின்றது.

 தென்னிந்திய மொழிகள் எனப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் தமிழோடு தாம் கொண்டுள்ள நெருங்கிய உறவை இன்னும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவை தமிழிலிருந்து விலகி ஆரியத்தோடு தொடர்பு கொண்டு தனி மொழிகள் ஆகிவிட்டன. அவ்வாறு ஆன பிறகு அவற்றில் இலக்கியம் தோன்றிய காலம் வடஇந்திய மொழிகளின் இலக்கியக் காலத்தையே ஒட்டியுள்ளது. தெலுங்கு மொழியில் உண்டான முதல் இலக்கியம் தோன்றியது கி.பி. பதினோராம் நூற்றாண்டில்தான். அது நன்னய்யாவால் இயற்றப்பட்ட மகாபாரதம் ஆகும்.

  கன்னட மொழியில் நமக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கியம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் இயற்றப்பட்ட கவிராச மார்க்கமாகும். அது அணிவகையைப்பற்றிய நூலாகும்.

 மலையாள மொழியில் கிடைத்துள்ள பழமையான இலக்கியங்கள் உன்யாடிச் சரிதம், உன்னியாச்சிச் சரிதம் என்பன என்பர். இவற்றின் காலம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியாகும். மலையாளம் தமிழின் கிளைமொழி (Dialect) என்று சொல்லத் தகுந்த வகையில் இன்றும் அமைந்துள்ளது.

  இந்திய மொழிகள் அனைத்திலும் தமிழும் ஆரியமும்தான் மிகப் பழமையான எழுத்துச் சான்றுகளாம் இலக்கியங்களைப் பெற்றுள்ளன. இரண்டும் சேர்ந்த கலப்பின் பயனே ஏனைய இந்திய மொழிகள்.

  இன்று இந்திய அரசு, பதினான்கு மொழிகளையும் இந்திய அரசு மொழிகள் என ஏற்றுக்கொண்டிருந்த போதிலும், இந்தி மொழி ஒன்றையே இந்திய அரசின் அலுவல் மொழியாகவும், இந்தியத் தேசிய மொழியாகவும் மேற்கொண்டு விளம்பரப்படுத்தி வருகின்றது; அதற்குத் தனிச் சலுகையும் காட்டி வருகின்றது; அதனை அனைத்திந்திய மக்களும் கற்பதற்குத் தன்னாலியன்றதை யெல்லாம் செய்து வருகின்றது. பரந்துபட்ட பெருங்கண்டம் என்ற இந்தியப் பெருநாட்டின் அனைத்து மொழிகட்கும் தேசிய மொழிகள் எனும் நிலையை அளித்துப் போற்றுவதுதான் முறையும் நேர்மையுமாகும். இயலாது என்றால் தமிழுக்கும் ஆரியத்திற்கும் அந் நிலையை  அளித்தல் வேண்டும். இரண்டுமே தொன்மையான மொழிகள்; இலக்கிய வளம் நிறைந்தன. இந்திய மொழிகளின் அன்னைகள்; இந்திய மொழிகளின் பழமையான எழுத்துச் சான்றுகள் அறிவிப்பன, இவை இரண்டின் ஏற்றமே. இந்திமொழி ஆரியத்தின் சிதைவு மொழியே யாகும். சிதைவு மொழியைக் கற்பதினும் அதன் அன்னையாம் மூலமொழியைக் கற்பது மேலன்றோ?

 தமிழ்மொழி இந்நாட்டில் முதல் மொழி; அடிப்படை அமைப்பைத் தந்துள்ள மொழி; ஆரியம் வருமுன் வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாது உருகெழு குமரியின் தெற்கும் உட்பட்ட நிலப்பரப்பில் வழங்கிய தொன்மொழி; இந்திய மொழிகளின் தாய் என்று சொல்வதற்குரிய உரிமையும் தகுதியும் உடைய மொழி. ஆதலின் தமிழும் இந்திய அரசின் முதன்மை மொழியாக, அலுவல் மொழியாக, தேசிய மொழியாக ஆக்கப்படல் வேண்டும்.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்