(புதிய புரட்சிக்கவி- களம் : 1   காட்சி : 3 – தொடர்ச்சி)

புதிய புரட்சிக்கவி களம் : 1   காட்சி : 4

முச்சந்தியில் மோனைப் புலவன் நிற்க ; இளவரசியின் தோழி அல்லி வருகிறாள்

அகவல்

மோனை:   பாளைச் சிரிப்பிலே பாவிஎன் ஆவியைப்

          பதைக்க வதைக்கும் பாவாய் அல்லி

          பாதையில் மேதிபோல் பாவியேன் நிற்கவும்

          பார்த்தும் பாராது பால்முகம் திருப்பிப்

          பதைப்புடன் எங்கே பாய்கிறாய்? நின்று

          முத்து  விளையாட் டொன்றுஎன் முகத்தில்

          மெத்தென் றாடினால் மேனியா     குறையும்?

அல்லி:        மொத்துவேன் முகத்தில் மூக்கிரண் டாகும்

          கொத்துங் கழுகிற்குக் கொள்ளை விருந்தாவாய்

          நாளை       வருகிற      நற்றமிழ்ப் புலவன்

          சேலை   நிகர்க்கும் செவ்வரிக் கண்ணாள்

          நாட்டின் இளவரசி நங்கை யவட்குச்

          செந்தமிழ் யாப்பைச் செப்பிடத் தோதாய்

          செங்கோல் வேந்தன் செப்பிய பாங்கில்

          சோலை மேடை சொகுசா யமைத்திட

          ஆவன    கொணர அங்காடி செல்கிறேன்

மோனை:   நற்றமிழ்க் கவிஞன் நானிங் கிருக்க

          நங்காய் மற்றவன் நானிலம் எங்குளான்?

அல்லி:        அரசிளங் குமரி அமுதவல் லிக்குப்

          பாப்புனை கின்ற யாப்பிலக் கணத்தைக்

          காப்புடன் சொல்லக் கவிஞன் உதாரன்

          நாளை       வருவான் நானும் செல்கிறேன்

          வேளை      தவறின் விளைவும் அதுவாகும்

மோனை:   அரசன்  மகளுக்கு அமுதத் தமிழின்

          அரிய யாப்புரைக்க அடியேனை விடுத்தே

          உளறுவாய் உதாரனை  ஒப்புதல் நன்றோ

          அன்னமே அணங்கே அத்தை மகளே

          அடியேன் தமிழை ஆய்ந்தவன் யார்க்கும்

          அணுவின் அளவும் அய்யம் அகற்றி

          அகத்தில் அமைவுற அறைகுவன் அன்றோ

அல்லி:        தண்டச் சோற்றுத் தடிராம னாகியே

          காணும் பெண்ணிடம் கவிதை பேசியே

          துண்டுபட்ட பல்லியின்    வாலாய்த் துடிக்கிறாய்

          உண்ணுஞ் சோற்றுக்   குண்டோ ஒருபயன்

          உவப்புடன் இலக்கணம்   உணர்த்துங் கவிஞன்

          அவப்பெய ரின்றியே அருந்தமிழ் பயிற்றிட

          அரிய  திட்டம்   அமைச்சர் வகுத்துளார்

          பாவைக்கு இலக்கணம்   பயிற்ற       விடுத்தால்

          உன்மத்தங் கொண்டுநீ    உளறுஞ் சொற்களால்

          கற்ற கல்வியும்   கன்னியாள் மறப்பாள்

மோனை:   அணங்கே அல்லியே அமைச்சர் அளித்துள

          அரிய திட்டமென் அறைகுவாய்  நொடியில்

அல்லி:        நொடியில் உரைத்தால்  நொடியில் என்னுயிர்

          மறுபடி  வாரா  மறுவுல கேகுமே

          உரியைச் சுற்றும் பூனையாய் என்னை

          நாளும் சுற்றும்    உனக்கொரு பெண்ணாள்

          உண்டோ உலகில் உளறுவாய்ப்    புலவனே?

மோனை:   அய்யகோ அன்பே அவனியில் நீயலால்

          அடியேன் என்பால் அன்புசெய  யாருளார்

          மெய்யாய் இதனை மெனக்கெட்டுச் சென்றே

          உரையேன் எவர்க்கும் உன்னிதழ் என்செவி

          அழுந்தப் புதைத்தே அறைகுவை யாயின்

          அதுதான் பிறர்செவி அடைதல்  எப்படி?

          முழுதாய் முத்தம் தருகுவன் யானே

அல்லி:        நானொரு மொத்து நல்குவன் உனக்கே

          அமைச்சர் மூலம் அருஞ்சிறை தள்ளுவேன்

மோனை:   காதற்  சிறையில் கண்ணேநீ யடைத்தால்

          காவலன் நானாக கடுஞ்சிறை யாளுவேன்

          நாளைநாம் சந்திக்க நவில்வாய் ஓரிடம்

          நவிலா    யாயின் நகரேன் ஆணை

அல்லி:        நாளை  யிரவுநளிர் வேங்கை யடியில்

          காளைநீ காத்திரு கன்னிநான் வருவேன்

          வேளை      தவறுமிவ் வேளை விட்டுவிடு

மோனை:   நன்று  நங்காய் நடநம்   காதல்

          நாளை   தொடர நான்வழி விட்டேன்

(தொடரும்)

புலவர் சா.பன்னீர்செல்வம்

புதிய புரட்சிக்கவி