அகரப் பாடல் – சந்தர் சுப்பிரமணியன்

அகரப் பாடல்   அறிவைத் தீட்டு ஆணவம் ஓட்டு இறையைப் போற்று ஈகை ஆற்று உறவோடு இணை ஊக்கம் துணை எளிமை நாடு ஏழைமை கேடு ஐந்தின் பயன்காண் ஒன்றிப் பிழை ஓயாது உழை ஔவெனப் பழகு அஃதுடற்கு அழகு    – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் :  பக்கம் 32

நன்றி நவிலல் – ஆத்மாநாம்

நன்றி நவிலல் இந்தச் செருப்பைப் போல் எத்தனைப் பேர் தேய்கிறார்களோ! இந்தக் கைக்குட்டையைப் போல் எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ! இந்தச் சட்டையைப் போல் எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ! அவர்கள் சார்பில் உங்களுக்கு நன்றி இத்துடனாவது விட்டதற்கு!   கவிஞர் ஆத்துமாநாம் ஆத்மாநாம் படைப்புகள்

தமிழாமோ? – மீரா

தமிழாமோ? திங்கள்முக மங்கைவிரல் தீண்டித்தரும் இனிமை தெங்கின்குலை இளநீர்ச்சுவை தேக்கித்தரும் இனிமை செங்கள்தரும் இனிமை நறுந் தேமாதரும் இனிமை எங்கள் தமி ழினிமைக்கொரு இணையாய்வரு மாமோ?   கடலில் விளை முத்தும்நிலக் கருவில்விளை பொன்னும் தொடவும் முடி யாமல்முகில் தொட்டேவிளை சாந்தும் தொடரும்மலைக் கூட்டம்விளை தூய்மைநிறை மணியும் சுடரும்தமி ழுயர்வுக்கிணை சொல்லத்தகு மாமோ?   குயிலின்மொழி குழலின்மொழி குழந்தைமொழி கட்டில் துயிலும்பொழு திசைக்கும் இளந் தோகைமொழி கேட்டுப் பயிலும் ஒரு கிளியின் மொழி பண்யாழ்மொழி எல்லாம் உயிரில்எம துளத்தில் உரம் ஊட்டும்தமி ழாமோ? கவிஞர்…

பாடுவேன், ஊதுவேன்! – அழ.வள்ளியப்பா

பாடுவேன், ஊதுவேன்!   பாட்டுப் பாடுவேன்-நான் பாட்டுப் பாடுவேன். பலரும் புகழ, இனிய தமிழில் பாட்டுப் பாடுவேன். கேட்டு மகிழவே-நீங்கள் கேட்டு மகிழவே, கிளியின் மொழிபோல் இனிய தமிழில் கீதம் பாடுவேன்-நான் கீதம் பாடுவேன்.   குழலை ஊதுவேன்-புல்லாங் குழலை ஊதுவேன். கோகு லத்துக் கண்ணன் போலக் குழலை ஊதுவேன்-நான் குழலை ஊதுவேன். அழகாய் ஊதுவேன்-மிக்க அழகாய் ஊதுவேன். அனைவர் மனமும் மகிழும் வகையில் அழகாய் ஊதுவேன்-நான் அழகாய் ஊதுவேன்.   குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா : சிரிக்கும் பூக்கள்

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 27 & 28

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 25 & 26 தொடர்ச்சி)    திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 27 & 28   இருபத்தேழாம் பாசுரம் தமிழரை ஒன்றுபடுத்த வணங்கவேண்டும்! ஏடி, தமிழினத்தை ஏந்தவந்த பெண்கிளியே! நாடிநம் மக்களின் இற்றைநிலை கேளாயோ ! கூடி முழங்கிவிட்டு ஊன்கழிந் தோய்ந்திடுவார் ! பாடு படுவார்; பிறவினத்தார் தாள்பணிவார் ! மூட வழியேற்றே முன்னேற்ற வாழ்விழப்பார் ! பீடுநிறை தங்குலத்துப் பேர்புகழைத் தாம்காவார்! சாடா தவர்நெஞ்சத் தாள்திறந்தே, தம்முள்ளே கூடிப் பணியாற்றக் கும்பிடவா , எம்பாவாய் !  …

சுந்தரச் சிலேடைகள் 7 – ஆசானும் நன்னீரும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 7 ஆசானும் நன்னீரும் தாகத்தைத் தீர்க்கும், தடுமாற்றம் போக்கிடும், பாகத்தான் மேலே பரந்தோடும்.-பாகாக்கும் தெள்ளிய தூய்மைக்கும்,தேயமுய்யும் ஓங்கலுக்கும் , பள்ளியனும் நன்னீரும் ஒன்று. பொருள்: ஆசிரியர்: 1)மாணவர்களின் கல்வித் தாகத்தைத் தீர்ப்பார். 2)மாணவர்தம் அறியாமையால் ஏற்படும் தடுமாற்றம்  தீர்க்கப்படுகிறது. 3)ஈசனும் ஆசானே.அவன் உடல் உள்ளத்தின் மேல் கல்வி பரந்தோடுகிறது. 4)ஆசிரியர்  ஒவ்வொருவரையும் பாகாக்கும் வல்லமை உடையவர் இனிமையான பேச்சைக் கொண்டவராக்கும் திறமை பெற்றவர்.அருந்தமிழ்ப் பாக்களைக் காக்கும் பண்புள்ளவராகவும் உள்ளார். 5) ஆசிரியர் தீயன களைந்து மாணவர்களைத் தூய்மையாக்குகிறார் 6)உலகம்…

தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 2/2 : இரா.பி.சேது(ப்பிள்ளை)

[தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 – இரா.பி.சேது(ப்பிள்ளை)(தொடர்ச்சி] தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 2/2   இன்னும்,  இந்  நாட்டைத்  தந்தை நாடென்று   கருதும்   பொழுது,  அத்  தந்தையின் மக்களாய்ப் பிறந்த நமது   உரிமை,   மனத்தில்  முனைந்து தோன்றுவதாகும். இவ்வுரிமைக் கருத்து   உள்ளத்தைக்   கவரும்பொழுது  வீரம் கிளம்புகின்றது. தாயை அன்பின்   உருவமாகவும்,  தந்தையை  வீரத்தின் வடிவமாகவும் கருதிப் போற்றுதல்  தமிழ்  வழக்காகும்.  அந்த முறையில் தமிழ்நாட்டைத் தாய் நாடு  என்று   நினைக்கும்   பொழுது  அன்பினால் இன்பம்  பிறக்கும்; தந்தை நாடு  …

தமிழ்த்தாய் வணக்கம் 11- 15 : நாரா. நாச்சியப்பன்

(தமிழ்த்தாய் வணக்கம் 6-10 தொடர்ச்சி)   தமிழ்த்தாய் வணக்கம் 11-  15   நல்ல தமிழிங்கு நாடாள வேண்டுமென்றால் புல்லர் தலையெடுத்துப் பொங்குகின்றார்-வல்ல தமிழ்த்தாயே உன்மக்கள் தாமாய்க் குழியில் அமிழுந் துயரை அகற்று.   (11)   பொய்யும் புரட்டும் புதுவாழ்வு சேர்க்குமென நையும் தமிழர் நலங்காண-மெய்யறிவைத் தந்துகாப் பாற்றத் தமிழே அருள்பொழியச் சிந்தை செலுத்து சிறிது.  (12)   அன்பு மொழியாலே நெஞ்சை அணைக்கின்ற இன்பத் தமிழே எழில்வடிவே-உன்புகழைப் பாடுகின்ற போதெல்லாம் பாய்கின்ற இன்பத்தால் ஆடுகின்ற தென்றன் அகம். (13)   தென்னகத்தைச் சேர்ந்திருக்கும்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங)   இவ்வாறு சென்னையில் வேலைவாய்ப்பு முயற்சிகளினால் அலைந்து கொண்டிருந்த பேராசிரியர், கலைத்தந்தை கருமுத்து தியாகராச(ச்செட்டியா)ர் தம்மைச் சந்திக்க விரும்புவதாக அறிந்து மதுரை சென்றார்; தமிழ்ப் புலமையும் தமிழ்உணர்வும் மிக்க கலைத்தந்தை பேராசிரியர் சி.இலக்குவனாரைத் தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவராக நியமித்தார். அப்பொழுது முதல்வர் பணியிடமும் ஒழிவாகத்தான் இருந்தது.  அதற்கு ஆங்கிலத்துறையைச் சேர்ந்த திரு. வரதாச்சாரி என்பவரை நியமித்தார். துணை முதல்வராகவும் முதல்வராகவும் பணியாற்றி உள்ள தகுதி மிக்கப் பேராசிரியரையே அவர் முதல்வராக அமர்த்தி…

இந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை! அஃதை ஏற்பது நம் மடமை! – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை! அஃதை ஏற்பது நம் மடமை!   “மெல்ல மெல்லப் படரும் நோய்போல இந்தி எல்லாச் சந்துபொந்துகளிலும் நுழைகிறது; குழைகிறது; நமது தன்மானம் பறிபோகிறது” எனப் பேரறிஞர் அண்ணா அன்றே  எச்சரித்துள்ளார்.  இன்று, இந்தி எல்லா இடங்களிலும் ஆழமாக வேரூன்றிக் கிளை பரப்பிக் கொண்டுள்ளது; அதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் “எல்லைக்கற்களில் இந்தி” என ஆர்ப்பாட்டம் செய்து என்ன பயன்?  வஞ்சகமாய் வெல்வதுதான் ஆரியத்தின் வழக்கம். அதுபோல்தான் இந்தியும் பொய்யான தகவல்கள் மூலமும் முறையற்ற செயல்கள் மூலமும் மத்திய அரசின் அலுவல்மொழியாக மாறியுள்ளது….

திருப்புமுனைத் தேர்தலில் தி.து.வி.தினகரனுக்கு வாழ்த்து! – இலக்குவனார் திருவள்ளுவன்

திருப்புமுனைத் தேர்தலில் தி.து.வி.தினகரனுக்கு வாழ்த்து!     சென்னை, இராதா கிருட்டிணன் நகர் இடைத்தேர்தல், போட்டியிடும் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்கும் மத்திய ஆளுமைக்கும் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியது.   தேர்தல் என்றாலே ஒவ்வொருவரின் வெற்றி, தோல்வியை முடிவு கட்டுவதாக அமையும். ஆனால், இந்த இடைத்தேர்தல் போட்டியிடும் சில கட்சிகளின் வாழ்வா தாழ்வா என்பதையும் முடிவுகட்டக்கூடியதாக உள்ளது. எனவே, தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதிக்கத் துடிக்கும், முறைமுக ஆட்சியையாவது திணிக்க நினைக்கும் பா.ச.க.விற்கும் இதன்முடிவு இன்றியமையாததாகிறது.    இத்தொகுதியில் அதிமுக பல முறை வென்றிருந்தாலும் அக்கட்சிக்கான தொகுதியாகக் கூற…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙோ) தொடர்ச்சி]   தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ)   இந்தச் சூழலில் பேராசிரியர் இலக்குவனாருக்கு நாகர்கோயிலில் உள்ள தென்திருவிதாங்கூர்  இந்துக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர் பணி கிடைத்ததால் அங்கே சென்று தம் தொண்டுகளைத் தொடர்ந்தார். முதலில் தமிழ் முதுகலை தொடங்குவதற்குரிய ஏற்பிசைவைப் பெற்றுத் தொடங்கச் செய்தார். முதல்வராக இருந்த முனைவர் பா.நடராசன் மத்திய அரசின் பொருளியல் வல்லுநராகச் சென்றமையால் முதல்வர் பணியிடம் ஒழிவிடமாயிற்று. மூத்த பேராசிரியரான பேராசிரியர் இலக்குவனாருக்கு வரவேண்டிய முதல்வர் பதவியை வேறு சாதியினர் என்பதால் வழங்க மனமின்றி…